ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு? - Santosh Paul



தி லீஃப்லெட் இணைய தளத்தில் Nehru in the age of Coronavirus என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எப்படி இந்தியாவை ஒரு அறிவியல் சிந்தனையின் அடிப்படையிலான ஒரு தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்; அதற்காக என்னவெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டா் என்று சொல்வதுதான் அந்தக் கட்டுரை.

அந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1. நோய்கள், ஏழ்மை, துயரங்களில் இருந்து அறிவியல் விடுவிக்குமென நேரு நம்பினார். ஒரு தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதில் அறிவியலின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார்.

2. நேருவின் அறிவியல் மீதான ஆர்வம் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்த காலத்திலேயே உருவாகிவிட்டது. அவர் காலத்தின் முக்கியமான விஞ்ஞானிகளான ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன் போன்றவர்களுடன் அவருக்கு நல்ல நெருக்கமிருந்தது.

3. நேரு பிரதமரானவுடன் இந்தியாவில் அறிவியல் கட்டமைப்பை இருவிதங்களில் உருவாக்க நினைத்தார். முதலில் மேலை நாடுகளில் இருப்பதைப் போன்ற அமைப்புகளை உருவாக்குவது. 1949ல் மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு அவர் மேற்கொண்ட விஜயமே, இந்தியாவில் முதல் ஐந்து ஐஐடிக்களை உருவாக்க காரணமாக அமைந்தது. அவை, காரக்பூர் (1950), பாம்பே (1958), மெட்ராஸ் (1959), கான்பூர் (1959), தில்லி (1961).

4. இரண்டாவதாக, அந்த காலகட்டத்தில் முக்கியமான அறிவியலாளர்களாக இருந்தவர்களை தேசத்தைக் கட்டியமைப்பதில் இணைத்துக்கொண்டார். அவர்கள் விக்ரம் சாராபாய், சர் சி.வி. ராமன், ஹோமி ஜே பாபா, சதீஷ் தவான், எஸ்.எஸ். பட்நாகர் ஆகியோர் அவர்களில் சிலர்.

5. அறிவியலை வளர்த்தெடுக்க அரசின் ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொண்டார் நேரு. அவர் காலகட்டத்தில்தான் அணுசக்தித் துறை (1954), பாபா அணு ஆய்வு மையம் (1954), தி ஃபிஸிகல் ரிசர்ச் லேபோரட்டரி (1947), இஸ்ரோ (1962) ஆகியவை உருவாக்கப்பட்டன. கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் மேம்படுத்தப்பட்டது.

6. எஸ்எஸ் பட்நாகரின் தலைமையில் நேஷனல் கெமிக்கல் லெபோரட்டரி, நேஷனல் ஃபிஸிகல் லெபோரட்டரி, ஃப்யூயல் ரிசர்ச் ஸ்டேஷன், க்ளாஸ் & செராமிக்ஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட், நேஷனல் மெட்டலார்ஜிகல் லெபோரட்டரி ஆகியவை உருவாக்கப்பட்டன.

7. நேருவைத் தூற்றுவோர் இப்போதைப் போலவே அப்போதும் இருந்தார்கள். போலித் தேசிய உணர்வை வைத்து அவரது அறிவியல் முயற்சிகளை முடக்கப்பார்த்தார்கள். ஆனால், அறிவியலுக்கு நாடு என்ற வரையறை கிடையாது என்றார் நேரு.

8. 1700களில் இங்கிலாந்தில் பெரியம்மை பரவியபோது அரசின் ஆன்-இன் மகன், பட்டத்து இளவரசன் அதற்குப் பலியானான். பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் அதற்கு பலியானார்கள். அப்போது எப்படி பெரியம்மை அந்தஸ்து பார்க்காமல் பலிவாங்கியதோ, அதேபோல இப்போது கோவிட் – 19 பரவ ஆரம்பித்துள்ளது. இந்தத் தருணத்தில்தான், பெரும் எண்ணிக்கையில் பெரும் நன்மைகளைச் செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவு முக்கியத்துவம் பெறுகிறது.

