பள்ளிக்கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆணையர் பதவி! (22-04-2022 அன்று உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி)





கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இள்கே தருகிறோம்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம் என்று மாற்றியிருப்பதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது. பெயரிலேயே கமிஷன் இருப்பதால் அந்த மாதிரியான பிரச்சனை என்று நினைத்துவிட வேண்டாம்.

எதற்காக முன்பிருந்த பெயரை மாற்றினார்கள் என்பதே பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது. ஒரே ஒரு கமிஷனர்தான் இருக்கிறார். ஆனால், 9 இயக்குனர்களுடன் 16 இணை இயக்குனர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஜனநாயக முறைப்படி பார்த்தாலும், இயக்குனர்களே பெரும்பான்மையாக இருக்கிற ஒரு நிர்வாக அமைப்புக்கு கமிஷனரகம் என்று பெயர் மாற்றியதே தவறு.

எந்த ஒரு துறையாக இருந்தாலும், அந்தந்த துறையிலிருந்து படிப்படியாக அனுபவம் பெற்று உயர் பொறுப்புக்கு வருபவர்களுக்கு மட்டுமே அந்தந்தத் துறையின் பிரச்சனைகள் அத்துபடியாக இருக்கும்.

காவல் துறையில் டிஜிபி பதவியாக இருக்கட்டும், மருத்துவ துறையில் மருத்துவக் கல்வி இயக்குனராக இருக்கட்டும் அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத பொறுப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்புக்கும் உண்டு.

பள்ளிக்கல்வி இயக்குனர் என்பவர் அதற்குரிய அனுபவங்களுடன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும். அடுத்தடுத்தும் அந்த பொறுப்புக்கு, அதே அனுபவங்களுடன்தான் பொறுப்புக்கு வருவார்கள். அவர்களை மாநிலம் முழுவதும் உள்ள கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் எளிதில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளை சொல்ல முடியும். அவர்களுடைய பிரச்சனைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

மருத்துவம் சாராத ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மருத்துவ கல்வி இயக்குனராக இருந்தால் எப்படி ஒரு ஆபரேசன் குறித்து புரிந்துகொள்ள முடியாதோ, அதேமாதிரிதான் பள்ளிக்கல்வித் துறையும்.
கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள் நிலவுகின்றன. மாணவர்களின் நடத்தையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆசிரியர் மாணவர்கள் இடையிலான உறவுகள் சேதமடைந்துள்ளன.

இதற்கு பல்வேறு சமூக காரணங்கள் உள்ளன. நாட்டுக்கு ராஜா என்றாலும் பள்ளிக்கு அவன் பிள்ளைதான் என்ற பழமொழி இப்போது மாறிவிட்டது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் இருந்த ஆசிரியர் பணி, இப்போது, மதிப்பற்றுப் போய்விட்டது. மாணவர்களை கண்டிக்கவே ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கும் நிலை உருவாகி இருக்கிறது.

“இவனை என்ன பண்ணுவீங்களோ, எப்படியாவது உருப்படியா கொண்டு வாங்க” என்று ஆசிரியர்களிடம் பிள்ளைகளை பெற்றோர் ஒப்படைத்த காலம் உண்டு.

பள்ளிக்கூடத்தில் சரியாக பாடம் படிக்காத மாணவர்களை தலைகீழாக தொங்கவிட்டு கற்பித்த காலமும் உண்டு.

அதெல்லாம் மலையேறிவிட்டது. ஆசிரியர் என்ன செய்தாலும் நன்மைக்கே என்று நினைத்த பெற்றோரின் மனநிலையும் மாறிவிட்டது.

சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கெல்லாம் காரணம் என்பதால்தான், ஓராண்டு பி.எட்., படிப்பை ஈராண்டு என மாற்றியுள்ளனர். மாணவர்களின் மனதைப் படிக்கும் இந்தக் கல்விக்கு தொடர்பே இல்லாத ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை பள்ளிக்கல்வித் துறையின் உயரதிகாரியாக நியமித்துள்ளனர். ஏற்கெனவே இருந்த இயக்குனர் பதவியை ஒழித்திருப்பதால் என்ன பயன் விளைந்திருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான கோப்புகளை கையாளும் துறை இது. ஆனால், எந்த கோப்பு போனாலும் அதில் ஒரு குறிப்பு வைப்பதும், என்ன முடிவெடுப்பது என்று தனக்கு மேலே உள்ள உதயசந்திரனின் பதிலைத்தான் எதிர்பார்த்து இருக்கிறார் கமிஷனர். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை உருவாக்கி இருக்கிறது.

ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் திமுக ஆதரவாகத்தான் இருப்பார்கள். அவர்களுடைய தபால் வாக்குகள் எப்போதுமே திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கும். கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்பதைக்கூட அவர்கள் பெரிய விஷயமாக கருதவில்லை. அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து படிப்படியாக முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.

ஆனால் ஆணையர் நியமனத்தால் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் ஆசிரியர்களிடம் தபால் வாக்குகளை பெற சென்ற திமுக ஆதரவு நிர்வாகிகள் இதை நேரடியாகவே பார்க்க முடிந்ததாக சொல்கிறார்கள்.

“அட போங்க ஸார்… வோட்டுப் போட்டு என்னா ஆகப்போகுது…” என்று வாக்களிப்பதிலேயே ஆசிரியர்கள் விருப்பம் இல்லாமல் இருந்ததாக சொல்கிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில்தான் கமிஷனர் பொறுப்பு உருவாக்கப்பட்டது. அந்தச் சமயத்திலேயே இதை எல்லா கட்சிகளும் எதிர்த்தன. ஆசிரியர் வீரமணி உள்பட எல்லா தலைவர்களும் எதிர்த்தனர். அனைத்துச் சங்கம் சார்பிலும், திமுக ஆதரவு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்கூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டார்கள்.

“திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இதை மாற்றுவோம்” என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, இப்போது இயக்குனர் பதவியை சுத்தமாக ஒழித்துவிட்டு, முழு அதிகாரமிக்க பதவியாக மாற்றி நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.சை கமிஷனராக நியமித்திருக்கிறார்கள்.

இப்போதுதான் ஆசிரியர் பணியிட மாற்றங்கள் சுமுகமாக நடைபெறுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். இது கமிஷனரால் மட்டுமே நிகழ்ந்த மாற்றம் என்று கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் இந்த விஷயத்தில் தலையிடாமல் தவிர்ப்பதால் நிகழ்ந்த மாற்றம் இது.

பணியிட மாற்றம் தொடர்பான விவகாரங்களில் திமுகவினரின் வற்புறுத்தல்களை தவிர்ப்பதற்காக தங்களை அதிலிருந்து தப்புவித்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளனர். அதேசமயம் அமைச்சர்கள் யாருக்காவது பணியிட மாறுதலை பரிந்துரை செய்தால் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதை மறுக்க முடியுமா?

இதற்கான கிரெடிட் முழுக்க அமைச்சர்களுக்கே சேரும். அதை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணக்கில் சேர்ப்பது தவறு. சொல்லப்போனால், இதே நந்தகுமாரோ, மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோ கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை எதிர்த்து பதவியை விட்டு விலகியவர்களா என்ன? உடந்தையாக இருந்தவர்கள்தானே என்கிறார்கள் அதிகாரிகள்.

கமிஷனரே எல்லாத்தையும் மாற்றிவிடுவார் என்றால், எதற்காக இயக்குனர்கள் பதவிகள்? கமிஷனரே எல்லா டிஇஓக்களிடமும் நேரடித் தொடர்பு கொண்டு நிர்வாகத்தை நடத்தலாமே. இத்தனை இயக்குனர்களுக்கான செலவாவது மிச்சமாகுமே என்றும் குமுறுகிறார்கள்.

ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்கள் பிரச்சனை குறித்து நேரடியாக சந்தித்து பேசக்கூடிய இயக்குனர் பொறுப்பை நீக்கியதன் விளைவு என்ன தெரியுமா? இந்த நியமனத்தால்தான் எந்த சிக்கலான பிரச்சனையிலும் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்கள். •.

-உளவாளி

Previous Post Next Post

نموذج الاتصال