5
இரவெல்லாம்
ஊர்சுற்றிவிட்டு
வீடு திரும்பியிருக்கிறது பூனை
இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால்
எங்கே போனாய் என்ற கேள்விக்கு
பூனை சொன்ன மியாவை
மொழிபெயர்த்துவிடலாம்!
6
தன் வீட்டு வாசலோரத்தை
இந்த கூறுகெட்ட பூனை
பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக
அலுத்துக்கொள்கிறார் அவர்
ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு
பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று
அவர் கையில் வைத்திருக்கும்
பிரம்பைப் பார்த்த தினம்
சிறுநீர்கூட வரவில்லை எனக்கு
இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற
பாடத்திலிருந்து லாவகமாக பூனை நழுவியதை
கண்ணாரக் கண்டேன்
இந்த பரந்த உலகத்தில் இடமாயில்லை
கழிப்பதிலென்ன உனக்கு
இத்தனை சாகசம்வேண்டியிருக்கிறது முரட்டுப் பூனையே
7
தெருப்பூனைகளுக்கு பெயரிட்டு மகிழ்கிறாள்
மதிவதனி
அவளுடைய பெயர்சூட்டும் படலத்தில்
பூனைகளுக்கு மகிழ்ச்சியோ வருத்தமோ
இல்லாதபோதும்
அவளிடும் பெயர்களுக்கு அற்புத சக்தியிருப்பதாகவும்
அவள் பெயரிட்ட பிறகுதான்
ஒரு பெட்டைக்குட்டி கடுவனாக பால்மாறிப்போனது என்றும்
உவகை மீதூற சொல்லித்திரிகிறார் அவளது தாத்தா
8
இருப்பதிலேயே ஆகச்சிறிய மீனொன்றைக்
கையில் பிடித்தபடி செல்லுங்கள்
உங்கள் தெருவிலிருக்கும்
அத்தனை பூனையின் முகத்தையும் பார்த்துவிடலாம்
9
தயிர் சாதத்துக்கு
துண்டுக் கருவாட்டைத் தராத கடவுளை
ஜெபித்தாலென்ன… சபித்தாலென்ன…
அரைக்கண் மூடி தியானத்திலாழ்ந்து
மீண்டுவந்த பூனை
சலித்துக்கொள்கிறது