கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 5 – ராதா மனோகர்



நிமித்தகாரியின் வேட்டைக்களம்!

குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள்

“சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை நன்றாக உபசரித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேச்சுவார்த்தையை முடித்து வழியனுப்பி வைத்தள்.

பாக்கியத்தம்மாளுக்குள் மறைந்திருந்த ஈவு இரக்கமற்ற ஒரு ராஜதந்திரியின் தலையில் கைவத்து விட்டார்கள்.. மெல்லிய மேகங்கள் மெதுவாக மோதும் போதுதான் பயங்கரமான மின்னலும் இடியும் முழங்கும் என்பதை இனி பாலாவோரை வரலாறு பார்க்க போகிறது.

அந்த மக்கள் படிக்க போகும் பாடங்கள் மிகவும் பயனுள்ள ஆட்சியியல் தத்துவங்களாக சரித்திரம் பகரப்போகிறது.

பாலாவோரை குலதிலகன் தற்போதெல்லாம் ஆட்சி நிர்வாகத்தை விட கோவில் கட்டுமான விடயங்களிலேயே அதிக நேரத்தையும் பொருளையும் விரயம் செய்தான். பார்ப்பன பூசாரிகளின் வேதமந்திர தந்திரங்களால் தனக்கு மாபெரும் புகழும் செல்வமும் வந்து விடும் என்ற கனவில் மிதந்தான்.

அவனது நண்பர்களும் மதியாலோசகர்களும் அரசவளங்களை சுரண்டி கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல அவனது நிர்வாக தீர்மானங்களில் பூசாரிகள் மட்டுமல்லாது அழகி மேனகை பிராட்டியாரும் தங்கள் செல்வாக்கை உபயோகிக்க தொடங்கினார்கள். மொத்தத்தில் பாலாவோரை என்ற தேசம் அந்நியர்களின் கைகளுக்குள் வழுக்கி விழுந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவங்கள் முழுவதும் அக்கா பாக்கியத்தமாளுக்கு உடனுக்கு உடன் வந்துகொண்டே இருந்தன. இவ்வரச குடும்பத்தின் நெருங்கிய ஆலோசகர்கள் பட்டியலில் ஒரு காட்டுவாசி குடும்பமும் இடம்பெற்று இருந்தது. அவர்கள் அரண்மனைக்கு வருவதும் போவதும் ஒருவித மறை பொருளாகவே இருந்தது.

அவர்கள் பல ஊர்களுக்கும் செல்பவர்கள் பலவிதமான தொழில்களும் செய்பவர்கள். அவர்களுக்கு நிமித்தகாரர்கள் என்ற ஒரு பெயரும் உண்டு. அந்த குடும்பத்தின் இளைய பெண் அம்மணி மீது பாக்கியத்தம்மாள் பெருமதிப்பு வைத்திருந்தாள்.

அந்த பெண் ஒரு அற்புதமான நிமித்த அறிவு படைத்தவள் என்று அரச குடும்பத்தால் போற்றபடுபவள். அவளை எப்படியாவது தேடி கண்டு பிடித்து கூட்டி வருமாறு தூதர்களை ஏவினாள்.

அவர்கள் புறப்பட்ட அடுத்த நாளே நிமித்தகாரி அம்மணி தானாகவே ஒரு உள்ளுணர்வு தூண்டப்பட்டு பாக்கியத்தம்மாளை தேடிக்கொண்டு வந்தாள். பாகியத்தாம்மாளின் கண்களின் கண்ணீர் வந்து விட்டது. நிமித்தக்காரி அம்மணியின் பிரகாசமான முகத்தை கண்டதுமே சூரியனை கண்ட தேசம் போல் மனம் மிகவும் மகிழ்வுற்றாள். வந்ததும் வராததுமாக அம்மணி வார்த்தைகளை பொழிய தொடங்கினாள்.

“அடிபட்ட தேசம் போல அலைபாய்ந்து மனம் புண்ணாகி போனதேனம்மா?” “அள்ள அள்ள குறையாத கடல் வெறும் பள்ளங்கள் ஆகி விடுமோ என்று பதைப்பதுவும் முறையோ?” “சிறுக சிறுக கட்டிய கோட்டை எல்லாம் உருக்குலைந்து போய்விடுமோ என்று உள்ளம் துடிப்பதுவும் ஏனம்மா?”

