தாயாக நீ ஆக…
இயற்கை தனது விளையாட்டு பொம்மைகளாய் உயிரினங்களைப் படைக்கிறது.
உயிரினங்களில் மனித இனம் தனித்துவம் பெற்றது.
மற்ற உயிரினங்களையும், இயற்கையையும் தனது ஆளுமைக்கு கொண்டுவரும் ஆற்றல் மனித இனத்துக்கு உண்டு.
மனித இனத்தில்,ஆணும் பெண்ணும் இந்தப் பூமியில் பல அவதாரங்களை எடுக்கிறார்கள்.
இயற்கையின் படைப்பில் குழந்தைகளாய், இளைஞர்களாய், கணவன் மனைவியாய், தாய் தந்தையராய், தாத்தா பாட்டிகளாய் விதவிதமான அவதாரங்களை எடுக்கிறார்கள். இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணாம்சங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனுக்குமே தனித்தனி குணங்கள் இருக்கின்றன.
மனிதனின் இந்த அவதாரங்களில் மிக முக்கியமானது தாய்மை அவதாரம்.
மனித இனத்தில் தாய்மைக்கு உள்ள பொறுப்பு மிக முக்கியமானது. அந்த பொறுப்பு சிறப்பாக நிறைவேற்றப் பட்டால்தான் மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும்.
சிறுமியாய், இளம்பெண்ணாய் உற்சாகமாக துள்ளித் திரியும் பெண், திருமணத்திற்கு பிறகு மூன்று மாதங்களில் தனக்குள் இன்னொரு உயிரைச் சுமக்க வேண்டிய கட்டா யத்துக்கு தள்ளப்படுகிறாள்.
அது அவளுக்கு மிகவும் சிரமத்தை அளிக்கிற சுமைதான். ஆனால், அது ஒரு சுகமான சுமை.
மூன்று மாதங்களில் இருந்து, வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து அவளே சுவாசிக்கிறாள், சாப்பிடுகிறாள். நடக்கும்போது கூட மிக கவனமாக இருக்கிறாள்.
கர்ப்ப காலத்தில் அவளுக்கு பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன. அவை தவிர, அனுபவத்தில் மற்ற பெண்களிடம் இருந்தும் அவள் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறாள்.
காலங்காலமாக பெண் பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.
இன்றைய தலைமுறை மிகத் தெளிவானது.
புத்தகங்களிலும், இணையத் தளங்களிலும் இந்த தலைமுறைப் பெண்கள் பல புதிய விஷயங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்கிறார்கள்.
மருத்துவ மனைகள் பணம் பறிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. சுகப் பிரசவங்கள் கூட அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுகிறது. வலியால் துடித்து குழந்தை பெறுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
தாய்மையின் ஆதாரமே அந்த வலியில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
தாய்மையின் சுகங்களும் துக்கங்களும் இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு தெரியாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் உண்டு.
முன்பு போல கூட்டுக் குடும்பங்கள் இல்லை. திருமணமான வுடன் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போய் விடுகிறார்கள். அல்லது, இன்றைய சூழலில் அப்படி போகும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
எனவே, தாய்மை குறித்து இளம் தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பட்டியலிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த முதல் நாள்தான் உங்கள் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான நாளாக இருக்கும் என்று யாராவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா? இருக்க மாட்டார்கள்.
நீங்கள் மட்டுமல்ல, புதிதாக குழந்தை பெற்ற பல தாய்மார்கள் இதை ஒப்புக் கொள்கிறார்கள். தாய்மை என்பது கவர்ந்திழுக்கும் சவால்கள் நிறைந்தது என்று யாரும் சொல்ல முடியாது.
அதற்காக, தாங்கள் தனிமைப்பட்டு விட்டதாக புதிய தாய் மார்கள் கருதிவிடக் கூடாது. இதில் உள்ள சாதக பாதகங்களை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று குழந்தைகள் மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோம்.
“கர்ப்பகாலத்தில் படும் கஷ்டங்கள் எல்லாம் குழந்தையின் முகம் பார்த்ததும் மறைந்துவிடும். குழந்தையை தூக்கி பக்கத்தில் போட்டவுடன் அதன் முகத்தைப் பார்த்தால் நேசம் ஒட்டிக் கொள்ளும்”
இது உண்மையா? சிலருக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். எந்த ஒரு உறவுக்கும் நெருக்கம் ஏற்பட சில காலம் பிடிக்கும். அதுபோலத்தான் குழந்தைக்கும் தாய்க்கும்!
