ஒரு துயரம்
நம் வீட்டுப் படியேறும்போது
என்ன செய்வது?
வாசலிலேயே ஆள்நிறுத்தி
வீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்
ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்
ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்
‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்
வந்ததும் சொல்லிவிடுகிறேன்’
என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம்
கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்
இந்தப் பூஞ்சை உடல்- இனியும்
துயரம் தாங்காதென மருத்துவரளித்த
பரிந்துரைச் சீட்டை நீட்டலாம்
நமது டூப்பை முன்னே அனுப்பி
ஏமாறுகிறதாவென சோதிக்கலாம்
அடையாளம் தெரியாதபடிக்கு
மரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்
அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்
சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்
உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்ன
எனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம்
விலாசம் மாறிவந்துவிட்டாயென
பக்கத்துத் தெருவுக்கு ஆற்றுப்படுத்தலாம்
காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லி
அப்புறப்படுத்தப் பார்க்கலாம்
ஒரு கரன்ஸி நோட்டை பையில்
திணித்து ஆழம் பார்க்கலாம்
இத்தனைக்கும் சளைக்காத
துயரத்தை என்ன செய்வது?
நேராக வீட்டுக்குள் நுழைய என்ன தயக்கம் என
செல்லமாகக் கடிந்தபடியே
சூடாறாத ஒரு கோப்பைத் தேநீரை
நீட்டியபடியே வரவேற்கவேண்டியதுதான்!