பில்லியன் டாலர் கிராமம்! - Ilango Ramasamy



தனது நுழைவாயிலில் “Number one village under the sky” எனப் பெருமை பொங்க எழுதி வைத்துக் கொண்டு பார்வையாளர்களை வரவேற்கும் ஹூவாக்ஸி (Huaxi) கிராமமும் (???), ஒரு காலத்தில் உலகின் மற்ற கிராமங்களைப் போல அழுது வடிந்து கொண்டு தானிருந்தது. மூணு வேளை சோற்றுக்கே குட்டிக் கரணம் போட வேண்டிய நிலை.

1960 களில் அந்தக் கிராமத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த “வூ ரென்போ” என்ற மனிதருக்குப் பெரும் கனவுகள் இருந்தன. தனது கனவுகளுக்கு உரு கொடுக்க, தங்களது கிராமத்தின் சார்பாக உழைக்கும் மக்களை ஒன்று திரட்டிப் புதிய புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினார்.

டெக்ஸ்டைல்ஸ், ஸ்டீல், கெமிக்கல்ஸ் என உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஆரம்பித்து இன்று நிதி, சுற்றுலா போக்குவரத்து என அவர் உருவாக்கிய மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து கிடக்கின்றது. ஆண்டிற்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சீன அரசின் செலவில் அனுப்பி வைக்கப் படும் குழுவினர் என்பதை மனதில் இருத்திக் கொண்டு மேலே படியுங்கள்.

1960ல் 600 ஆக இருந்த Huaxi குழுமத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கை இன்று 2000 ஐ எட்டியுள்ளது. இந்தக் கிராமத்து மக்கள் அனைவருக்கும் குடியிருக்க மிகப் பெரிய பங்களாக்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சொகுசு கார், குழந்தைகளுக்கு சீனாவின் மிகச்சிறந்த கல்வி, உயர் தர மருத்துவம், சமையல் எண்ணை என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அது மட்டும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் கம்பெனியின் லாபத்தில் ஐந்தில் ஒரு பங்குப் பணம் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாகப் போய்ச் சேருகிறது.

இதன் காரணமாக இக்கிராம மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது 80 லட்ச ரூபாய் சேமிப்பு இருக்கிறதாம், இக்கிராம மக்களின் சராசரி ஆண்டு தனிநபர் வருமானம் 25,000 அமெரிக்க டாலர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் எனப் பார்த்துக் கொள்ளுங்கள்,

ஆனால் ஒரு சிக்கல்- இந்த ஊரில் வாழ்பவர்கள் வாரத்தில் ஏழு நாளும் வேலைக்குப் போக வேண்டும். ஊருக்குள் டாஸ்மாக், பப், க்ளப், கேசினோ என எந்தக் குடி,, கூத்து, கும்மாள வகையறாக்களுக்கும் அனுமதியில்லை. வேலை முடிந்து ஆஃபீஸில் இருந்தோ, ஃபேக்டரியில் இருந்தோ நேரே வீட்டிற்கு மட்டுமே போக முடியும். வெளிநாட்டுப் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுக்க வெல்லாம் முடியாது, அதே போல இருக்கும் சொத்தை விற்று விட்டு வேறெங்காவது சென்று செட்டிலாகிவிடலாம் என ஓவர் ஸ்மார்ட்டாகவெல்லாம் திட்டம் போட முடியாது.

ஊரைவிட்டுச் செல்ல விரும்பினால் அனைத்தையும் விட்டு விட்டு வெறுங்கையை வீசிக் கொண்டு செல்ல வேண்டியதுதான். இப்படி ஊரை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் கண்டு ரசித்திட உலகின் மிகப் புகழ்பெற்ற கட்டிடங்களின் மாதிரிகளை அச்சு அசலாகப் பிரதியெடுத்தது போன்ற டம்மிகளைக் கட்டி ஒரு தீம் பார்க்கையும் ஹுவாக்ஸியில் உருவாக்கி வைத்துள்ளனர். சீனப் பெருஞ்சுவர், அமெரிக்க சுதந்திர தேவி சிலை, சிட்னி ஒபரா ஹவுஸ், வெள்ளை மாளிகை என அங்குள்ள காட்சிக் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் மலைக்க வைப்பவையே. ஆனால் அந்தப் பூங்காவுக்குச் சென்று உல்லாசமாக நேரத்தைச் செலவிட அந்தக் கிராம மக்களுக்கு நேரம் இருக்குமா என்பது கேள்விக் குறியே! அது தான் வாரத்தில் ஏழு நாட்களும் வேலைக்குப் போக வேண்டுமே? யாருக்கும் தகுந்த காரணமின்றி விடுமுறை கிடையாது. இச்செய்திகளை வாசித்த பொழுது, “தடபுடலா விருந்துச் சோத்தப் பரிமாறிப் புட்டு வாயத் தெச்சு விட்ட கதையாவுல்ல இருக்கு?” என என் மனது கிடந்து அடித்துக் கொண்டது.

