இந்துத்துவர்களுக்கு ஒரு கடிதம் - Karthik Velu



ராகுல் காந்தி பாராளுமன்ற அவை நீக்க செய்தி பல சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இது யதேச்சையானது அல்ல .எல்லா நாட்டிலும் உள்ளூர் அரசியல் உள்ளது. அங்கும் வலது /இடது என்ற ஊடக சார்பு உள்ளதுதான் இருந்தும் இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

இந்த கவனத்திற்குப் பின் ஒரு துணுக்குறல் உள்ளது. இப்படி ஒரு நிகழ்வு பாகிஸ்தானில் நடக்கலாம், ஶ்ரீலங்காவில் நடக்கலாம், மலேசியாவில் நடக்கலாம் ஆனால் மாபெரும் ஜனநாயகமான இந்தியாவில் நடக்கும் என்று பலரும் மெய்யாகவே எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் பின் ஒரு அசெளகரியமான மெளனமும் உள்ளது. இதற்கு பின் வேறு என்னவெல்லாம் நடக்குமோ என்று.
***
தற்போதைய இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் எம்பிக்களில் 43 % பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது. அதாவது மொத்தம் உள்ள 539 எம்பிகளில் 233 பேர் மீது ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது அதை அவர்களே வேட்புமனு தாக்கலின் போது ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் சரிபாதி ஆளும்கட்சி எம்பிகள் (116 ) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பலர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 20 வழக்குகளுக்கு மேல் உள்ள எம்பிகள் பலர் உள்ளனர் – முக்கிய பொறுப்புகளும் அவர்கள் கைவசம் உள்ளது. இந்த 233 பேரில் 159 பேரின் மீது மிகத் தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன – வன்புணர்வு, கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்றவை இதில் அடங்கும்.

அதாவது பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் ஒருவர் மீது பல வருடம் சிறைசெல்ல வேண்டியிருக்கும் வகையான மிகத்தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன .இந்த தகவல் திரட்டப்பட்டது 2019 தேர்தலின் போது . இருந்தும் இதுவரை இதில் எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்?
***
அவதூறு ( Defamation ) என்பது பெரும்பாலும் ஒரு சிவில் வழக்காகவே உலகம் முழுதும் பார்க்கப்படுகிறது, வெகு அரிதாகவே அவை கிரிமினல் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன. அப்படி கிரிமினல் குற்றமாகக் கருதப்பட அது பல வரையறைகளை கடந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியலில் அது political freedom என்பதோடு இணைத்தே பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒரு அரசியல்வாதி தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றவில்லை ஏமாற்றிவிட்டார் என்று அவர் மேல் நாம் வழக்கு தொடுக்கமுடியாது.

இந்திய அவதூறு சட்டங்களான IPC 499,500 எல்லாம் 1860 ல் உருவான காலனியாதிக்க கால சட்டங்கள், சில மாற்றங்களுடன் அவை அப்படியே இன்றும் தொடர்கின்றன. காலனியாதிக்க ஆட்சியில் அவர்கள் உருவாக்கிய பல சட்டங்கள் இந்தியர்களை அடக்கி ஒடுக்கவென்றே உருவாக்கப்பட்டன. இன்று ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருப்பதும் இந்த சட்டத்தின் கீழ் தான்

நிலமை இப்படி இருக்க , ஒரு அவதூறு வழக்கில், முக்கியமான எதிர்கட்சித் தலைவர் ஒருவரை 150 வருட பழமையான ஒரு பிரிட்டிஷ் கால சட்டத்தை பயன்படுத்தி, குற்றம்சாட்டி மேல் முறையீட்டுக்கு கூட அவகாசம் அளிக்காமல் அவசர அவசரமாக அவை நீக்கம் செய்ய வேண்டிய தேவை என்ன?
***
சிறிது நியாய உணர்வுள்ள இந்துத்துவ நண்பர்களிடம் நான் கேட்பது இதுதான் .ஒழுங்கு, தேசபக்தி, மரபு, தர்மம், அமைதி, பக்தி என்பதையெல்லாம் முன்வைக்கும் உங்கள் கோணத்தில் இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள். இதற்கு ‘சட்டப்படி தவறு’ என்னும் பதில் எவ்வளவு சோகையானது என்பதை உங்கள் மனசாட்சி அறியும் . இது ராகுல் குறித்ததோ காங்கிரஸ் குறித்ததோ அல்ல – இது இந்திய ஜனநாயகம் குறித்தது.

இங்கு அரசு என்பது நீங்கள் தான். நீங்கள் அசராது அளிக்கும் ஆதரவு தான் இந்த எல்லை வரை நமது ஜனநாயகத்தை நெட்டித் தள்ளி வந்திருக்கிறது. இன்னும் சில அடிகள் தள்ளினால் அதள பாதாளம் தான். அந்தப் புள்ளிவரை சென்று விட்டால் பின் உங்கள் கைகளில் ரத்தக் கறை இல்லை என்பதை நீங்கள் மறுக்கவே முடியாது. குற்றம் சுமத்தவென்று இதைச் சொல்லவில்லை this is a request to reflect upon.

Previous Post Next Post

نموذج الاتصال