தாய்மை போற்றுதும்!
“மனித இனத்தின் தொட்டில் இந்தியா. மனித மொழியின் பிறப்பிடம் இந்தியா. வரலாற்றின் தாய், வீரத்தின் பாட்டி, பாரம்பர்யத்தின் கொள்ளுப் பாட்டி இந்தியா.”
-மார்க் ட்வைன்
மேற்கத்திய் நாடுகளில் மனைவிதான் வீட்டை நிர்வகிக்கிறாள். இந்தியாவில் வீட்டைக் கட்டுப்படுத்துபவள் தாய்.
அங்கு பெண் என்பவள் மனைவி. இங்கோ, அவள் தாய். அவள், வீட்டின் கடவுளாக வழிபடப்படுகிறாள்.
மூன்று அதிசயங்களை அவள் நிகழ்த்துகிறாள்.
வலியையும் சந்தோஷத்தையும் அனுபவித்து அவள் குழந்தையை பெறுகிறாள். ஊசி முனையில் அமர்வது போல் கஷ்டங்களை அனுபவித்து குழந்தையைப் பெற்று தருவது முதல் அதிசயம்.
சந்தோஷமும் வேதனையும் ஒரே நேரத்தில் சேர்ந்து உருவாவது இரண்டாவது அதிசயம்.
குழந்தை பெறுவதற்கு முன் அவள் வெறும் பெண்ணாக இருந்தாள். குழந்தை பிறந்தபிறகு, பெண் என்பவள் தாயாக மாறிவிட்டாள். இது ஒரு புரட்சிகர நடவடிக்கை. ஒரு பரிணாம வளர்ச்சி நிகழ்கிறது.
ஒரு பட்டுப்புழு, இறக்கையுடன் கூடிய தேவதையாக மாறுவதைப் போல இது மூன்றாவது அதிசயம்.
தாய்மை என்ற பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. ஆண்களுக்கு இத்தகைய பரிணாம வளர்ச்சி அனுபவம் கிடையாது.
தாய்மை என்பதற்கு அர்ப்பணிப்பு என்று இன்னொரு பெயர் உண்டு. மழலைச் செல்வத்திடம் காட்டும் சுயநலமற்ற அன்பும் அர்ப்பணிப்பும் மாசற்ற தன்மையின் விதைகளில் இருந்து முளைத்தவை.
அதில், தந்திரமோ, திட்டமிடுதலோ, சுயநல நோக்கங்களோ இருக்காது.
தாய்மை.
பிரபஞ்சத்தில் ஒரு உயிரைப் படைக்கும் ஆற்றல் பெற்றது.
கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு உயிர் வளர்கிறது. உங்கள் ஊனையும் ரத்தத்தையும் உண்டு அது வளர்கிறது.
வெற்றிடமாக கிடந்த உங்கள் வயிற்றுக்குள் இருந்து இரண்டு பிஞ்சுக் கரங்கள் நீள்கின்றன. அவை உங்களுக்காக வெளியே வருகின்றன. இயற்கையைப் போல படைப்பாற்றல் பெற்றவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
குழந்தைப் பேறு என்பது உங்களுக்குள் தெய்வீகத் தன்மையை மட்டும் நிறைக்கவில்லை. தாய்க்கும் குழந்தைக்குமான நெருக்கத்தையும் பலப்படுத்துகிறது.
இயற்கையான பிரசவம்தான் இந்த நெருக்கத்தின் முதல் கட்டம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இயற்கையான பிரசவத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக டில்லியில் சிறப்பு வகுப்புகள்கூட எடுக்கப்படுகின்றன.
தாய்மை என்பது உள்ளுக்குள் விழிப்புணர்வை கொண்டு வந்து சேர்க்கிறது. ஆனால், அதுமட்டுமின்றி, பொறுப்புகளையும் கவலைகளையும் சேர்த்து கொண்டு வருகிறது.
கருத்தரித்தவுடனேயே, உங்கள் முன்னுரிமைகள் மாறுகின்றன. அதுவரை வாழ்க்கையை நீங்கள் பார்த்த பார்வை மாறுகிறது. போதுமான செல்வத்தை சேர்க்க துடிப்பீர்கள். பாதுகாப்பையும், குடும்ப ஆதரவையும் தேடுவீர்கள்.
பிரசவத்தில் உள்ள கஷ்டங்களை நினைத்து பெண்கள் கவலைப்படுகிறார்கள். அந்த கஷ்டங்களுக்குத் தங்களைத் தயார்ப்படுத்தும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குழந்தையை சுமந்து பெறும் காலத்தில் ஏற்படக்கூடிய சுகமான அனுபவங்களை மறந்துவிட்டார்கள். மருத்துவ மனைகளுக்கு சென்று பணத்தைக் கொட்டி மாத்திரைகள் மூலம் வலியை மறக்கிறார்கள்.
வலியுடன் கூடிய இயற்கையான பிரசவம்தான் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், வலியால் துடித்து குழந்தை பெறுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
அவர்களுடைய இந்த மனநிலையை மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
மருத்துவ மனைகள் பணம் பறிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. சுகப் பிரசவங்கள் கூட அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுகிறது.
தாய்மையின் சுகங்களும் துக்கங்களும் இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு தெரியாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் உண்டு.
முன்பு போல கூட்டுக் குடும்பங்கள் இல்லை. திருமணமானவுடன் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போய் விடுகிறார்கள். அல்லது, இன்றைய சூழலில் அப்படி போகும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
எனவே, தாய்மை குறித்து இளம் தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பட்டியலிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.