தொடங்கியது நிழல் நாடகம்!
வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.
ஏறக்குறைய ஐநூறில் இருந்து ஆயிரம் வரையிலான ஆண் பெண் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். பதினெட்டு மாதங்களில் வழுக்கியாறு கட்டுமான பணியில் பாதியளவை பாக்கியத்தமாளின் நேர்மையான பணியாளர்கள் நிறைவேற்றினர். பாக்கியத்தம்மாளின் முயற்சி ஒருபுறம் என்றால் மறுபுறத்தில் அவளது தம்பி குலதிலகன் பிரமாண்டமான நேமிநாதர் கோவில் கட்டும் திட்டத்தை முன்னெடுத்தான்.
பல ஊர்களில் இருந்து புரோகிதர்களையும் உள்ளூர் பூசாரிகளையும் அழைத்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தான்.
குலதிலகனை சுற்றி உள்ள அவனது மந்திரிகளும் இதர ஆலோசகர்களும் அவனது கோவில் ஆசையை மேலும் மேலும் தூண்டி கோவில்கட்டும் முயற்சிக்கு அத்திவாரம் இட்டனர். உரிய இடத்தை தெரிவு செய்து பெரியவரசுவையும் பேராட்டி அம்மாவையும் அழைத்து காட்டினான்.
அவர்களுக்கு உண்மையில் தற்போது இந்த கோவில் கட்டும் திட்டம் நல்லதல்ல என்றே தோன்றியது. ஏற்கனவே வழுக்கியாற்று குளம் கட்டும் பணியில் நாட்டில் உள்ள நல்ல பணியாளர்கள் எல்லாம் ஈடுபட்டு கொண்டிருகிறார்கள். இந்த முக்கியமான காலகட்டத்தில் கோவில் கட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்று கருதினார்கள். கோவில் கட்டுவதை தடுப்பது பாவம் என்ற பயம் காரணமாகவும் தமது மனதில் தோன்றிய உண்மையை கூற முடியாமல் எல்லாம் நேமிநாதர் அருள் என்று ஒப்புக்கு வாழ்த்தினர்.
தற்போது தம்பி குலதிலகனுக்கு ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டது. கடும் முயற்சி செய்து ஒரு சில நூறு பணியாளர்களை பெறமுடிந்தது. வழுக்கியாற்று குளம் கட்டும் பணியாளர்களை ஈர்த்து அக்காவின் கோபத்துக்கு ஆளாக அவன் அவ்வளவாக விரும்பவில்லை.
ஆனால் பாலவோரை நகரத்தின் வருமானத்தில் பாதியை கொடுப்பது அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.
பாக்கியத்தமாளிடம் மெதுவாக தனது உள்ளக்கிடக்கையை தெரிவித்தான். பாலவோரை நகரின் முழுவருமானமும் நேமிநாதர் கோவில் கட்டும் பணிக்கே போதாமல் இருக்கிறது என்று போலியாக ஒப்பாரி வைத்தான்.
தம்பி குலதிலகனின் உள்நோக்கத்தை அறிந்த பாக்கியத்தமாள் சிரித்துக்கொண்டே அதனால் என்ன வழுக்கியாற்று குளப்பணிக்கு உரிய நிதியை வேறு வழியில் தான் பெற முயற்சிப்பதாக கூறினாள். பாலவோரையின் வருமானத்தை முழுவதும் பயன்படுத்தி நேமிநாதரின் கோவில் திருப்பணியை செய்யுமாறு கூறினாள்.
ஒருகணம் குலதிலகனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. அக்கா பாக்கியத்தம்மாள் எப்படியும் தனது திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மாட்டாள் என்றே கருதி இருந்தான். அக்காவை எதிர்க்கவும் துணிந்தவனுக்கு அக்காவின் பாசமிகு சொற்கள் கொஞ்சம் சஞ்சலத்தை தந்தது. தான் செய்வது சரியல்ல என்று அவனுக்கு புரிந்தது. இருந்தாலும் கொண்ட குணம் கொஞ்சம் கூட மாறாமல் இருந்ததால் அவனுக்குள் தோன்றிய அந்த சிறு சஞ்சலம் வெறும் சுடலை ஞானம் போல சில கணங்களில் மறைந்து விட்டிருந்தது.
