ஆம், இன்று துயரத்தின் நாள்
கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்
இதயமோ அதன்முன் மண்டியிட்டு
வைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளை
கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது
சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்
மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்
கால்கள் பின்னும் போதையிலும்
அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை
துயரத்தின் அருங்காட்சியகத்துக்கு
எவ்வளவு தூரமெனக் கேட்டேன்
உன் கருவறை வாசலுக்கும்
கல்லறைச் சுவருக்குமான தூரமென
அசரீரி எழுகிறது
யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம்
மிச்சமின்றி அப்படியே
இதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன்
அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்
காட்டித்தராமல் போயிருந்தால்
கடைசிவரை துயரத்துக்கு
என்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும்
நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது துயரம்
புழுதியகல அதன் பாதங்களை அலசிவிட்டேன்
என் ஆடைகளில் சிறந்ததை அணியத் தந்தேன்
என் கஞ்சியில் பாதியை பகிர்ந்துகொண்டேன்
என் பாயையும் அதற்கு விரித்தபோது
எத்தனை நல்லவன் நீ… உன்னைப் போய்…. என
கண்கள் கசிய துயரத்திலாழ்ந்தது
ஒரு முறை உயிர்த்தெழுந்ததற்கே
தேவகுமாரனென்கிறோம்
மீள மீள உயிர்த்தெழும் துயரத்தை
என்ன பெயரில் அழைப்பது?
முகம்பொத்தி அழுதுகொண்டிருக்கிறது துயரம்
பாவம் சித்திரக்காரர்
எப்படி தீட்டப்போகிறார் முகத்தை?
எப்போதும் ஆட்கொண்டருளுகிறாய்
சோதிக்கிறாய்
உன்னையே தியானிக்கவேண்டுமென வற்புறுத்துகிறாய்
துயரமே! கடவுளென்ற எண்ணமோ உனக்கு?
முற்றிலுமாக நிராகரித்துச் செல்கிறாள் காதலி
நானோ துயரத்தின் புதிய ரெசிபியை
ருசிபார்க்க அமர்கிறேன்
Tags
கவிதை