புத்திமான் பலவான்?
புத்துவெட்டூர் நம்பி படுவேகமாக தனது நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்து ஒரு ஆலோசனை குழுவை அமைத்தான். பேராவூருக்கும் பாலவோரைக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஏற்கனவே பாக்கியத்தம்மாளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கினான்.
பாக்கியத்தமாளின் புத்திசாலித்தனதால் தாங்கள் எதிரி என்று கருதக்கூடிய குலதிலகனின் நம்பிக்கையை பெற்று விட்டோம். அத்தோடு .பார்ப்பனர்களின் அசைவுகள் அத்தனையும் தங்கள் பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும் புத்தூர் நம்பி கூறினான்.
மௌன யுத்தம் ஆரம்பம்.
முதல் கட்ட நகர்வில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்தடுத்த கட்டங்களில் நாம் படிப்படியாக வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறத்தவறினால் பாலவோரை பார்ப்பனவோரையாக மாறிவிடும்.
வரலாறு நம்மீது சுமத்தி உள்ள இந்த கடமையை செவ்வனே நிறைவேற்ற உங்கள் உதவியை பாலவோரை நாடி நிற்கிறது என்று கேட்டு கொண்டான்.
“நாம் ஒருபோதும் குலதிலகனையோ அவனது அமைச்சர் களையோ நிர்வாகிகளையோ அல்லது பார்பனர்களையோ பகைத்துகொள்ளக் கூடாது. நாம் அவர்கள் மீது தொடுத்திருக் கும் யுத்தம் ஒருவகையான மௌன யுத்தம் என்பதை மறந்துவிடாதீர்கள்
நமது உள்நோக்கம் அம்பலமானால் அத்தனை முயற்சிகளும் வீணாகிவிடும். அவர்களை சிந்திக்க விடாது ஒருவித தூக்க கலக்கத்தில் வைத்து துரத்தி விடுவதுதான் நமக்கு உள்ள ஒரே வழி என்பதை மனதில் அழுத்தமாக பதியவைத்து கொள்ள வேண்டும்” என்று அழுத்தமாக கூறினான். அவன் பேசியது, கேட்பவர்களுக்கு கொஞ்சம் புரிவது போலவும், புரியாதது போலவும் இருந்தது.
“நாம் எந்த தாக்குதலுக்கும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் தாக்கவே கூடாது. தட்டி தடவி துரத்திவிடுவதுதான் நமது நோக்கம்“ என மீண்டும் வலியுறுத்தி கூறினான். அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் உற்று நோக்கியது அந்த மறவர் கூட்டம்.
இதை பாலாவோரையின் ஒவ்வொரு குடிமகளுக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தகுந்த மாதிரி விளங்கப்படுத்தும் பெரிய பொறுப்பு நம் எல்லோர் மீதும் உள்ளது.
உரிய நேரத்தில் உரிய நகர்வுகளை நாம் மேற்கொள்வோம். அவ்வப்பொழுது உங்களுக்கு ஆணைகள் கிடைக்கும். அதுவரை அமைதி காத்து கூறப்பட்ட நெறிமுறைகளை சந்தேகம் கொள்ளாது கருத்திலே கண்ணாக மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு ஆயுதம் என்பதை இந்த கணத்தில் இருந்து நீங்கள் அனவைரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
முதல் கட்ட நடவடிக்கையாக நீங்கள் அனைவரும் இந்த கணத்தில் இருந்து பார்ப்பனர்கள் பலரோடும் நட்பு பூண்டு அவர்களின் அந்தரங்கங்களை அறியவேண்டும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்.
அதை அறிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் பலவீனங்களை பற்றிகொண்டு அவர்களை தகுந்த சமயத்தில் தோற்கடிக்கவேண்டும். அவர்களின் பலவீனங்களை அறியும் முயற்சி அவர்களுக்கு எள்ளளவும் தெரிந்து விடக்கூடாது. அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் குலதிலகனை அவர்கள் எச்சரித்து விடுவார்கள்.
