ஆரிய சதியை முறியடித்த அரசி
சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது.
அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது.
இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள் மண்ணை காப்பாற்றினார்கள் என்ற வரலாற்றை கூற முயன்றிருக்கிறேன்.
அந்த காலக்கட்டங்களில் திராவிட நிலமெங்கும் ஏராளமான சிறிய பெரிய மற்றும் சின்னஞ்சிறு அரசுகள் பலவும் தோன்றி மறைந்தன. ஆனால் அந்த அரசுகளின் வரலாறுகள் ஒழுங்காக எழுதப்படவில்லை. ஏன் அவை ஒழுங்காக எழுதப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடையாது.
உண்மையில் திராவிடர்களின் வரலாற்று அடையாளங்களை அழித்து ஒழிப்பதற்கு பெரிய சதியே நடந்தது. இப்போதும் நடக்கிறது.
ஆம் அந்த திராவிட அரசுகளின் பெரும்பாலான வரலாற்று சான்றுகளை ஆரியம் அழித்து விட்டது. இன்றும் அழிக்க முயல்கிறது.
சுமார் முன்னூறு ஆண்டுகள் தமிழை வளர்த்த களப்பிரர்கள் வரலாறு இன்றுவரை போதிய வெளிச்சம் காணாமலேயே இருட்டில் உள்ளது.
ஒரு முன்னூறு ஆண்டுகளையே ஆதிக்கவாதிகளால் விழுங்கிவிட முடியும் என்றால் இன்னும் எத்தனை வரலாறுகளை அவர்கள் இருட்டில் தள்ளி இருப்பார்கள்?
மறைக்கப்பட்ட வரலாற்று பக்கங்களை தேடும் முயற்சிகளை நாம் ஒருபோதும் கைவிட்டு விட முடியாது அல்லவா?
ஆங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் சில வரலாற்று ஆதாரங்கள் பல செய்திகளை கூறாமல் கூறும். விடுபட்ட தொடர்புகளை நமக்கு உள்ளுணர்வில் உணர்த்தும். வரலாற்று பக்கங்களை அகக்கண் மூலம் உற்று நோக்குவோர்க்கு அது பல மறைக்கப்பட்ட செய்திகளை கூறும்.
அவை கற்பனைகள் போலவும் தோன்றும். சில கற்பனைகள் உண்மைக்கு அருகில் நிற்பவை போலவும் தோன்றும். அது ஒரு கலவை.. ஆழமான கலவை. சுவாரசியமான கலவை. ஆனால் பல நேரங்களில் இலகுவில் மறுக்க முடியாத கலவை.
ஒரு அகழாய்வில் இருந்து ஒரு முத்து மாலை தென்பட்டால் அந்த முத்து மாலை ஒரு பெண்ணின் கழுத்தை அலங்கரித்த காட்சி சிலநேரம் நம் அகக்கண்ணில் தெரியும்.
இது ஒரு கற்பனை போல் தோன்றலாம். ஆனால் முழுவதும் கற்பனை அல்ல. ஒரு உண்மையின் அடிப்படையில் விரிந்த கற்பனை என்று கூறிக்கொள்ளலாம். இந்த வகையில்தான் என் மனதிற்குள் பாக்கியத்தமாளும் குலத்திலகனும் மேனகா பிராட்டியாரும் புத்தூர் நம்பியும் எல்லாவற்றிலும் மேலாக நிமித்தகாரியும் பேசினார்கள். இப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
அந்த வழுக்கி ஆறும் கூட மனக்கண்ணில் ஓடிக்கொண்டே இருக்கிறது. போரை வெறுத்த அந்த பாலாவோரையின் பண்புள்ள மக்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டால், அவர்கள் எப்படி துடித்து போவார்கள் என்ற எண்ணம் பல இரவுகள் என்னை தூங்கவிடவில்லை.
போரை தவிர்க்கவும் நாட்டை காப்பாற்றவும் என்னென்ன வழிகளில் எல்லாம் செயல்படலாம் என்று சிந்தித்த பாக்கியத்தம்மாளின் ஆளுமை – தியாகம் எல்லாம் மறக்க கூடியதா? போர்முனையில் களமாட வேண்டிய சந்தர்ப்பங்களை எல்லாம் மதி நுட்பத்தால் வென்று காட்டிய பெருமை மிகுந்த வரலாறுதான் பாலாவோரையின் வரலாறு
வெற்று வீரம் பேசி மக்களை பலிகொடுக்காமல் மதி நுட்பத்தாலும் பொறுமையாலும் மிகுந்த அர்ப்பணிப்பாலும் எதிரியின் ஆக்கிரமிப்பை புறமுதுகு கண்ட பெருமக்களின் கதை இது.
இது வெறும் கதை என்று ஒருபோதும் நான் கருதவில்லை. மனித மாண்பை போற்றி தன் மக்களுக்கு சரியான வழியை காட்டிய ஒரு உன்னத தலைவியின் கதை! ஒரு ஒப்பற்ற மக்களின் கதை.
உண்மையில் இவர்களின் கதையை இன்னும் நான் பூரணமாக கூறிவிடவில்லை. இன்னும் கூறுவதற்கு நிறைய இருக்கிறது.
ஒரு சில வருடங்களுக்குள் நடந்த சம்பவங்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். பாலாவோரையின் பகைவர்களோ பாக்கியத்தம்மாளின் பகைவர்களோ தொடர்ந்து கைவரிசையை காட்டியவண்ணமே இருந்தார்கள்.
அவற்றை தொடர்ந்து பதிவு செய்ய எண்ணியுள்ளேன். பாலாவோரைகளின் கதை மிக நீளமானது.
கதைக்குள் நுழைவதற்கு முன் உங்களை மேலும் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. கதையை வாசியுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
நன்றி
அன்புடன்
ராதா மனோகர்