என்று ஒரு பாட்டாக பாடிவிட்டு பாக்கியத்தம்மாளின் கண்களை உற்று பார்த்தாள். பாக்கியத்தமாளோ வார்த்தைகளை தொலைத்துவிட்டு மனதிற்குள் அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரம் ஒரு பொல்லாத மௌனம் அங்கு நிலவியது.

ஒரு தேவதை போல வந்த நிமித்தகாரி அங்கும் இங்கும் நோக்கியவாறு கூடாரங்களையும் மரங்களையும் சுற்றி சுற்றி நடந்து கொண்திருந்தாள். யாரோடும் பேசுவது போல தனக்குள் மௌனமாக பேசிகொண்டும் இருந்தாள்.

சற்று நேரத்தில் அமைதியாக வந்து பாக்கியத்தமாளின் முன்பாக நிலத்தில் அமர்ந்து கண்ணை சுழற்றி அங்கிருந்த ஏனையோரை நோக்கினாள். குறிப்பறிந்த அனைவரும் அவ்விடத்தை விட்டு விலகினார்கள்.

பாக்கியத்தம்மாள் மனது திக் திக் என்று மிகவும் தீவிரமாக அடித்தது. நிமித்தக்காரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளின் வலிமை எப்படிப்பட்டது என்பதை அவள் அறிவாள். இந்த பிரபஞ்சம் எதை கூறுகிறது? எதை நோக்கி காலங்களும் சம்பவங்களும் செல்கின்றன என்ற கேள்விகளுக்கு விடை பகரும் விஞ்ஞானத்தை நிமித்தகாரி மிக நன்றாகவே படித்து அறிந்திருந்தாள். அந்த அறிவு அவளது பரம்பரை சொத்து.

கூடாரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே தற்போது இருந்தார்கள். “அம்மா காற்றும் நீரும் நெருப்பும் உன்பக்கம் தானம்மா! ஆனால்” என்று கொஞ்சம் இழுத்தாள். இந்த ஆனால் என்ற வார்த்தை பாக்கியத்தாமாளை கொஞ்சம் பயமுறுத்தியது.

நிமித்தகாரி தொடர்ந்தாள் “இயற்கையை உன்பக்கம் திருப்பும் வேலைக்கு கொஞ்சம் பெரிய விலை கொடுக்க போகிறாய் அம்மா” என்றாள். “என்ன அம்மணி எனக்கு ஒன்றும் புரியவில்லை அது என்ன பெரியவிலை?”

”காற்றும் நீரும் நெருப்பும் உன்பக்கம் வரும் ஆனால் மரங்கள் விலை கொடுக்க போகிறாய் இதற்கு மேல் என்னிடம் விபரங்கள் கேட்க வேண்டாம்” என்று நிமித்தகாரி சொன்னதும் பாக்கியத்தாமாளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது.

மறுபுறம் அவள் பெரியவிலை என்று எதைப்பற்றி குறிப்பிடுகிறாள் என்று விளங்கவில்லை. ஆனாலும் அது ஒரு வேதனை தரக்கூடிய விலை என்று புரிந்தது. பாக்கியத்தம்மாளின் மனவோட்டத்தை படித்த நிமித்தக்காரி மெதுவாக,’சாட்டையை சுழற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி தாமதித்தால் உன் மக்கள் பக்கம் காற்று வீசாது. நீர் பாயாது. நெருப்பு மூளாது. அன்பு, பாசம் என்று தயவு பார்த்தால் வானமும் மண்ணும் நீரும் நெருப்பும் காற்றும் மட்டும் அல்ல வரலாறும் கூட உங்களை மன்னிக்காது” என்று யானை ஓங்கி பிளிறுவது போல அட்டகாசமாக கூறினாள்!

மேற்கூறிய சொற்கள் பாக்கியத்தமாள் ஏற்கனவே எண்ணி கொண்டிருந்த தீர்மானங்களுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது.

