“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ”
மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும்.
தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும், கட்சிக்குள்ளும் நடக்கிற விஷயங்களை முதலமைச்சருக்கு உளவு சொல்லக்கூடிய அதிகாரிகளும் அந்த சுவரை எழுப்பியிருந்தார்கள்.
கட்சித் தொண்டர்கள் மற்றும், நிர்வாகி களுக்கு இடையிலான இடைவெளியும், அதிருப்தி யும் முதலமைச்சருக்கு உரியவிதத்தில் சொல்லப் படவில்லை. அமைச்சர்கள்கூட முதலமைச்சரை சந்திக்கவிடாமல் அந்தச் சுவர் தடுத்தது.
உண்மை நிலையை முதலமைச்சருக்கு உணர்த்தும் நல்லெண்ண அடிப்படையிலான செய்திகள்கூட அவரிடமிருந்து தடுக்கப்பட்டன.
ஆட்சிக்கு அடித்தளமான கட்சிக்குள் நடப்பவற்றைக்கூட மறைத்து, முதலமைச்சரை ஒரு மாய உலகத்தைக் காட்டி மயக்கியது அந்தச் சுவர். திராவிட மாடல் என்ற பெயரில் சிலவற்றை திட்டமிட்டு அவருக்கு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அதை முதலமைச்சரே நம்பும்படி செய்தது.
ஒரு விஷயம் நடந்து, அது சர்ச்சையில் முடிந்த பின்னரே முதலமைச்சருக்கு தெரியும் அளவுக்கு அந்தச் சுவர் இருந்தது.
அறிவாலயத்துக்கு நேரம் ஒதுக்குங்கள் தலைவரே. தொண்டர்களையும் கட்சி நிர்வாகி களையும் சந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள் தளபதி என்று கட்சிக்காரர்களும், நலம் விரும்பி களும் எழுப்பிய வேண்டுகோள்கள்கூட முதலமைச்சரை நெருங்கவிடவில்லை.
கோட்டைக்குள் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் குறித்து 8-4-2022 தேதியிட்ட உதயமுகம் வார இதழில் கவர் ஸ்டோரி எழுதியிருந்தோம். அந்த கவர் ஸ்டோரி கட்சிக்காரர்கள் மத்தியிலும் பல்வேறு துறையினர் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது.
அதைப்போலவே, 22-4-2022 தேதியிட்ட உதயமுகம் இதழிலும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியாலும், ஐஏஎஸ் அதிகாரிகளாலும் ஏற்படுகிற நிர்வாக குளறுபடிகள் குறித்தும் கவர் ஸ்டோரி எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரை கல்வித்துறையினர் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதிகாரிகளின் முடிவுகளால் நிர்வாகத்தில் ஏற்படுகிற குளறுபடிகளை வெளியிட்டாலும், அவை முதல்வரின் கவனத்துக்கு போனதா என்பது ஐயமாகவே இருந்தது.
இந்நிலையில்தான் 3-6-2022 தேதியிட்ட உதயமுகம் இதழில் அதிகாரிகளின் பிடியிலிருந்து விடுபடுவாரா முதலமைச்சர் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியிருந்தோம்.
இதற்கிடையே முதலமைச்சர் அவர்கள் தனது அமைச்சர்களின் கூட்டத்தையும், மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தையும் அடுத்தடுத்து கூட்டினார். இந்தக் கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
தொண்டர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உறுதிபட கூறியிருந்தார். ஆனால், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்புகளை அதிகாரிகள் தடுத்திருப்பதை முதலமைச்சருக்கு யார் சொல்வது?
இந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது நான்காண்டு கால ஆட்சியில் அவருக்கு உருவாக்கப்பட்ட பல பிரச்சனைகளை எப்படி முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுத்து தனது ஆட்சியை தக்கவைத்து, முக்கியமான அறிவிப்புகளை உரிய நேரத்தில் அறிவித்து சமாளித்தார் என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.
தன்னை சுற்றி பின்னப்பட்ட சதிகளை உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து அறிந்து, செயலாளர்கள் மூலம் அந்தச் சதிகளை முறியடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். நீட் பிரச்சனையாகட்டும், எதிர்க்கட்சிகள் கிளப்பும் பிரச்சனைகளாகட்டும் அவற்றை திசைதிருப்ப எடப்பாடி பழனிச்சாம் வெளியிட்ட அறிவிப்புகள் முக்கியமானவை.
கொரோனா உதவித்தொகை குறித்து அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிய நேரம் முக்கியமானது. அதுபோலவே நீட் பிரச்சனை பெரிய அளவில் அவருக்கு எதிராக எழுந்தபோது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பு அதை நீர்த்துப்போக செய்தது.
ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக பல விஷயங்களில் அமைதியாக இருக்கும் நிலையில், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்படும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் எடுத்த விஷயங்கள் முதலமைச்சரை கடுப்பேத்தின.
முக்கியமாக புதிய தலைமைச்செயலகத்துடன் துணை நகரம் அமைக்கும் திட்டம், ஜிஸ்கொயர் விவகாரத்தை சபரீஸனோடு கோர்த்து விட்டது, டெண்டர் விடப்படுவற்கு முன்னரே, அதுகுறித்த விவரங்கள் என்று சிலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ஆகியற்றை குறிப்பிடலாம்.
ஆட்டுக்குட்டி கத்துது என்று அண்ணாமலையை புறந்தள்ளினாலும், தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்நிலையில்தான், சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் என்று அடுத்தடுத்து முதலமைச்சரின் நடவடிக்கை கோட்டை வட்டாரத்தை அதிர வைத்தது.
ஆனால் அந்த மாற்றங்களின் போது முதலமைச்சர் சந்தித்த அனுபவம்தான் அவருக்கு உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியது.
முதலமைச்சரின் நம்பிக்கை வட்டத் துக்குள் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று உதயசந்திரன் மேற்கொண்ட தந்திரங்கள் அம்பலமாகின.
ஏற்கெனவே அமுதா ஐ.ஏ.எஸ்.சை முதலமைச்சரின் செயலாளர்களில் ஒருவராக கொண்டுவருவதை தடுத்தவர் உதயசந்திரன்தான் எனக் கூறப் பட்டது.
இப்போதைய மாற்றத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்பில் செயல்பட்ட பிரதீப் யாதவை தனது உள்வட்டத்துக்குள் கொண்டுவர முதலமைச்சர் விரும்பி னார். ஆனால், உளவுத்துறை அதிகாரி களை பயன்படுத்தி தில்லாலங்கடி வேலையைச் செய்து, முதலமைச்சரின் விருப்பத்தை திசைதிருப்ப உதயசந்திரன் முயன்றார். இதையடுத்து, பிரதீப்பை நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமிக்கும்படி பிடிவாதமாக சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலமைச்சர் சொல்கிறபடி செய்ய வேண்டிய ஒரு அதிகாரி இந்த அளவுக்கு திருகுதாள வேலைக ளில் ஈடுபட்டிருப்பது கோட்டை வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
உதயசந்திரனை விரும்பிக் கொண்டுவந்த முதல்வர் இப்போது அவரை வெளியேற்ற நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். •
-உளவாளி