தியானம் என்பது வாழ்வின் மீதான காதலை அழிக்கும் மோசடி!
தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள்.
அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்கக்கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.
நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை, நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால், அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
நான் இங்கே எழுதுவது எனது சொந்த அனுபவத்தில் நான் அறிந்த விடயங்கள்தான்.
மீண்டும் மீண்டும் தியானம் என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த உன்னதமான விடயம் என்று கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.
அது என்னவென்றால் மனதின் வேகத்தை குறைத்து கொஞ்சம் அமைதியை தருகிறது. அந்த அமைதியின் காரணமாக உடலின் ஆரோக்கியத்தில் சில நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் பல தடவைகள் தியானம் செய்வதாலேயே பலவிதமான மன உளைச்சலும் உடல் ஆரோக்கியம் கெடும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவற்றை பற்றி விளக்குவது எனது நோக்கம் அல்ல.
கால்களால் நடப்பதை விட கைகளால் நடப்பதற்கு விசேஷ திறமையும் பயிற்சியும் வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன்?
அதுபோன்ற தேவையே இல்லாத சில இயற்கைக்கு மாறான சில சக்திகள் தியானத்தால் பெற முடியும் என்பது உண்மையே.
ஆனால் அவை எல்லாமே இயற்கைக்கு மாறான திறமைகளே. அவற்றால் ஒரு பிரயோசனமும் இல்லை.
உதாரணமாக தண்ணீரில் நடப்பது அதிசயமானதுதான். ஆனால் அதனால் என்ன பெரிய பிரயோசனம் வந்து விடப்போகின்றது?
ஆனால் அந்த சித்தியை அல்லது திறமையை பெறுவதற்கு ஒரு தியானி இழக்கும் விடயங்கள் ஏராளம்.
இந்த இடத்தில்தான் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
தியானம் செய்து பேரானந்தம் வரப்பெற்றதாக கூறுபவர்கள் உண்மையில் மிகவும் இனிமையான இந்த உலகத்தை ரசிக்கும் அற்புத வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
தியானம் செய்வதாக தங்களைத் தாங்களே ஏமாற்றி அதில் சித்தி அடையாமல் இருப்பவர்கள் அதிஷ்டசாலிகள் என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் தியானம் என்று குறிப்பிடும் பயிற்சிகள் எல்லாமே மனதை இயற்கைக்கு விரோதமாக அடக்கி அல்லது அதை சற்று காணாமல் போனதாக பாவனை பண்ணி ஒரு உன்மத்த நிலையை அடைவதாகும்.
அந்த நிலையை அடைபவர்களின் மனம் மிகவும் பலவீனம் அடைந்து விடும்.
அதைதான் அவர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தல் அல்லது எண்ணங்களை எல்லாம் ஓரிடத்தில் குவிய செய்து பின்பு அந்த இடத்தில் இருந்தும் நீக்கி விடுதல் என்கிறார்கள்.
இது சாத்தியமாவது மிகவும் கடினம். (எனக்கு சாத்தியமானது ஆனால் அதை மறக்க முயற்சித்து ஒதுக்கி விட்டேன்)
ஆனால் அதை நோக்கிய செயல்முறையில் அவர்கள் மனதின் இயல்பான கற்பனை ரசனை போன்ற பல இயற்கையான இயல்புகளை இழந்து விடுகிறார்கள்.
மனதை கடினமாக்கி ஒரு பாறை போன்ற நிலைக்கு வந்தால்தான் தியானம் கைகூடும் என்று கற்பிதம் செய்கிறார்கள்.
அதனால்தான் தியானம் செய்பவர்கள் பலரும் இரக்கம் அன்பு காதல் துக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்றவர்களாக உள்ளார்கள்.
ஆனால் அந்த மென்மையான் குணங்கள் இருப்பதாக நடிப்பதில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
ஏனெனில் தியானத்தின் போதே அவர்கள் தங்கள் மனதை ஏமாற்ற பழகி விடுகிறார்கள். தங்கள் மனதையே ஏமாற்ற பழகியவர்களுக்கு பிறரை ஏமாற்றுவது மிக சுலபம்.
எல்லா மதங்களிலும் ஆத்மீகவாதிகளாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் இரக்கமே இல்லாத மோசடி பேர்வழிகளாகவும் தவறான மனிதர்களாகவும் பரிணமிப்பது ஒன்றும் தற்செயலான விளைவு அல்ல.
உலகில் உள்ள ஏனைய உயிரனங்கள் எல்லாமே இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அற்புதமாகவே வாழ்ந்து வருகின்றன.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் நல்ல பயனும் உண்டு தீய பயனும் உண்டு. அவற்றை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் முழு விடயமும் தங்கி இருக்கிறது.
தியானம் என்பதை மிகவும் பச்சையாக கூறுவதென்றால் அது மனதின் மரணம்!
எமது மனம்தான் எமக்கு இந்த வாழ்வின் வலைப்பின்னல்.
இந்த சக்திமிக்க வலைப்பின்னலை பிய்த்து எறிவதுதான் தியானம் என்பது.
இந்த வலைப்பின்னல்தான் உலகத்தையும் உலகின் அத்தனை இன்ப துன்பங்களையும் எம்மை அனுபவிக்க செய்வது.
