3. பகுத்தறிவு ஆன்மிகம்-விஞ்ஞானக் கடவுள்! (Rational Spirituality)
நாம் யார்? கடவுள் உண்டா? நம்மை சுற்றி நடப்பது என்ன?
இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக கெட்டித்தனமான பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள். நமது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். நமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர் நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம் ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி நமக்கு தரமுடியும்? நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே நம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நம்பி நம்பி பின்னால் சென்றதனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாத வர்களாகி விட்டோம். சதா நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண் நமக்கு தேவைப்படுகிறது. சாமி, சமயம் அல்லது கலாசாரம் மேலும் அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகர் போன்று ஏதாவது ஒன்று நம்பிக்கை கொள்வதற்கு தேவைப்படுகிறது.
இந்த நம்பிக்கை என்பது மருந்து மாதிரி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. தேவை ஏற்படும்போது ஏதோ ஒரு தெரபி என்று கண்டுக்காமல் இருந்து விடலாம். ஆனால் இங்கே நடப்பது என்ன? மருந்தையே சாப்பாடாக எண்ணி சாப்பிட்டு சாப்பிட்டு எல்லோரும் விசித்திர நோயாளிகளாக மாறிவிட்டனர் அல்லவா?
தனக்கு தானே படைப்பாளி என்ற அற்புத சிருஷ்டி தத்துவத்தை அடியோடு மறந்தவர்களாக வெறுமையான மனிதர்களாக உருமாறி விட்டனர்.
இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி. மனித சமுதாயம், தான் ஒரு சிருஷ்டி யாளன் என்பதை உணராமல் எதோ ஒரு சக்தி அல்லது யாரோ ஒருவர் எதோ ஒருவிதமாக தனது வாழ்வை தீர்மானிக்கிறார் என்றல்லவா ஒரு இருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து இறந்து விடுகிறார்கள்.
தனது வாழ்வை தான் வாழ்வதுதான் வாழ்க்கை. யாரோ ஒருவரது வாழ்வை தான் வாழ்வது வாழ்வே அல்ல. சுயமாக சிந்திப்பதற்கு இவர்களை தடுப்பது ஏற்கனவே மனதில் பல ஆயிரம் ஆண்டுகளாக பதிந்து விட்ட நம்பிக்கைகளும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதுமாகும். அது புண்ணியம் என்றுகூட நம்பிக் கொள்கிறார்கள். கண் முன்னே நிரூபணமாக தெரியும் உண்மைகளைக்கூட நம்புவதற்கு இவர்களுக்கு ஏதாவது ஒரு பழைய கோட்பாடு தேவைபடுகிறது. ஏதேனும் ஒரு நம்பிக்கை இல்லாமல் இருப்பது பாபகாரியம் என்றுகூட எண்ணுகிறார்கள்.
ஏதாவது ஒரு நம்பிக்கையில் தங்கி இருக்க வேண்டும் என்ற கோட்பாடு ஆழமாக வேருன்றி விட்டது. இதன் காரணமாக எதையுமே உண்மையில் காணமுடியாத மனிதர்களாகவே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு தூரம் இந்த நம்பிக்கை என்ற சமாசாரத்தை விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதற்கு காரணம், அறிவியலுக்கு இந்த நம்பிக்கைதான் முதல் எதிரியாக இருப்பதுதான். அறிவியல் உண்மைகளுக்கு கூட நம்பிக்கை முலாம் பூசவேண்டி இருக்கிறது. நம்பிக்கை முலாம் பூசாத பொருளை விற்பது கஷ்டமாக இருக்கிறது.
நம்பிக்கை கோட்பாடுள்ளவர்களின் முரட்டு பின்பற்றுதல் வியாதி ஒருபுறம் என்றால் இந்த கடவுள் மறுப்பாளர்கள் அல்லது பகுத்தறி வாளர்கள் என்போரும் தங்கள் பார்வையை சற்று விசாலமாக்க வேண்டியது அவசியமாகிறது. இவர்கள் பாரம்பரிய விஞ்ஞான பௌதிக கோட்பாடுகளை விட்டு சற்று வெளியே வரவேண்டியது மிகமிக அவசியமானது. தங்கள் விஞ்ஞான அறிவை சென்ற நூற்றாண்டுகளிலேயே வைத்துகொண்டு ஆத்மீக நம்பிக்கை வாதிகளின் பல சர்ச்சைகளுக்கு பதில் காண்கிறார்கள். இது இன்னுமொரு துரதிஷ்ட வெளிப்பாடு..
விஞ்ஞானிகளுக்கு தெரிந்த உண்மைகள் ஒன்றும் பூரணமானவை அல்ல. அவற்றை வைத்து கொண்டு எதிராளிகளை அடித்து வீழ்த்தும் பாமரத்தனத்தை சற்று கைவிட வேண்டும். ஜோதிட சாஸ்திரம் போன்று பல விசயங்கள் உண்மையில் முழுக்க முழுக்க விஞ்ஞானமே. வைத்தியம் கூட ஒரு காலத்தில் ஏதோ ஒரு தெய்வீக விடயமாக பார்க்கப்பட்டதுதான் தற்போது அது ஒரு விஞானமாகியுள்ளது. இதேபோன்றுதான் ஜோதிட சாஸ்திரமும் கூட ஒரு விஞ்ஞானமே. அறிவியலாளர்கள் இந்த அரிய கலையை நம்பிக்கை வாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். அற்புதங்களுக்கு வருவோம். பலவிதமான அற்புதங்கள் உண்மையில் எமக்கு புரியாத விஞ்ஞானமே. அவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக முயற்சி செய்யவேண்டும்.
