காபி எனப்படும் உற்சாகமூட்டும் பானம் இல்லாமல் இங்கு பலருக்கும் காலை நேரம் சுறுசுறுப்பாகவே இருக்காது. அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.
இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி ப்ரியர்கள்!