ஒவ்வொருநாளும்…
முந்தைய இரவின் புறங்கண்டு
முகிழ்த்த சிவப்புப் புது உதயம்
இன்று –
உறங்கியவை யாவும் விழிப்புற்றன
இழந்தவை யாவும் பெற்றுக்கொண்டன
ஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின.
முந்தைய இரவின் முச்சந்திகளில்
முழங்கப்பட்ட முரண்பாடுகள்
முழுவதுமாய் முகமழிந்தன.
விரிந்து வியாபித்த
வெளிச்சப் பெருங்கடலில்
சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன.
சுற்றிலும் சூழ்ந்த
காற்றின் வயிற்றில்
சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது.
பிரச்‘சினை’க் கழுதைகளின்
பிதுரார்ஜித முதுகுகளில்
வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன.
நிச்சயமற்ற முடக்கங்களை
நிரந்தர அடக்கமாயெண்ணி
நொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர்.
நிழல் ஒற்றர்கள்
நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டு
சூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.
எதிர்த்து நிலைக்கும் வலிவின்றி
உதயப்போதின் பொலிவிழந்து
ஒளிரும்நேரம் மீளும்வரை
விழியில் மீண்டும் வைகறையை
பொருத்திப் போனது எதற்காக?
ஓ, ஓ, அது ஜெயிக்கப்படவில்லையாம்.
ஜெயிப்பதற்காகத்தான் போனதாம்.
துரத்தித் தோற்கடித்தாலும்
துவளாமல் மோதிவென்று
சூரியனை சுருட்டிவைத்தோர்
சுதந்திரப் பிரகடனம் செய்ய
இரவின் செயற்குழு தீர்மானஞ் செய்தது.