இந்த உலகம் மாயை, உடல் மாயை, மனம் மாயை என்பதெல்லாம் வழிகாட்டிகள் என்று நாம் கருதும் பல முட்டாள்கள் கூறுவது.
இதுவெல்லாம் மாயை இவை முக்கியம் இல்லை என்று கருதுவது ஒரு வகை தற்கொலை போன்றது.
பிறந்த எல்லோரும் என்றோ ஒருநாள் உலகை விட்டு போகத்தான் வேண்டும். அது வரும் நாள் வரட்டும்.
அதுவரை நாம் வந்த இந்த அழகிய உலகில் வாழ்ந்து பார்ப்பது எல்லா உயிரனங்களுக்கும் கிடைத்துள்ள இயற்க்கை வரம்.
இந்த அற்புத வரத்தை கேவலமாக காட்டி அதை சிறுமைப்படுத்தும் முயற்சியை மதங்களும் வழிகாட்டிகளும் ஆயிரக்காண ஆண்டுகளாக போதித்து வந்துள்ளனர்.
உலகம் இதுவரை சந்தித்த யுத்தங்களும் அழிவுகளும் கூட இப்படிப்பட்ட மதங்களினாலும் வழிகாட்டிகளாலும்தான் எனபது புறந்தள்ள முடியாத வரலாற்று உண்மையாகும்.
மனித மனதிற்கு இந்த வாழ்வு ரசனை மிகுந்ததாக இருக்கவேண்டும். ரசனை இல்லாவிடில் வாழ்க்கை வெறுத்து விடும். வெறுத்துப்போன மனமானது சதா அழிவை நோக்கியே செல்லும்.
தன்னையும் அழித்து தான் சார்ந்த சமூகத்தையும் அழித்துகொள்ளும்.
மதங்கள் மக்களின் ரசனைக்கு எப்போதும் எதிரியாகவே இருந்திருக்கின்றன.
அவர்கள் வியாபாரம் நடக்க வேண்டுமே?
மதங்களை பின் பற்றுவோர் அநேகமானோர் ஒரு பகுதிநேர மதவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் அதனால்தான் உலகம் இன்று கொஞ்சமாவது வாழ்வின் விழுமியங்களை பேணும் தன்மையில் உள்ளது.
தியானத்தில் ஈடுபடுவோரிலும் அநேகமானோர் ஒரு பகுதிநேர பொழுது போக்காகவே தியானம் செய்வதாக பாவனை புரிகின்றனர். அதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அது ஒரு விளையாட்டு போன்றது. விளையாட்டுக்கள் நல்லதே.
உண்மையைகவே தியானம் செய்து அதில் உச்ச நிலையை அடைபவர்கள் சமாதி அடைவதாக கூறப்படுகிறது.
மனதை இழந்தவர்கள் ஏற்கனவே இறந்த மனிதர்களாகி விடுகிறார்கள்.
அவர்களுக்கு இந்த உலகில் மிச்சம் இருப்பது ஏதும் இல்லை. உண்மையில் அவர்கள் மனம் திவாலாகி விடுகிறது. அதாவது வங்குரோத்து அடைந்து விடுகிறது.
இது மிகவும் பரிதாபத்திற்கு உரிய நிலை. அவர்களுக்கு உலகில் உள்ள பற்று நீங்கி விடுகிறது.
பற்று என்று நான் இங்கே கூறுவது வாழ்க்கையின் மீதான காதலைத்தான்.
எல்லா உயிரனங்களுக்கும் இயற்கை கொடுத்த வரம்தான் வாழ்க்கையின் மீதான காதல்.
அந்த காதலின் வெளிப்பாடே சக மனிதர்கள், சுற்றி உள்ள உலக்த்தின் மீதான அன்பு எல்லாம்.
இந்த வாழ்வு மீதான காதலை அடியோடு கொன்றுவிடுவதுதான் ஆன்மீகத்தின் உச்ச நிலையென்றும் அதை அடைவதற்கான உயர்ந்த வழிதான் தியானம் என்றும் காலா காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள்.
தியானத்தால் கிடைக்ககூடிய பலன் என்பது எல்லோரும் இறந்தபின்பு கிடைப்பதுதான். தியானம் எனபதே சமாதியை நோக்கிதானே.
அது தானே வரும் சமாதி என்று சொன்னாலும் மரணம் என்று சொன்னாலும் ஒன்றுதான். வெறும் வார்த்தை விளையாட்டு. மனிதர்களை அடிமைகளாக்க மதங்கள் கண்டு பிடித்த எத்தனையோ பித்தலாட்டங்களில் அதுவும் ஒன்று.
மென்மையான அன்பான மனிதர்களாக வாழ்ந்தாலே இயற்கையில் எமக்கு தேவையான் எல்லா சக்தியும் அறிவும் எம்மை வந்து சேரும்.
இயற்கையின் சக்தியை குறைத்து மதிப்பிடவேண்டாம்.
ஆடு, மாடு, நாய், பறவை, மரங்கள், செடி, கொடி போன்றவற்றை விட மனிதர்கள் மட்டும் எதோ வித்தியாசமான் பிறவிகள் என்று எண்ணவேண்டாம்.
என்ன காரணம் கொண்டும் மனிதர்கள் தங்கள் மனதை இழக்கவே கூடாது. அதுதான் வாழ்க்கையை உங்களுக்கு வழங்கும் மேடை.