9. இப்போது சோஷலிஸ்ட் என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க பெரும் முயற்சி நடக்கிறது. ஆனால், இந்த சோஷலிஸ கட்டமைப்புதான் பெரியம்மை, போலியோ, ப்ளேக் போன்ற பெரும் நோய்களை ஒழித்தது.

10. இந்தியா சுதந்திரம் பெறும்போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயத்தில் வாழ்ந்தார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சி 1953ல் துவங்கியது. பத்தே ஆண்டுகளில் நிலைமை மாறியது. உள்ளாட்சி அமைப்புகளே அந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும் என்ற அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

11. 1951ல் பெரியம்மையினால் 1,48,000 பேர் செத்துப்போனார்கள். பத்தாண்டுகளில் இது 12,300ஆகக் குறைக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

12. 1940களில் இந்தியாவில் 3 சதவீதம் பேரின் மரணத்திற்கு ப்ளேக் நோய் காரணமாக இருந்தது. 1950களில் அந்நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டது. பால்வினை நோய்கள், தொழுநோய், ஃபிலாரியாசிஸ், டிப்தீரியா, டைஃபாய்ட், நிமோனியா, மெனிஞ்ஜிட்டிஸ், ராபிஸ் ஆகியவை இந்தியா முழுவதும் கொத்துக்கொத்தாக ஆட்களை பலிவாங்கின. இவை அனைத்துமே இந்தியாவின் பொது சுகாதார அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. அரசு முன்னெடுத்த தடுப்பூசித் திட்டங்கள், கட்டுப்படியான செலவில் கிடைத்த மருத்துவ உதவிகள் இதற்கு உதவின.

13. கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தேவை. அதற்கு மருத்துவக் கல்லூரிகள் தேவை. 1946ல் 15ஆக இருந்த மருத்துவக் கல்லூரி, 1965ல் 81ஆக உயர்ந்தது. மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 1,200லிருந்து 10,000ஆக உயர்ந்தது.

14. உலகம் ஒரு கொள்ளை நோயோடு போராடிக்கொண்டிருக்கும்போது, நேரு முன்னெப்போதையும்விட இப்போது தேவைப்படுகிறார். பொதுச் சுகாதாரத்தில் முதலீடு செய்த சீனா, தைவான், வியட்நாம், சிங்கப்பூர், க்யூபா ஆகியவை வளர்ந்த நாடுகளைவிட சிறப்பாக கொரோனாவை எதிர்கொள்கின்றன.

15. 1956ல் ஆல் இந்தியா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் உருவாக்கப்பட்டது. 1958ல் மௌலானா ஆஸாத் மெடிகல் கல்லூரி உருவாக்கப்பட்டது. 1961ல் கோவிந்த் வல்லப பந்த் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிகல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் உருவாக்கப்பட்டது.

16) (எனது இணைப்பு) 1961இல் தனியார் மருந்து நிறுவனங்களின் கொள்ளையைக் கட்டுப்படுத்தIDPL இந்தியன் ட்ரக்ஸ் அண்டு பார்மசூடிகல் லிமிடெட் உருவாக்கப்பட்டது.ஏராளமான மருந்துகள், உபகரணங்கள் குறைந்த விலையில் எளிதாக கிடைத்தன.
தனியார் மோகம்
அதன்பின்தான் மருந்து விலைகள் கட்டுக்குள் வந்தன. பின்னர் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சியால் மெல்ல மெல்ல அந்த நிறுவனம் மூடப்பட்டது. இப்போது கார்ப்பரேட்டுகள் கொழிக்கின்றன.

[இந்தக் கட்டுரையை எழுதிய Santosh Paul உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர். டாக்டர் ஹர்ஷ் ஹெக்டே ஒரு எலும்பியல் நிபுணர்] .

Previous Post Next Post

نموذج الاتصال