குடிநீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது ஒன்றுதான் மனிதர்களுக்கு இருக்கிற கடைசி வழி என்று கருதப்படுகிறது.
இதுவரை கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.இந்நிலையில் பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எளிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
கார்பனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிராஃபீன் எனப்படும் மெல்லிய சல்லடையைப் பயன்படுத்தி கடல்நீரை சுத்தமான குடிநீராக மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
அறுகோண பக்கமுள்ள மெல்லிய ஆனால் எஃகை காட்டிலும் நூறு மடங்கு உறுதியான இந்த சல்லடை கடல்நீரில் உள்ள உப்பை சுத்தமாகப் பிரித்தெடுக்கிறது.எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் உலக மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.