இதில் நாம் மிகவும் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால் ஏற்கனவே பல அறிஞர்கள் இதில் பல படிகளை தாண்டி விட்டார்கள். எதிர்காலத்தில் அற்புதங்கள் என்று நாம் கருதும் பல நிகழ்வுகள் விஞ்ஞான ரீதியாக சாத்தியமாக போகின்றன. ஆனால் அந்த விஞ்ஞானம் நமது மனதோடு அல்லது நமது உடலோடு ஏன் இன்னும் சரியாக சொல்லப் போனால் நமது ஆத்மாவின் துணைகொண்டு அல்லது நம்மை சுற்றி உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவற்றின் சூட்சுமங்களை மேலும் அறிவதனால் கூட சாத்தியமாகலாம். எமக்கு தெரிந்தது மட்டுமே உண்மை மற்றெதெல்லாம் மூட நம்பிக்கை என்கின்ற பாமரத்தன்மை ஒருபோதும் மக்களுக்கு பகுத்தறிவை வழங்காது.
கடவுள் என்ற சொல் ஒன்றை நாம் உருவாக்கி அதற்கு பல விதமான கற்பனைகளை ஜோடித்து அதை நம்பி நமது அறிவை நாமே மதிக்காமல் நமது பிறவியை நாமே தரம் தாழ்த்துவது சரியா? எமக்கு தெரியாத கடவுள் என்ற சமாசாரம் இருப்பது உண்மையாகதான் இருக்கவேண்டும். சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெரிய அதி சிறந்த பொறிமுறை ஒன்று இருப்பது தெரிகிறது. அந்த மெக்கானிசம் நமது அற்பத்தனமான வழிபாடுகள் அல்லது நம்பிக்கைகள் அடிப்படையில் நமக்கு அனுகூலங்களை வழங்குவதாக எண்ணுவது சிறுபிள்ளைத் தனமானது. அந்த விதமான நம்பிக்கைகளை கொண்டிருப்போருக்கு அவை ஒரு நல்ல தெரபியாக இருக்கலாம். அதுதான் முதலிலேயே குறிப்பிட்டேன், மருந்தாக எதுவும் இருக்கலாம் ஆனால் மருந்துகளையே உணவாக உண்ண தொடங்கினால் நோய் முற்றி விட்டது என்றுதான் அர்த்தம்.
நாம் மனிதர்கள் அடிப்படையில் அடித்து பிராண்டி பறிப்பவர்கள் ஆக இருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறோம். இதன் காரணமாக சிந்தனைபோக்கில் மோதுவது என்பது சற்று தூக்கலாகவே இருக்கிறது; இந்த முட்டி மோதும் தன்மையால் சதா பயந்து பயந்தே வாழ்ந்து வந்திருக்கிறோம். நமது பயத்தில் இருந்து தற்காலிக விடுதலை பெற ஒரு தெரபி தேவைப்பட்டிருக்கிறது.
நாம் பயப்படும் பொருளை வழிபடும் யுக்தியை சமயம் கண்டுபிடித்து ஒரு தற்காலிக போதையை வாரி வாரி வழங்கி தன இருப்பை தக்க வைத்து கொண்டது. காலம் செல்ல செல்ல போதை மருந்தே உணவாகி போனது.
போதை மருந்தை உண்பவர்கள் அது கிடைக்காவிட்டால் துடித்து போவார்கள். அதை படிப்படியாகத்தான் குணமாக்கவேண்டும்.
பகுத்தறிவாளர்கள் ஒரே அடியாக மருந்தை பிடுங்கி எறிவதால் போதை மருந்து பாவனையாளர்கள் பகுத்தறிவாளர்களை கண்டால் ஓடுகிறார்கள்.
பல சமயங்களில் போதை மருந்தும் பல மோசமான நோய்களை குணமாக்குவது அறிவியல் கண்ட உண்மை.
நமக்கு தெரியாத அறிவியல் உண்மைகளை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும்.
அதற்கு எந்த கருவிகள் தேவையோ அவற்றை பயன்படுத்த வேண்டும் அந்தக் கருவிகள் மன ஒருமைப்பாடு போன்றோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம்.
அக்கருவிகளை மூட நம்பிக்கைகள் என்று தூக்கி எறிந்து கேலிசெய்யும் பாமரத்தன்மை விலக வேண்டும்.
எங்கெல்லாம் அறிவு இருக்கிறதோ அங்கெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சுதந்திரமாக சிந்திக்க பழக வேண்டும். எது சுயம் என்று தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
அறிவுக்கு எல்லை இல்லை எனவே அதையே இறைவன் என்றும் அல்லது பிரபஞ்சம் என்றும் சொல்லலாம்.