நெருக்கம் என்பது தனிநபர் அனுபவம். உடனடியாக நெருக்கும் ஏற்படும் என்று எதிர்பார்கக்க முடியாது. அதற்கென்று சில கால அளவு இருக்கிறது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெற்றோர் குழந்தைகள் நெருக்கம் என்பது, குழந்தைகள் நாம் பராமரிக்கும் விதத்தில் இருந்துதான் உருவாகிறது. குழந்தை அருகில் இருப்பது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு குழந்தையிடம் நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தையாக இருந்து வளர்ந்து திடீரென்று நீங்களே ஒரு குழந்தைக்கு தாயாகும்போது, அதிர்ச்சியாக கூட இருக்கும். எடுத்தவுடன் குழந்தைக்கு தேவையான எதையும் தனியாக செய்ய முடியாமல் தவிப்பீர்கள். எல்லாவற்றுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும்.
சில நாட்கள் மட்டுமே பிறருடைய உதவி கிடைக்கும். பிறருடைய உதவி இல்லாத நிலையில் நீங்கள் டென்ஷனா வீர்கள். அழக்கூட செய்வீர்கள். பாதுகாப்பற்றவராக உணர்வீர்கள். விரக்தி அடைவீர்கள். ஒரு குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு திடீரென்று உங்கள் தலையில் விழும்போது அச்சமாகவும், அனுபவ பற்றாக்குறையாகவும் இருக்கத்தான் செய்யும்.
உங்களுடைய வழக்கமான விருப்பங்களில் கவனம் செலுத்த முடியாது. இதையெல்லாம் உணர்ந்து உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்தி, நிதானத்திற்கு வரவேண்டும்.
பிரசவம் மருத்துவ மனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் முதல் நாள் பிரச்சினை ஒன்றுதான். சுகப் பிரசவம் என்றாலும், அறுவைச் சிகிச்சை என்றாலும் பிரச்சினை ஒன்றுதான். அது தாய்ப்பால் கொடுப்பது.
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பில் சீம்பால் கட்டிக் கொள்ளும். மார்புகளில் பால் நிரம்பி புடைத்துக் கொள்ளும். காம்புகள் சமதளமாகிவிடும். குழந்தைக்கு சீம்பால் கொடுப்பது அவசியம். இதற்கு பிறருடைய உதவி அவசியம். காம்புகளின் துவாரங்கள் அடைத்திருக்கும். முதலில் அதை சரி செய்ய வேண்டும். அதாவது, கைகளால் காம்புகளை அழுத்தி துவாரத்தை திறக்க வேண்டும். பால் பீய்ச்சியவுடன் குழந்தையின் சிறிய வாயில் எடுத்து வைக்க வேண்டும்.
தொடக்க நாட்களில் மார்புகளில் அடிக்கடி பால் நிரம்பி வழியும். காம்புகள் சமதளமாகிவிடும். எனவே, குழந்தை காம்புகளை கவ்விச் சப்புவதற்கு வசதியாக நீங்கள்தான் அதை சரி செய்ய வேண்டும்.
பால் கொடுப்பதற்கு முன் மார்புகளை வெதுவெதுப்பான நீரால் கழுவினால் காம்புகள் எளிதில் தனிப்படும்.
இப்படியெல்லாம் வசதி செய்து கொடுத்தாலும் குழந்தை யின் வாய் காம்புகளை கவ்வுவதற்கு ஏதுவாக இருக்காது. சப்பிக் குடிப்பதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக, எந்த சந்தேகமாக இருந்தாலும் முதிய பெண்களிடம் கூச்சப்படாமல் கேட்க வேண்டும். மனித இனம் தோன்றியதிலிருந்து இது இயல்பான விஷயம்தானே! எந்த இடத்தில் வேண்டுமானாலும் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு கூச்சப்படுவது நல்ல தாய்க்கு அழகல்ல.
புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு இன்னொரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அது மூலநோய். இது ஒரு சங்கடமான பிரச்சினை. உங்களுக்கு மட்டும் வருவதல்ல இந்த பிரச்சினை. மற்ற தாய்மார்களுக்கும் இது வந்திருப்பதை அறிந்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும். இந்த மூலக் கட்டிகளில் அரிப்பு ஏற்படும். வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தக் கசிவும் இருக்கும். இது உங்களுக்கு வசதிக் குறைவாக இருக்குமே தவிர, கவலைப் படும் விஷயமாக இருக்காது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய ஜீரண உறுப்புகளை சீராக வைத்திருப்பதுதான். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். கட்டியைக் கரைப்பதற்கும், அரிப்பை போக்குவதற்கும் உரிய ஆயின்மென்ட்டை வாங்கி உபயோகிக்கலாம். ரத்தக்கசிவு இருந்தாலோ, தாங்க முடியாத வலி இருந்தாலோ உங்கள் டாக்டரை பார்ப்பது நல்லது.