தம்பி குலதிலகன் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியையும் பாக்கியத்தமாள் முன்கூட்டியே ஊகித்திருந்தாள். இனி குலதிலகனால் வழுக்கியாறு கட்டுமான பணிகளுக்கு பெரும் இடுக்கண் வரபோகிறது என்று எண்ணினாள். முதலில் வரவேண்டிய நிதியை முடக்கிவிட்டான். அடுத்ததாக பணியாளர்களை இழுத்து வழுக்கியாற்று திட்டத்தை முடக்கும் செயலிலும் அவன் ஈடுபட போகிறான் என்பதை அவளின் மனம் எதிர்கூறிற்று.
வழுக்கியாற்று குளத்து கட்டுமான பணிக்கு எல்லா சாதியையும் சேர்ந்த பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டு உள்ளார்கள். அதிலும் பெரும் பகுதியினர் சமுகத்தின் அடிமட்ட சாதியினர்களே.
கோவில் கட்டுமான பணிக்கு கொஞ்சம் மேல்சாதி பணியாளர்களே அனுமதிக்க படுவார்கள். அவர்களின் தொகை மிகவும் குறைவு. அதிலும் அவர்களில் பெரும்பாலோர் கட்டுமான பணிகளில் சிற்ப நுட்ப அனுபவம் பாத்தியதை உள்ளவர்கள். இந்த சிற்ப நுட்ப வல்லுனர்களை தம்பி குலதிலகன் தனது கோவில் கட்டுமான பணிகளுக்கு இழுக்க சூழ்ச்சிகள் செய்யப்போகிறான். இதை எப்படி முறியடிக்க முடியும் என்று பாக்கியத்தம்மாள் பலவாறாக சிந்திக்கலானாள்.
தம்பி மீது கொண்ட பாசம் ஒருபுறமும் தனது வரலாற்று கடமை மறு புறமுமாக பாக்கியத்தமாள் மிகுந்த வேதனைகளை சுமந்தாள். அளவுக்கு அதிகமாக சீராட்டி பாராட்டி வளர்த்து குலதிலகனை ஒரு தான்தோன்றியாக உருவாக்கி விட்டோம் என்று முதல் தடவையாக எண்ணி மனம் வருந்தினாள். எவரது அறிவுரைக்கும் செவி சாய்க்காதவன் ஆகிவிட்டானே.. இனி என்னதான் செய்யமுடியும்? அவனை ஒரு எதிரி போல அல்லவா எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. தன் விதியை நோவதை தவிர வேறு வழியொன்றும் இருக்கவில்லை.
வழுக்கியாற்று குளம் கட்டுவதை தடுப்பதற்காகவே தம்பி குலதிலகன் நேமிநாதர் கோவில் திருப்பணியை ஆரம்பித்து உள்ளான். இந்த உண்மை கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியத்தமாளுக்கு உறைக்க தொடங்கியது.
கோவில் கட்டுமானத்துக்கு போதிய பணியாளர்கள் தேவைப்படுமே எங்கிருந்து பெறப்போகிறான்?
ஒருவேளை தனது பணியாளர்களை அதிக நிதி தருவதாக ஏதாவது ஆசை வார்த்தைகள் கூறி இழுக்க போகிறானோஞ் தம்பியின் குணாதிசயங்களை அவள் நன்றாகவே அறிவாள். தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் யார் காலிலும் விழுந்து எதையாவது கூறி விரும்பியதை அடைந்தே தீருவான்.
அங்கு இங்கு எங்கு என சுற்றி இறுதியில் தனது பணியாளர்கள் மீதுதான் கண் வைப்பான் என்ற முடிவுக்கே பாக்கியத்தமாளால் வரமுடிந்தது.
இனி தாமதிக்க முடியாது. தம்பியின் பசப்பு வார்த்தைகளோ அல்லது வேறு நரிதந்திரங்களோ தனது பணியாளர்களை அணுகுவதற்குள், முதலில் தான் முந்த வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
பாலாவோரை புதிய அரசனாகிவிட்ட தம்பி குலதிலகனுக்கு கூடா நட்புகள் ஏராளம் உண்டு. அவர்களின் கபட நோக்கங்களை அறியக்கூடிய ஆழ்ந்த அறிவு அவனிடம் இல்லை. கோவில் கட்டுமான ஆலோசனைகளை பற்றி அவனுக்கு ஆலோசனை கூறுபவர்கள் எல்லோருமே குலதிலகனின் மனம் எதை விரும்புகிறதோ அதையே தங்கள் ஆலோசனைகளாக வழங்கினர். அவர்களின் ஒரே நோக்கம் அரசனை குளிர்வித்து அவனிடம் இருந்து காணிக்கைகளை பெறுவதுதான். அவர்கள் ஒருவருக்கும் பாக்கியதம்மாளிடம் மட்டுமல்ல யாரிடமும் நல்ல பெயர் இல்லை.
