13
உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது
ஒரு பாலிதீன் உறை
கைவிடுங்கள் இப்பழக்கத்தை என
குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி
சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர்
குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில்
பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே
நடந்துகொண்டிருக்கிறார்கள்
14
உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி
உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை
வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால்
நீங்களிட்ட லட்சுமண ரேகை
சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன
உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப்
பொந்திடுவதோ ஆகப்பெரிய சிரமமாகிவிட்டது
குப்பைத் தொட்டியில்கூட
இரைபொறுக்க அனுமதிப்பதில்லை உம் வீடு
துளி உணவு கூடுதலாயிருந்தால்
இந்தக் குளிருக்கு செளகரியமாயிருக்குமென
வீட்டை காலிசெய்துகொண்டிருக்கின்றன எறும்புகள்
தர்மப் பிரபுவே…
உங்கள் களஞ்சியத்தில் எறும்புகளுக்கு
ஒருபிடி இல்லையென்பது அவமானமில்லையா?
15
முறையாக
முதலில் கதவைத்தான் தட்டியது
நீங்கள் திறக்காததால்தான்
ஜன்னலேறிக் குதித்து உங்கள்
முகத்தைத் தீண்டிக்கொண்டிருக்கிறது வெயில்
16
பனிநடுக்கும் இந்த நள்ளிரவில்
உங்களின் ரகசிய மறைப்பிடத்திலிருந்து
எடுக்கிறீர்கள் ஒரு புட்டி வெயிலை
தகித்துக்கொண்டிருக்கும்
பொன்மஞ்சள் வெம்மையை குவளையில் நிறைத்து
மிடறு மிடறாய் பயிரிடுகிறீர்கள் ரத்தவோட்டத்தில்
இப்போது குளிர் அஞ்சிநடுங்கிய நாயைப்போல
வாலை பிருஷ்டத்துக்குப் பின் சுருட்டிக்கொண்டு
உங்களுக்கு எதிரே குந்திக்கொண்டிருக்கிறது
உங்கள் அலைபேசியில் சலசலத்துப்
பெருகியோடும் பாடல்கேட்டு
மேகத்தை விலக்கிக்கொண்டு முகம்நீட்டும் நிலா
பொன்மஞ்சள் வெயிலில் விழுந்து மிதக்கத் தொடங்குகிறது
சுருளவிழும் விடியலில்
நிலவையும் வெயிலையும் ஒருசேர பருகியிருக்கக்கூடாதென…
தலையைப் பிடித்தபடி புலம்புகிறீர்கள்
இத்தனை நேரம்
வாலைச் சுருட்டியிருந்த நாயோ
தன் கூர்ப்பற்களைக் காட்டியபடி உறுமுகிறது
சொல்லாமல் கொள்ளாமல் விரைந்தோடும் நீங்கள்
பூட்டிய கதவுக்குப்பின்னும் ஒலிக்கும் அதன் குரைப்பொலியில்
நடுங்கிக்கொண்டிருக்கிறீர்கள்