மின்சாரமறுந்த இந்த இரவில்
பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகு
உன் மீதான என் பிரியத்தை
அதனிடம் பேசப் பேச
அதன் சுடர்க்கை திக்கித் திக்கி
வரைகிறதொரு சித்திரம்
வளையவரும் கொசுக்களோ
அவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…
என நம்பமுடியாமல்
என் காதோரம் ரீங்கரிக்கின்றன
நெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்று
இத்தனை காதலிருந்தால்
நேரில் சென்று அவளின்
இதயப் பள்ளத்தாக்கில் குதிக்கவேண்டும்
இல்லையேல் இப்படி
நெருப்புத் தழலில் பொசுங்கவேண்டும்
என்றபடி சுடருக்குள் பாய்கிறது
பெருமழை பொழிந்து
திணறடித்துக்கொண்டிருக்கிறது உன்னழகு
ஆயுள் காணாத அழகு வெள்ளம்
அடித்துப்போகிறது என்னிதயம்
உன் அழகின் ஆக்ரமிப்பில்
நிலைகுலைந்தவர்களும்
நினைவுறைந்தவர்களும்
மொழிதிகைத்தவர்களும்
நிவாரணம் கேட்டு வரிசையில் நின்றபோதுதான்
சேதத்தின் விஸ்தீரணம்
சற்றேனும் பிடிபட்டது எனக்கு
எல்லோரையும்போல்
உதடுபிரியாத புன்னகையையோ
பிரியமான ஒரு அழைப்பையோ
ஆறுதலானதொரு தீண்டுதலையோ வாங்கிக்கொண்டு
திரும்பிவிடக்கூடாதென அரற்றுகிறது மனது
காதலுக்குக் குறைவாய் எதையும் பெற்றுவிடக்கூடாதெனும்
உறுதியுடன் வரிசையில் முண்டியடிக்கிறேன்
மழையோ மீண்டும் வேகம்பிடிக்கிறது
அம்பும் இல்லை
வில்லும் இல்லை
விழிநாண் இழுத்து
வீழ்த்திவிட்டுப் போய்விட்டிருக்கிறாள்
குருதிபொங்கக் கிடக்கும்
என் இதயமோ…
அவளின் குறி தப்பாததை எண்ணி எண்ணி
குதூகலித்துக்கொண்டிருக்கிறது
உனது சிம்மாசனத்தை
எனது இதயத்தில் போடாதே என்கிறேன்
மெல்ல புன்முறுவலித்தபடி
அதில் சாய்ந்தமர்கிறாய்
உன் கோலுக்கு
பணியப் போவதில்லை என்கிறேன்
கண்ணைச் சிமிட்டியபடி
நிஜமாகவா என்கிறாய்
உன் முற்றுகைக்கு
அடங்கப் போவதில்லை என்கிறேன்
உதடுகளைச் சுழித்து
அலட்சியமாய் பார்க்கிறாய்
சரி, தொலையட்டும்
நீயே ஆண்டுகொள் இந்த இதயத்தை
மானியமாக
முத்தங்களை அனுப்பமட்டும்
மறந்துவிடாதே கொடுங்கோலி!