கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 3 – ராதா மனோகர்



யாகவேள்வியும் சோமபானமும்!

அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும் சோமபானமும் மிகவும் வரவேற்பை பெற்றது.

மக்களைவிட அரசன் குலதிலகனே யாகத்திலும் பானத்திலும் அதிகமாக கவரப்பட்டான் எனலாம்.

பார்ப்பனர்களின் யாகமும் சோம பானமும் ஏராளமான மக்களை கவரும் என்று எண்ணினான். அதன் மூலம் கோவிலுக்கு அதிக நிதி வரவு ஏற்படும் என்றும் அவனது குள்ளநரி புத்திக்கு எட்டி இருந்தது.

புதிய வரவான வடநாட்டு பார்ப்பனர்கள் மீது சமண வழிபாட்டு மக்கள் இடையே ஒரு ஈர்ப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

திகம்பர துறவிகளின் கொல்லாமை, இவ்வுலகின் நிலையாமை போன்ற கருத்துக்களை விட பார்பனர்கள் அறிமுகப்படுத்திய மாமிச யாகம் சோமபானம் போன்றவை அரச குடும்பங்களையும் உயர்தட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த காலகட்டத்தில்தான் வடநாட்டு பார்ப்பனர்கள் தங்களின் சாதிபாகுபாட்டு கருத்துக்களை திராவிட தேசத்திலும் மெதுவாக பரப்ப தொடங்கினார்கள்.

அரச குடும்பங்களுக்கும் இதர செல்வந்தர்களுக்கு இந்த சாதிகள் பற்றிய கோட்பாடுகள் மிகவும் கவர்ச்சிகரமாக காட்சி அளித்தது. மிக சிறிய அளவிலேயே உள்ள பார்ப்பனர்களை மிகவும் உயர்ந்தவர்களாக காட்டி விட்டு அடுத்தடுத்த ஸ்தானங்களை தாங்கள் நிரந்தரமாகவே சமுகத்தில் ஏற்படுத்தி விடலாம். எப்படி தலைகீழாக கணக்கு பண்ணி பார்த்தாலும் தாங்கள்தான் சமுகத்தில் இனி நிரந்தர ஆட்சியாளர்கள். தங்கள் சந்ததிதான் இனி உலகம் உள்ளளவும் ஆண்ட பரம்பரை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இந்த ஆதிக்க ஆசைகொண்ட கூட்டம் சமண துறவிகளிடம் இருந்து கோவில்களை பெற்று பார்ப்பனர்களிடம் கையளிப்ப தற்கு முடிவு செய்தனர்.

சமண வழிபாட்டை விட பார்ப்பனர்கள் மூலம் செய்யப்படும் வழிபாட்டு முறையே உயர்ந்தது என்று மக்கள் மத்தியில் தங்கள் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தனர். தனது சவக்குழியை தானே வெட்டும் கொடிய செயலை தங்களது குறுகிய நோக்கத்திற்காக தொடக்கி வைத்தனர்.

கோவில்களில் பூசைக்கு நியமிக்கப்படும் பார்ப்பனர்களுக்கு நன்றாக விளையக்கூடிய நல்ல நிலங்களாக பார்த்து மக்களிடம் இருந்து பறித்து தானமாக கொடுக்க தொடங்கினார்கள்.

இந்த அநியாயம் கண்முன்னேயே நடப்பதை காண சகிக்காமலோ என்னவோ பெரியவரசு நோய்வாய்ப்பட்டு கண்ணைமூடினார். அவரை தொடர்ந்து சில மாதங்களுக்குள்ளேயே பேராட்டியும் கணவனோடு போய் சேர்ந்துவிட்டார்.

தனித்து விடப்பட்ட பாக்கியத்தம்மாள் தலையில் ஏராளமான சுமைகள் வந்து சேர்ந்துவிட்டது.

பெரியவரசு இருக்கும்வரையில் தம்பி குலதிலகனின் கூட்டம் கொஞ்சம் அடங்கி இருந்தது. இப்போது அவர்களின் ஆட்டமோ பேயாட்டமாக உருவெடுத்துவிட்டது.

வழுக்கியாற்று குளகட்டுமான பணியாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி கோவில் திருப்பணிக்கு அழைப்பதற்கு உரிய சதியாலோசனையில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

அவர்களின் சதியை முறியடிக்கவேண்டும்.. திராவிட மக்களின் சமண கூடங்கள் பார்ப்பனர்களின் கைகளுக்கு போய்விடாமல் தடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் பாக்கியத்தம்மாள் எப்படி எதிர்கொள்ள போகிறாள்? ஆனால், நிச்சயம் எதிர்கொண்டு வெற்றி பெற்றே ஆகவேண்டும்!