ஊருக்குள் நடப்பவர்கள் யாரும் எங்கும் மழையில் நனைந்தோ, வெய்யிலில் காய்ந்தோ சிரமப் படக் கூடாதென ஊரைச் சுற்றிலும் கூரை வேயப்பட்ட நடை பாதை அமைக்கப்படும் அளவிற்கு “வூ ரென்போ” என்ற அந்தத் தலைவர் தன்னுடைய கிராமத்தைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருந்திருக்கிறார்.

அவருடைய சீரிய தலைமையில் அசுர வளர்ச்சி அடைந்த இந்தக் கிராமத்தை மாதிரிக் கிராமமாக முன்னிருத்தி சோஷலிஷத்தின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றியது சீன அரசாங்கம். பிழைப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடக்கிந்தியர்களைப் போல பக்கத்துக் கிராமங்களில் இருந்து ஹூவாக்ஸிக்கு வேலை தேடி சாரிசாரியாக மக்கள் வந்தவண்ணமே இருந்தனர்.

ஆனால் வெளியாட்களுக்கு, மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்படும் எந்த உரிமையும், சலுகையும் கிடையது. அவர்களால் முடிந்ததெல்லாம் நமது ஊர் சாண்ட்ராக்ட் தொழிலாளிகளைப் போல தினக்கூலிக்கு மாடாய் உழைத்து விட்டு ஹூவாக்ஸியின் செழிப்பைப பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவது மட்டுமே.

பல்கிப் பெருகி செல்வம் கொழிக்கும் நிறுவனமாக வளர்ந்த ஹூவாக்ஸி கார்ப்பரேஷன் ஒரு காலகட்டத்தில் சீனப் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது: ஆனால் ஒரு காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழில் போட்டி, கடன் சுமைகள் எனப் பிரச்சினைகள் ஹூவாக்ஸியின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டதாகவும், இந்தப் பெரும் கப்பல் புயலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் சோஷலிஸத்துக்கு எதிரான மேற்குலக ஊடகங்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டன.

நிறுவனர் வூ ரெனபோவின் மறைவுக்குப் பின் அவருடைய இளைய மகன் ஹூவாக்ஸியின் பிரசிடெண்ட்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிறுவனத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புக்களிலும் வூ ரென்போவின் குடும்பத்தினரும், உறவினர்களுமே ஆதிக்கம் செலுத்துவதாகவும் இது நவீன மன்னராட்சி எனவும் விமர்சனங்கள் ஒங்கி ஒலிக்கின்றன. ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய மாளிகைகளில் வசிக்கும் 2000 குடும்பங்களைத் தவிர பக்கத்துக் கிராமங்களில் இருந்து வந்து வசிக்கும் 25000 பேரும் கடை நிலை ஊழியர்களாக மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரியும் மேலும் 30,000 கூலித் தொழிலாளர்களும் வசிக்கும் இக்கிராமத்தில் மருந்துக்குக் கூட சமத்துவமும், சகோதரத்துவமும் பேணப் படுவதில்லை என்பதே உண்மை.

உற்பத்தித் துறையில் மட்டும் கவனம் செலுத்தினால போதாதெனவும், தகவல் தொழில் நுட்பவியல், வணிகம், நிதி மற்றும் சுற்றுலாத் துறைகளே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி ஹுவாக்ஸியைக் கொண்டு செல்ல முடியும் என்ற முடிவில் 1076 அடி உயரத்தில் 74 மாடிகளைக் கொண்ட ஈஃபில் டவரை விட உயரமான ஒரு மாபெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டி முடித்துள்ளனர். இதற்கு ஆன செலவு இன்றைய தேதியில் மூவாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய்களுக்கும் சற்று அதிகம், இந்த ஹோட்டலின் உச்சியில் ஒரு மிகப் பெரிய தங்கப் பந்தைப் போன்ற சுழலும் ஹோட்டல் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த வானளாவிய கட்டிடம் லண்டனிலும்,, டோக்கியோவிலும் உள்ள எந்தக் கட்டிடத்தையும் விட உயரமானதென்றால் இந்தக் கிராமத்தின் வீச்சு எவ்வளவு உயரம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஹோட்டலின் அறுபதாவது மாடியில் ஆயிரம் கிலோ எடையுள்ள சொக்கத் தங்கத்தாலான ஒரு காளை மாட்டுச் சிற்பம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்தச் சிற்பத்தின் உட்புறத்தைப் போலவே ஹூவாக்ஸியின் உட்புறமும் எதிர்காலமும் வெற்றிடமே யென்ற விமர்சனத்திற்கு அக்கிராமத்திடம் இருந்து மெளனம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

இந்தக் கிராமத்தின் கதையைத் தேடி நான் வாசித்த பல கட்டுரைகளுள் ஒன்று ,”இது ஒரு போட்டம்கின் (Potemkin) கிரமமா?” என்ற கேள்வியுடன் முடிந்திருந்தது.

அது என்னது போட்டம்கின் கிராமம் எனத் தேடினால் இன்னும் இரண்டு சுவையான கதைகள் கிடைத்தன.

நேரமும் சக்தியும் இருந்தால் அவற்றைப் பற்றியும் எழுத முயற்சிக்கின்றேன்.

Previous Post Next Post

نموذج الاتصال