கர்ப்பம் தரித்தவுடன் உங்களுக்குள் உடல் மாற்றங்கள் ஏற்படும். உடல் குண்டாகிவிடும். உங்களுடைய உடைகள் அளவு மாறும். குழந்தை பிறந்தவுடன் இது சரியாகிவிடும் என்று கருதிவிடக் கூடாது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இது சரியாகாது. அப்புறமும் கூட சரியாகாமல் போகலாம். ஏனெனில் உங்கள் உடல் எடை கூடிக் கொண்டுதான் இருக்கும். எடை கூடுவதால்தான் குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும். உடையை அணிவதற்காக எடையை குறைக்க வேண்டாம். நிறை சத்துணவு சாப்பிடுங்கள். கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
குழந்தை பிறந்தவுடன் உங்களுக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்குள் ஒரு புதிய படைப்பாளி உருவாக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் பாடுவீர்கள். ஆடுவீர்கள். குழந்தையை குளிப்பாட்டும்போதும், பாலூட்டும்போதும் பாடுவீர்கள். அழும்போது கோமாளித்தனமாக ஆடுவீர்கள். குழந்தையின் புன்னகையைப் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு போவீர்கள்.
குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நீங்கள் செல்லமாய் கருதிய எதுவானாலும் இரண்டாம் இடத்துக்கு போய்விடும். குழந்தைதான் உங்கள் உலகம் என்று ஆகிவிடுவீர்கள்.
கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் மற்ற தாய்மார்களின் குழந்தைகளை ஆசையாக பார்ப்பீர்கள். “எனது குழந்தையும் இதுபோலத்தான் இருக்கும்” என்று நினைப்பீர்கள். இந்த ஆசை சரியல்ல. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் போல இருக்காது. குழந்தைகள் அதன் இயல்புப்படியே வளரும் என்ற உண்மையை உணர வேண்டும்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை தவிருங்கள். உங்கள் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது உட்காரும் அழகை, நிற்கும் அழகை, தவழும் அழகை, பேசும் அழகை, நடக்கும் அழகை ரசியுங்கள்.
உங்கள் கன்னத்தில் விழும் குழி முன்பெல்லாம் உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கும். அல்லது, ஏதேனும் ஒரு இடத்தில் உள்ள மச்சம் பிடிக்காமல் இருந்திருக்கும். உங்கள் குழந்தையின் கன்னத்தில் விழும் குழி…உங்களுக்கு இருக்கும் அதே இடத்தில் குழந்தைக்கும் இருக்கும் மச்சம் ஆகியவை இப்போதும் பூரிப்பை ஏற்படுத்தும்.
குழந்தை சந்தோஷப்படும் என்றால் எந்த வேஷத்தையும் போட தயாராக இருக்க வேண்டும். நாய்போல குரைக்கலாம், குரங்குபோல கிரீச்சிடலாம், குழந்தைபோல அழலாம்.
குழந்தை பிறந்தவுடன் முந்தைய உங்கள் கட்டுடல் விடைபெற்று விடும். அது திரும்ப வராது. அடிவயிற்றில் பல சுருக்கங்கள் வந்துவிடும். அது வடுவாய் நீடிக்கும். வழவழப்பான வயிறு கனவுதான். சிற்றிடையும் அகன்றுவிடும். குழந்தைக்காக நீங்கள் சாப்பிட வேண்டும். அது உங்கள் உடலை குண்டாக்கி விடும். குண்டானால்தான் குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும். உணவைக் குறைப்பதால் நீங்கள் கட்டுடல் அழகியாக மாறப்போவதில்லை என்பதை உணர்ந்தால் போதும்.
இருந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சில உடற்பயிற்சிகளை செய்யலாம்.
குழந்தை பிறப்பதற்கு முன் உங்கள் மாமியார் உங்களிடம் எப்படி இருந்தாரோ அது அப்படியே தலைகீழாக மாறிவிடும். தனது பேரக்குழந்தைதான் அவருக்கு உலகம் என்றாகிவிடும். அவருடைய உதவி உங்களுக்கு தேவைப்படும். அவரை அனுசரணையாக பார்த்துக் கொள்வது முக்கியம் என்பதை உணருங்கள். முதியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளை உங்களுடைய கணவர் புரிந்துகொள்ள தவறினாலும் மாமியார் புரிந்து கொள்வார். மகனிடம் விளக்குவார்.
