பாடாய் படுத்திய மீனும், நாட்டுக் கோழியும்!
மீனையோ, கறியையோ குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். அல்லது வறுத்து சாப்பிடுவார்கள். இதுதான் எனது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போ என்னடானா எது மீன், எது கோழி, எது ஆட்டுக்கறினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமா சமைச்சு தர்றாங்க.
அந்த வெரைட்டியைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, என்னோட அசைவ உணவு அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்றேன்.
என் வீட்டில் அப்பாவுக்கு ஆட்டுக்கறி மட்டும்தான் பிடிக்கும். அதில் அவர் ரொம்ப கண்டிப்பா இருப்பார். வெளியில் சாப்பிடனும்னா சைவ ஓட்டலுக்குத்தான் போவார். அசைவம் சாப்பிடனும்னு வந்தாக் கூட முட்டை மட்டும்தான் வாங்குவார். ஓட்ட லில் மாட்டுக்கறி கலந்துவிடுவார்கள் என்பார்.
அவருடைய பழக்கம் எனக்கும் எனது அக்காவுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், எனது அம்மா, அண்ணன், தங்கச்சியெல்லாம் மீன், கோழி வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால், அதற்கென்று தனியாக சமையல் பாத்திரம் வைத்திருப்பார்கள். என் அப்பாவுக்கு அந்த வாசனையே ஆகாது. அதிலும் கருவாடு குழம்பு வைக்கனும்னா எங்க கருப்பாயி அத்தை வீட்டுக்கு போயி, அதுகிட்ட கொடுத்து வச்சுத்தர சொல்லுவாங்க.
எங்க அப்பாவுக்கு கோழி, மீன் பிடிக்காது தெரியுமா? அந்தக் காலத்தில் குளங்களிலும் கிணறுகளிலும்தான் மீன் கிடைக்கும். நாட்டுக்கோழிகள் மட்டுமே அன்றைக்கு கிடைக்கும். இரண்டுமே அழுக்கைச் சாப்பிட்டுத்தான் வளரும்.
இதுதான் அப்பாவுக்கு கோழியும் மீனும் பிடிக்காமல் போனதற்கு காரணம். ஆனால் எங்களுக்குச் சொந்தமான கிணறுகளில் விரால் மீன் குஞ்சுகளை வாங்கிவந்து வளர்ப்பார். மழைக்காலத்தில் விடப்படும் மீன் குஞ்சுகள் அடுத்த ஆறு மாதங்களில் பெருகும். வறட்சியில் தண்ணீர் வற்றும்போது, மீன்களை வியாபாரிகளுக்கு விலைபேசுவார் அப்பா.
எனது சின்ன வயதில், போக்குவரத்து கடினமான கிராமப்புறங்களில், கடல் மீனெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
கோழி, மீன் மட்டும்தான் எனக்கு பிடிக்காது என்பதில்லை. குழம்பில் போட்ட காய்களைக்கூட எனக்கு பிடிக்காது. பொறியல் மட்டும்தான் பிடிக்கும். அதிலும் கத்தரிக்காய் எப்படி சுவையாக செய்தாலும் பிடிக்காது. கீரையை கடைந்து வைத்தால் சுத்தமாக பிடிக்காது. உருளைக்கிழங்கு பொறியல் அல்லது கூட்டு ரொம்பப் பிடிக்கும்.
நான் எப்படி மீன் சாப்பிட்டேன் என்பது தனிக்கதை. கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஆறாம் வகுப்புக்கு மதுரையில் இருந்த அத்தை வீட்டில் போய் விட்டார்கள்.
ஒருநாள் “புட்டு சாப்பிடு ராஜா என்று கிண்ணத்தில் கொண்டு வந்து அத்தை கொடுத்தாங்க. வாங்கிச் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்ததும், எப்டி இருந்துச்சுனு கேட்டாங்க. “நல்ல டேஸ்ட்டா இருந்துச்சு. ஆனால், புட்டு மாதிரி இல்லியே என்றேன்.
ஊர்ல இருந்து விரால் மீன் கொண்டு வந்தாங்க. அதைத்தான் உதிர்த்து கொடுத்தேன் என்று அத்தை சொன்னாங்க. அதுவரை நான் கடைப்பிடித்துவந்த மீன் விரதம் அன்றோடு முடிந்தது. அதன்பிறகு பொறித்த மீன் மட்டும் சாப்பிட தொடங்கினேன். இப்போவெல்லாம் முள் இல்லாத மீன் எதுவானாலும் எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடுகிறேன்.
கோழி விரதம் முடிவுக்கு வந்ததும் தனி கதைதான். அதுக்கு எங்க சித்தி அன்னம்மாதான் காரணம். அது பொங்கல் பண்டிகை நேரம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அன்றைக்கு எல்லா வீடுகளிலும் கறிதான். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்கு அருகில் எங்களுக்கு சொந்தமான இடம் இருக்கு. அந்த இடத்தில் ஏழெட்டு தென்னை மரங்கள் இருந்தன.
சித்தப்பா குடும்பம் அங்கு குடியிருந்தது. ஜல்லிக்கட்டு அன்றைக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள் வருவார்கள். தென்னை மரத்தில் ஏறி, ஜல்லிக்கட்டு பார்ப்பார்கள். ஒரு மரத்துக்கு நாலைந்து பேர் இருப்பார்கள்.
எல்லா ஜல்லிக்கட்டுக்கும் நான் போய்டு வேன். சித்தி வீட்டில்தான் சாப்பாடு. அப்படி ஒருநாள் சாப்பிடும்போதுதான் சேவல் கறியை ஆட்டுக்கறி என்று சாப்பிட்டுவிட்டேன். எனது சித்திக்கு நான் கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என்று தெரியும். தெரிந்தும் மறதியில் பரிமாறிவிட்டார்கள். எனக்கு அழுகையே வந்துவிட்டது.
“விடுறா. இப்போ என்ன ஏதாச்சும் வித்தியா சமா தெரிஞ்சுதா?Ó என்று சாதாரணமாக கேட்டார். இருந்தாலும் எனக்கு இன்றுவரை நாட்டுக்கோழி சாப்பிடுவதில் விருப்பமே இல்லை. ஆனால், பிராய்லர் கோழி சாப்பிடுவேன்.
இத்தனைக்கும் பிராய்லர் கோழி வளர்க்கும் இடத்தை பார்த்தால் படுமோசமா இருக்கும். இருந்தாலும், ஏனோ, அதை மட்டும் மனம் ஒப்பி சாப்பிடுகிறேன்.
இன்று ஓட்டல்களுக்கு போனால் நான்வெஜ் அய்ட்டங்களில் விதவிதமாக செய்து வைத்திருக்கிறார்கள். யாரும் இது இன்ன கறி என்று சொல்லாவிட்டால் எல்லாத்தையும் சுவைத்து சாப்பிடும்படி இருக்கிறது.
(நினைவுகள் நீளும்)