இப்பொழுதான் முதல் தடவையாக தனது பாதுகாப்பை பற்றி யோசிக்க தொடங்கினாள். சுற்றிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் சூழ்ச்சி வலைகள் பின்னுவதை உள்ளுணர்வு சொல்ல்லிற்று. வாளாவிருக்கலாமா?

தனது குதிரைலாயத்தை சுற்றி வந்தாள். அவளது குதிரைகள் அவளின் செல்ல குழந்தைகள் மட்டுமல்ல அவை விசுவாசமான படைவீர்களும்கூட.! எதிரிகள் எத்தனை அடி பாய்தாலும் அவர்களை விட ஒரு அடியாவது அதிகம் பாய்ந்தே தீரவேண்டிய வரலாற்று கடமை அவள் கண் முன்னே தெரிந்தது.

சமண பள்ளிகள் பார்ப்பன கோவில்கள் ஆக மாறத் தொடங்கியது.

பேராவூர் பெரியவரசுவின் வாரிசு குலதிகலனுக்கு மிகவும் நெருங்கிய ஆலோசகர்களாக பல புதிய பார்ப்பனர்கள் அரண்மனைக்கு உள்ளே நுழையத் தொடங்கினார்கள். மாலை நேரங்களில் அழகான பார்ப்பன பெண்களின் ஆடல் பாடல்கள் அவனது அரண்மனையில் அரங்கேற தொடங்கின. அவர்களின் கவர்ச்சியில் ஓரளவு மயங்கி சொந்த புத்தியை இழந்து அவர்களின் வாழ்க்கை முறையையே பெரிதும் பின்பற்ற தொடங்கினான்.

பார்ப்பனர்கள் ஆலோசனைப்படி சமண பள்ளிகளை மெதுவாக பார்ப்பன கோவில்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்ளலானான்.

சமணப்பள்ளிகள் மக்களுக்கு கல்வி போதித்து கொண்டிருந்தன. எனவே அவற்றை இலகுவில் கோவில்களாக மாற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. மக்கள் பொதுவாக அறிவில் சிறந்தவர்களாகவும் ஓரளவு நேர்மையான குணத்துடனும் இருந்தார்கள்.

பார்ப்பன வேள்விகளில் வெட்டப்படும் ஆடு மாடுகளின் குருதி ஆறாக ஓடியது. நெருப்பில் வாட்டி கொடுக்கப்படும் ஆகுதியின் சுவையில் மக்களில் பெரும்பாலோர் மயங்கிப் போனார்கள். அது போதாதென்று ஈற்றில் வழங்கப்படும் சோமபானத்தின் போதையிலும் மக்கள் தங்கள் சுய நினைவை இழந்தார்கள். எப்பொழுதும் பார்ப்பனர்கள் பல காம இச்சைகளை தூண்டும் ஓவியங்களையும் கதைகளையும் தாராளமாக வாரி வாரி வழங்கினார்கள். எப்படி குலதிலகனை மயக்கினார்களோ அதே போன்று பொதுமக்களையும் மயக்க முயற்சித்தார்கள். அதில் கணிசமான வெற்றியும் கண்டார்கள்.

அவர்கள் கூறும் ஏராளமான புராண கதைகள் பெரும்பாலும் காம கிளர்ச்சி ஊட்டும் கதைகளாகவே இருந்தன. அவற்றை எல்லாம் உருவாக போகும் கோவிலில் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வடிக்க வேண்டும் என்று குலதிலகன் வேண்டி கொண்டான். அப்பொழுதானே பிற தேசத்தவர்களும் கோவிலை பார்க்க வருவார்கள். வருமானமும் பெருகும்.

உழைப்பையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் புதிய பார்ப்பனீய வரவு புறந்தள்ளியது. அதனால் அவர்களின் குடும்பப் பொருளாதார நிலை மோசமாகியது.

குலதிலகனின் மோசமான ஆட்சியில் பேராவூர் பெரியவரசு பரிபாலித்த பாலாவோரை நகரம் தனது அழிவை நோக்கி போய்கொண்டிருந்தது. மக்கள் தங்களது நிலபுலன்களை விற்றுவிட்டு வேறு தேசங்களுக்கு போக தலைப்பட்டனர்.