உங்கள் தூக்கம் தடைப்படும். சோர்வு தலைதூக்கும். குழந்தைக்காக நீங்கள் விழித்திருப்பீர்கள். அது தூங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். தூங்கும்போது குழந்தையின் தன்னிச்சையான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ரசிப்பீர்கள். உங்கள் தாய் நீங்கள் குழந்தையாக இருக்கும்போது எப்படி தூங்குவீர்கள் என்று சொல்லும்போது சந்தோஷப் பட்டு இருப்பீர்கள். கால்மீது கால் போட்டு தூங்குவதாக சொல்லும்போது உள்ளுக்குள் பூரித்திருப்பீர்கள். அதுபோல உங்கள் குழந்தையிடமும் சொல்வதற்கு விஷயங்களை தேடுவீர்கள்.
இதுவரை உங்கள் கணவராக இருந்தவருக்கு அப்பா என்ற பிரமோஷன் கிடைக்கும். அவருக்கு பெருமை பிடிபடாது. குழந்தைக்கு நீங்கள் செய்யும் பணிவிடைகளைப் போல அவரும் செய்ய முடியாது. ஆனால், குழந்தையின் பார்வையை தன் மீது திருப்புவதற்காக அவரும் பல கோமாளித் தனங்களை செய்வார்.
வெளியில் செல்லும்போது சக தோழிகள் அல்லது தெரிந்த குடும்பத்தினர் உங்களை கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். தாய்ப்பால் கொடுக்கிறாயா? இல்லையா? வேலைக்கு போகத் தொடங்கிவிட்டாயா? இல்லையா? நன்றாக தூங்குகிறாயா? இல்லையா? இவைதான் முக்கிய கேள்விகளாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. குழந்தை யைப் பெற்று வளர்ப்பது எவ்வளவு சிரமமான காரியம் தெரியுமா? என்று சிலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். அது உண்மைதான். குழந்தை பிறந்தவுடன் செலவுகள் அதிகரிக்கும். அதற்கு உடைகள், உணவு, விளையாட்டு பொருட்கள், கல்வி என்று செலவுகள் வரிசையாக நிற்கும்.
குழந்தை பிறந்தவுடன் சந்தோஷமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகரிக்கும். எனவேதான், கர்ப்பமாக இருக்கும்போதே, குழந்தைக்கும் சேர்த்து பணம் சேர்க்க வேண்டும்.
திருமணமானவுடன் நீங்கள் அனுபவித்த தாம்பத்ய வாழ்க்கை திரும்பக் கிடைக்காது. உங்களுக்கு விருப்பமும் இருக்காது. குழந்தை மீது உங்கள் கவனம் திரும்பி விடும். இருந்தாலும், கணவரையும் கவனிக்க தவறிவிடக் கூடாது. உங்களுக்கு இடையில் இருந்த உறவு பாதிக்காமல் புதிய வழிகளை சிந்திக்க வேண்டும். உங்களுடைய குடும்ப சூழலுக்கு ஏற்றபடி அந்த வழிமுறைகள் இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்வதாக நீங்களே பெருமைப் படுகிறீர்களா? உலகத்திலேயே மோசமான தாயாக உணர்கிறீர்களா? எல்லாம் மாறிவிடும்.
ஆறு வாரங்களில் உங்கள் குழந்தை இரவில் நன்றாக தூங்கத் தொடங்கிவிடும். நன்றாக சாப்பிடும். குழந்தையை கவனமாக பார்த்துக் கொண்டால்தான் இது சாத்தியம். இப்போது நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.
இப்படிப்பட்ட குழந்தை 5 வயதில் படுத்தும் பாடு இருக்கிறதே அது ஒரு விதம். சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்கும். இரவில் அடிக்கடி எழுந்து உங்களை தொந்தரவு செய்யும்.
15 மாதங்கள் வரை நடக்காமல் இருக்கிறது என்று கவலைப்படும் குழந்தை ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு வாங்கும். யாருக்குமே எதையும் தர மறுக்கும் குழந்தை பெரிய பரோபகாரியாக வரும். குழந்தைக்கு பெற்றோராக இருப்பதில் சுகமும் இருக்கும் சுமையும் இருக்கும்.