பலவீனங்களுக்கு தொடர்ந்து தீனி போட்டால் அவர்கள் பலமிழந்து தோற்று விடுவார்கள். அவர்களிடம் வழக்கமான ஆயுதங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் குள்ள நரித்தனத்தையே ஆயுதங்களாக கொண்டு பலநாடுகளை விழுங்கி விட்டார்கள். நம்மவர் பலரும் வீரம் என்று கூறிக்கொண்டு வீணாக அடிபட்டு மடிந்து விட்டார்கள். புத்திமான் பலவான் என்பதை நமது எதிரிகள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.
அதிலும் நமது எதிரில் நிற்பது நமது எதிரி இல்லையே? ஒரு அறிவில்லாத தம்பி அல்லவா எதிரிகளின் சிலந்தி வலையில் சிக்குண்டு தூங்குகிறான்!?
குலதிலகனயோ அல்லது அவனது பரிவாரங்களையோ கொல்வதல்ல எமது நோக்கம். பேராவூர் தேசமும் பாலவோரை ஆறும் பார்ப்பனர்களின் வயிற்றுக்குள் போய்விடாமல் காப்பற்றுவது தானே நமது கடமை?
வேறு எந்த மார்க்கமும் இல்லை என்றால் அல்லவா நாம் கொல்வதை பற்றி சிந்திக்க வேண்டும்?“ என்று விளக்கினான் நம்பி.
புத்தூர் நம்பியின் பேச்சை கண்கொட்டாமல் பார்த்துகொண்டு இருந்த பாக்கியத்தம்மாள்,
“எனக்கு நாடும் மக்களும் தான் முக்கியம் என்று கூறிவிட்டு சிறு மௌனத்தின் பின், பெரும் களரி ஏற்படாது என்றுதான் நம்புகிறேன். எனது நம்பிக்கையையும் மீறி யுத்தம்தான் வழியென்றால் அதற்கும் நாம் தயார். தம்பிக்காக நான் வெற்றியை விட்டு கொடுப்பேன் என்று யாரும் கருதவேண்டாம் என்று உறுதியான குரலில் ஒரு இடி முழக்கம் போல் கூறினாள்.
ஒரு கணம் எல்லோரும் அதிர்ந்தனர். அவள் அப்படி பேசி இதுவரை யாரும் கேட்டதில்லை. புத்தூர் நம்பிக்கே இது புதுசாக இருந்தது. நிலைமையின் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொண்டனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர்கள் பலவிடயங்களையும் விவாதித்தனர். பலமுனைகளில் தாக்குதல்தல்கள் மேற்கொள்ள திட்டங்கள் வகுப்பட்டன.
பல சிறு சிறு குழுக்களும் அமைக்கப்பட்டன. அக்குழுக்களுக்கு உரிய கடமைகளும் நிறைவேற்று அதிகாரங்களும் வளங்களும் அளிக்கப்பட்டன.
புறப்பட்டன பட்டாளங்கள்!
நான்கு நாட்கள் அவர்களின் பாசறை தொடர்ந்து நடந்தது. இரவில்கூட பல குழுக்கள் விவாதித்து கொண்டிருந்த காட்சிகளும் காணக்கூடியதாக இருந்தது. பாக்கியத்தம்மாளும் புத்தூர் நம்பியும் மட்டுமல்ல வேறு பல ஆலோசகர்களும் கூட முறையாக துயிலவில்லை.
அந்த பாசறை முடியும் நாள் அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் காரணமாகத்தான் அன்றே அவர்களின் பாசறை பயிற்சி முகாம் முடிவுக்கு வந்தது என்பதல்ல. ஆனால் நடந்த சம்பவம் கொஞ்சம் விசனப்படவைத்த சம்பவமாகத்தான் இருந்தது.
திடீரென்று மூன்று பார்ப்பனர்கள் அவர்களின் பாசறையை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எப்படி வந்தார்கள்? யாரோ வழிகாட்டினார்களா? ஏன் வந்தார்கள்? என்பது போன்ற கேள்விகள் ஏராளம் எழுந்தன.
அவர்கள் வருவதை அறிந்த புத்தூர் நம்பி மின்னல் வேகத்தில் அவர்களை நோக்கி சென்று வரவேற்றான்.