எதிர்காலத்தில் பாக்கியத்தம்மாளின் கையோங்கி விட்டால் தங்களின் நாற்காலிகள் காலியாகிவிடும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். நாட்டின் பெரும் பகுதி செல்வம் வழுக்கியாற்று குளம் கட்டுவதற்கே பயன்பட்டால் அது பாக்கியத்தமாளின் செல்வாக்கை உயர்த்திவிடும் என்று பயந்தார்கள். அது நடந்து விடக்கூடாது என்பதற்காகவே நேமிநாதர் கோவில் ஆசையை அவனின் உள்ளத்தில் விதைத்து விட்டிருந்தனர். அவர்களின் வஞ்சக நோக்கம் ஓரளவு நிறைவேறி கொண்டு இருந்தது.
இந்த வஞ்சகர்கள் குலதிலகனை முன்னே நிறுத்தி அவனுக்கு பின்னால் இருந்து கொண்டு பாக்கியதம்மாளுக்கு எதிரான வியூகங்களை வகுத்து முன்னேறி வருவதை பாக்கியத்தமாள் உணர்ந்தே இருந்தாள்.
ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று அவள் பலவாறாக சிந்தித்தாள். தனக்கு மிகவும் நம்பிக்கையான அமைச்சர்கள் அறிஞர்கள் போன்றோரிடம் மீண்டும் மீண்டும் கலந்து ஆலோசித்து மெதுவாக தனது வியூகங்களை வகுக்கலானாள்.
போதிய நிதிவளம் மட்டும் அல்லாது தங்கு தடையின்றி பணியாளர்களின் சேவையும் கிடைத்தாக வேண்டிய ஒன்றாகும். பணியை கோடை காலத்தில் மட்டுமே செய்யமுடியும். மழைக் காலங்களில் கட்டுமான பணியை மேற்கொள்ள முடியாது. ஆனாலும் மழைக்காலத்தில் பணியாளர்கள் வேறு பணிகளுக்கு சென்று விடாமல் இருக்கவேண்டும். அதற்காக அவர்களுக்கு ஏதாவது பணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தாகவேண்டும்.
கட்டுமான பணிகள் நிறைவேறும் வரை அவர்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்கு அவர்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். அது மட்டும் அல்லாமல் மழைக் காலங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக பணி வழங்க வேண்டும். பெரிய பெரிய கொட்டகைகள் அமைத்து பலவிதமான தொழில்கூடங்களையும் அங்கு உருவாக்கவேண்டும். வீட்டுக்கு தேவையான தளவாடங்கள் பாத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி செய்ய வேண்டும். உழவுத்தொழிலுக்கு தேவையான கருவிகளையும் செய்யும் பணிகளை அங்கு மேற்கொள்ளவேண்டும். அதற்கு உரிய திட்டங்களை ஏராளமான அரண்மனை நிருவாகிகள் மற்றும் தொழில்துறை அறிஞர்களோடு ஒரு நிர்வாக குழுவை நியமித்தாள்.
மறுபுறத்தில் தம்பி குலதிலகன் தனது விருப்பத்துக்கு உரிய ஆலோசகர்களோடு நேமிநாதர் கோவில் கட்டுமான திட்டங்களை பற்றி இரவு பகலாக விவாதித்து ஒரு முடிவை எட்டியிருந்தான். அவர்களின் சமண வழக்கப்படி நேமிநாத தீர்த்தங்கரர் கோவிலுக்கு உள்ளூர் திகம்பர துறவிகள்தான் முன்னின்று கோபுரம் கழுவி பூசையை ஆரம்பித்து வைப்பார்கள். இந்த வழக்கத்தை மாற்ற பாலாவோரை பெரிய கூட்டான் இளவரசன் குலதிலகன் முடிவுசெய்தான். இந்த முடிவு எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.