அம்மணியின் கைகளை வாஞ்சையுடன் பிடித்துகொண்ட பாக்கியதம்மாள்ஞ் “முற்றும் கற்ற பண்டிதர்கள் என்று பலரும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி கொண்டிருக்கையில் நீ இந்த பிரபஞ்ச ரகசியங்களை, இந்த இளம்பிராயத்தில் கற்று தேர்ந்தமை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். உனது அறிவுரை எனக்கு தற்போது அவசிய தேவையாக இருக்கிறது. வழுக்கியாற்று குளக்கட்டுமான பணிகள் நிறைவேறும் வரை என்னோடு நீ இருக்கவேண்டும் அம்மணி” என்று அன்போடு வேண்டினாள்.

“அது என் விருப்பமும் கூட” என்று அம்மணியும் பதிலுரைந்தாள்.

என்னதான் தம்பியோடு மோதுவதற்கு தயாரான போதும் இன்னும் கொஞ்சம் அன்பாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்.

நேமிநாதர் கட்டுமான கூடாரம் ஒருநாள் அதிகாலை பொழுது நேமிநாதர் கோவில் கட்டுமான பணிக்கூடங்களில் ஒரு அதீத சுறுசுறுப்பு காணப்பட்டது. சிற்ப வல்லுனர்களும் பார்ப்பன பூசாரிகளும் ஏராளமான ஓவிய துணிகளை ஆராய்ந்த வண்ணம் இருந்தனர். கூடவே குலதிலகனும் அவதானித்து கொண்டிருந்தான். அடிக்கடி மேனகை பிராட்டியும் தனது கருத்துக்களை கூறிக்கொண்டு இருந்தாள்.

குலதிலகனுக்கும் மேனகைக்கும் உள்ள அன்னி யோன்னி யத்தை பற்றி யாரும் வித்தியாசமாக நோக்கவில்லை. அங்குள்ள பார்ப்பனர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவி போன்று அவள் அதிகார தோரணையோடு காட்சி அளித்தாள்.

இவர்கள் எல்லோரும் கூடி மிகுந்த சிரத்தையோடு மக்களின் மேம்பாடு பற்றியா விவாதிக்கிறார்கள்?
கோவில் எப்படி அழகாக கட்டப்படவேண்டும் அதன் மூலம் தங்கள் அதிகாரத்தையும் செல்வத்தையும் உறுதிப் படுத்தி கொள்ளவேண்டும் என்றல்லவா வேகவேகமாக செயல் படுகிறார்கள். இவர்களின் கூடாரங்களை நோக்கி அழகான ஒரு ஆபத்து போல பாக்கியத்தமாள் தனது அமைச்சர்கள் மற்றும் தோழிகளோடு மந்தகாச புன்னகையுடன் வந்தாள்.

அக்காவை கண்ட தம்பி மகிழ்வோடு கூடவே கொஞ்சம் தயக்கத்தோடு வரவேற்றான். இதுகாறும் தங்கள் விடயங்களில் எவ்வித சிரத்தையும் காட்டாத அக்கா பரிவாரம் புடை சூழ வந்தால் அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும். எல்லோரும் தங்கள் அதிர்ச்சியை காட்டிகொள்ளாமல் செயற்கையான பணிவோடு நல்வரவு கூறினார்.

பல மணிக்கூறுகள் அக்காவும் தம்பியும் ஏனைய பரிவாரங்களும் நேமிநாதர் கட்டுமானம் பற்றி விரிவாக அளவளாவினர். பாக்கியதம்மாள் மிகவும் ஆர்வமாக கோவில் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்து கொண்டதால் தம்பியும் பார்ப்பன பூசாரிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அடடா அக்காவை நாம் இதுவரை தவறாகவே புரிந்து கொண்டுவிட்டோமே என்று தம்பியும் எண்ணினான்.

எப்படியும் அக்காவின் உதவி தனக்கு கிட்டும் என்ற நம்பிக்கையில் கோவில் கட்டி முடித்தாயிற்றது போல ஒரு திருப்தி அவனுக்கு ஏற்பட்டது.

Previous Post Next Post

نموذج الاتصال