அவர்கள் சிந்திக்கும் முன்பாகவே அவர்களுக்கு சிற்றுண்டிகள் மட்டும் அல்ல மதுபானங்களும் வழங்கப்பட்டன. இங்கு கிராம கூத்துக்கு ஒத்திகை பார்ப்பதாக கூறினான். வந்தவர்கள் தலையாட்டி கொண்டே என்ன கூத்தாக இருந்தாலும் தங்களுக்கு நல்ல மது கிடைத்ததே என்ற ஆனந்தத்தில் மெல்ல மெல்ல சுய நினைவை இழந்து கொண்டிருந்தனர்.
பாக்கியத்தமாளுக்கு அவர்களை பார்த்து அதிர்ச்சி வரவில்லை ஆனால் கொஞ்சம் வியப்பும் திகைப்பும் வந்தது உண்மை. ஆனால் மதுபானங்களை கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள். அவளின் அதிர்ச்சியை கண்டு இளநகையுடன் புத்தூர் நம்பி மெதுவாக அவளின் அருகில் வந்து,
“பலவீனர்களை பலவீனம் கொண்டு பொருதுவது தவறென்று கருதுவதோ?“ என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மென்று விழுங்கினான்.
“அடேயப்பா உனது வேகமும் விவேகமும் எனக்கு கொஞ்சம் புரியாததுதான்.அதனால்தான் நீ பிரதம படைத்தளபதியாகி விட்டிருக்கிறாய்“ என்றாள்.
மின்னாமல் முழங்காமல் தனக்கு பிரதான படைத்தளபதி பட்டம் சூட்டிய அக்கையாருக்கு தலைவணங்கி நன்றியை செய்கையில் தெரிவித்தான்.
அக்கையாரே யுத்தம் இதோ ஆரம்பம் ஆகிவிட்டது.பாருங்கள். அவர்கள் எவ்வளவு ஆனந்தமாக மதுவை அருந்துகிறார்கள்? இனி இவர்கள் நமது அடிமைகள் என்று கூறிவிட்டு மெதுவாக சிரித்தான்.
“அவசரப்பட்டு சிரிக்காதே தம்பி செல்லவேண்டிய பாதை வெகு தூரம் இருக்கிறது. இருந்தாலும் உனது முதல் வெற்றிக்கு எனது நன்றிகள்” என்று கூறிவிட்டு எழுந்து தனது குதிரையை நோக்கி நடந்தாள்.
பார்ப்பனர்களும் மிகவும் பவ்வியமாக அவளை வணங்கி வழிவிட்டனர்.
வழித்துணைக்கு வரவா என்று கேட்ட நம்பியிடம் தேவை இல்லை என தலையாட்டி விட்டு,
“நம்பி என்ன காரணம் கொண்டும் மதுவருந்தும் பார்பனர்கள் இனி திரும்பி செல்லக்கூடாது. பேராவூரை விட்டு மொத்த பார்பனர்களும் செல்லும்பொழுது இவர்களையும் அனுப்பி வைக்கலாம். அதுவரை இவர்களை பற்றி எவருக்கு எதுவும் தெரியாவண்ணம் இருக்கவேண்டும். எல்லோரையும் தகுந்த முறையில் எச்சரித்து வைக்க வேண்டும்“ என்று கேட்டுகொண்டாள்.
நாம் சிந்திப்பதிலும் பார்க்க இந்த பிரபஞ்சம் கொஞ்சம் வேகமாக சிந்திக்கிறது போலும் என்று கூறி சிரித்தாள்.
நம்பிக்கு அக்கையார் கூறுவதன் பொருள் விளங்கைவில்லை, கேள்விகுறியுடன் அக்கையாரை நோக்கினான்.
எதிரிகளே வலுவில் வந்து அகப்பட்டு கொண்டதை வெற்றிக்கு வெள்ளோட்டம் என்று கொள்ளலாம் அல்லவா?
புத்தூர் நம்பி ஆமாம் ஆமாம் என்று தலையாட்டினான்.