நாட்டு மக்களின் இயலாமையை பற்றிய எந்தவொரு புரிதலும் இன்றி குலதிலகன் சதா ஒன்றிரண்டு பார்ப்பன அழகிகளின் சகவாசத்திலும், ஏனைய நேரங்களில் பார்ப்பன பூசாரிகளின் வேத புருடாக்களை செவி மடுப்பதுமாக இருந்தான்.

தன்புத்தியை மொத்தமாக இழந்துவிட்ட குலதிலகன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களும் அவர்களால் பூஜிக்கப்படப் போகும் நேமிநாதர் கோவிலும் தனக்கு சகல மேன்மைகளையும் அளிக்கும் என்றும் நம்பினான்.

அரசன் தங்கள் கட்டுப்பாட்டில் முழுவதுமாக வந்ததும் மெதுவாக தங்கள் நிலப்பறிப்பு சூழ்சிகளை ஆரம்பித்தார்கள்.

பார்ப்பன அழகி மேனகை பிராட்டியார் ஒருநாள் குலதிலகனோடு கொஞ்சம் கோபித்து கொண்டு தனது வீட்டுக்கு போய்விட்டாள். குலதிலகன் மிகவும் ஆடிப்போய்விட்டான். கொஞ்சகாலமாக மேனகா பிராட்டியோடுதான் குலதிலகன் சதா காணப்பட்டான். அவளின் அழகில் மயங்கினானா அல்லது அறிவினால் கவரப்பட்டானா என்பது வரலாற்றில் சரியாக பதியப்படவில்லை.

இரண்டு நாட்கள் பித்து பிடித்தவன் போல எவருடனும் சரியாக பேசமால் சோமபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்தி கொண்டிருந்தான். குலதிலகனின் சார்பாக சென்ற தோழியர்களின் கோரிக்கையை ஏற்று, மூன்றாம் நாள் மேனகா பிராட்டி குலதிலகனின் அரண்மனைக்கு வந்தாள். உணர்ச்சி மேலிட்ட குலதிலகன் அவள் கேட்பது எதையும் கொடுப்பதற்கு தயாராக இருந்தான். முற்று முழுதாக மேனகா பிராட்டியின் கைப்பொம்மையாக குலதிலகன் மாறினான்.

பேராவூர் பாலவோரையின் ஆட்சி அதிகாரம் மின்னாமல் முழங்காமல் ஒரு பார்ப்பன அழகியின் கைக்குள் போனது இப்படித்தான்.

சமண பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர். குலதிலகனின் பார்ப்பன ஆலோசகர்களால் அவை பார்ப்பனர் களின் வீடுகளாகவும் மடங்களாகவும் மாற்றப்பட்டது. சமண தீர்த்தங்காரர்களின் பள்ளிகள் என்று அழைக்கப்பட்ட கோவில்கள் வைதீக வேத மந்திர கோவில்களாக மாற்றப்பட்டன.

என்னதான் பூச்சுக்களை பூசி வேள்விகள் நடத்தி சோமபானம் வழங்கினாலும் சாதாரண மக்கள் ஒருபோதும் இந்த பார்ப்பனர்களை பெரிதாக மதிப்பதில்லை.

அரசனை ஏமாற்றி பெற்றுக்கொண்ட ஏராளமான ஊர்கள் வயல்கள் எல்லாம் இருந்தாலும் பாலவோரை மக்கள் பார்ப்பனர் களை மதிப்பதே இல்லை. அந்த பார்ப்பனர்களை ஆத்மீக பெரியவர்களாகவும் ஏற்று கொள்ளாமல் புறந்தள்ளினார்கள்.

பார்ப்பனர்களின் வேதமந்திர ஆகம பூசைகள் மக்களை பெரிதாக கவரவில்லை. இது பார்ப்பனர்களை விட குலதிலகனை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. மக்கள் தங்களை வெறுத்தால் எப்படித்தான் அங்கு காலூன்ற முடியும் என்ற கவலையில் பார்ப்பனர்கள் ஆழ்ந்தனர்.

ஒன்றும் இல்லாமல் வெறும் அகதிகள் நிலைக்கு தள்ளப்பட்ட துறவிகளுக்கு மக்களிடம் இருந்த மதிப்பையும் ஆதரவையும் தங்களால் ஒருபோதும் வெல்ல முடியாதது ஏன் என்பதை மெதுவாக விளங்கிகொண்டனர்.

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 4 – ராதா மனோகர்

Previous Post Next Post

نموذج الاتصال