இளைப்பாற வந்திருக்கிறது
ஒரு பறவை
பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய்
எதுவும் கேட்காமலே
விசிறவிடத் தொடங்குகிறது மரம்
கடந்துவந்த தொலைவை
பறவையின் முகத்தில் பார்த்து
தன் கிளைகளில் கனிந்திருக்கும்
பழங்களைப் பரிமாறுகிறது
பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட
வழியேதுமறியாத பறவை
தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது
கிளையிலிருந்து நழுவி தரைசேரும்
அந்த தூவியைத்தான்
நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்!
2
நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான்
பார்க்கிறீர்கள்
நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத
பலநூறு ராகங்களையும் சேர்த்தே பார்க்கிறேன்
3
வழக்கம்போல வந்திருக்கிறது பெளர்ணமி
சொட்டிப் பெருகும் அதன் பிரகாசம்
நகரைத் தொட்டுத் துலக்கிக்கொண்டிருக்கிறது
அதன் ஜொலிப்பையும் குளிர்ச்சியையும்
ஒரு தேக்கரண்டியாவது கவிதையில் கலந்துவிடத்தான்
வார்த்தைகளிடம் சமர்செய்துகொண்டிருக்கிறேன்.
4
முன்னும் பின்னுமில்லாமல்
முத்தங்கள் ஊறும் கேணியெனும்
மூன்று சொற்கள் தோன்றிவிட்டன
எப்படியும் கடுங்கோடையையும்
தாகத்தையும் இந்தக் கவிதைக்குள்
நுழைத்தாகவேண்டும்
பிறகு…
சாந்தமாக கேணிக்குள் இறங்கி
வேண்டியமட்டும் பருகிவிட்டுப் போகலாம்
அனுமதியின்றி உள்ளே நுழையாதீர்
தனியாருக்குப் பாத்தியப்பட்ட கேணி
என்ற வாசகத்தை நானெங்கும் பார்க்கவில்லை
நீங்கள் பார்த்தீர்கள்…?