தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், வானளவுக்குப் புகை எழுப்பும் சூளை இல்லாமல், சித் தாள்கள் யாருமே இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
இந்தச் செங்கற்களைப் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கின்றனர். பாக்டீரியாவால் நோய் தான் வரும். செங்கல் வருமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. செங்கல்லுக்குத் தேவையான மணல், ஹைட் ரோஜெல் கலவையுடன் ஒரு வகை பாக்டீரியாவையும் கலக்கின்றனர். இதை ஒரு வார்ப்பில் போட்டுவிட்டால், பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன் – டை – ஆக்சைடு வாயுவை உட்கொண்டு, கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோஜெல்லையும் மணலையும் பிணைக்கிறது. இதனால் வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி செங்கல்லாக மாறுகிறது.
இந்த செய்முறையின் போது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய் கின்றன. மேலும் அவை கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவதால், வார்ப்பின் பாதி அளவு மணல்- ஹைட்ரோஜெல் கலவை இருந்தாலே கூட அதைப் பெருக்கி வார்ப்பு முழுவதையும் நிரப்பிவிடுகின்றன. பாதியாக உடைக்கப்பட்ட பாக்டீரியா செங்கல், மேலும் வளர்ந்து எட்டு முழுக்கற்களை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இன்னும் சோதனையில் இருக்கும் இந்த உயிரி தொழில்நுட்பம் கட்டுமானத் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.