மதப் பிரச்சாரகர்களின் காக்டெயில் பிரசாதம்!
தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார தந்திரங்களை கொஞ்சம் நவீன மயப்படுத்தி உள்ளார்கள்.
ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள்.
இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான்.
டபிள் ஸ்ரீ, ஜக்கிவாசு போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல் சுத்துகிறார்கள்.
பல நேரங்களிலும் இவர்கள் கூறும் கருத்துக்கள் நல்லவையாக இருக்கிறது உண்மையே.
ஆனால் இவர்களது நோக்கம் மிகவும் கபடம் வாய்ந்தவையாகும்.
அதனால்தான் இவர்கள் இன்னும் சீனில் நின்று தாக்குப் பிடிக்க முடிகிறது. பழைய சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து இளம் தலைமுறைகளின் காதுகளில் தங்கள் சொந்த சரக்காக சப்ளை செய்வது போல இந்த சமய சொற்பொழிவாளர்களும் இப்போது செய்கிறார்கள்.
பேரறிஞர்கள் பேசியதை எழுதியதை எல்லாம் தேடி பிடித்து அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி வீசி தங்கள் பழைய குப்பைகளை புதிப்பிக்கின்றனர்.
வழக்கம் போல பொதுபுத்தி மக்கள் ஆகா கண்டேன் அறிவின் கருவூலத்தை என்பது போல இந்த சமய வியாபாரிகள் பின்னால் செல்கின்றனர். இந்த பக்தி சரணாகதி உல்டாக்கள் எல்லாம் வெறும் ரீமிக்ஸ் ஆத்மீக போதை வஸ்துக்கள்தான்.
ஒருவர் என்னதான் படித்து அறிவியல் ரீதியாக சிந்திப்பவராக இருந்தாலும் அவருக்குள் பிறப்பு இறப்பு வாழ்க்கை பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கிறது.
அதே வேளை அவரது நவீன விஞ்ஞான அறிவு கொஞ்சம் பழைய முட்டாள்தனமான கருத்துக்களை கடித்து தின்பதற்கு தயங்குகிறது,
இவர்களின் இந்த அறிவியல் சார்ந்த தயக்கத்தை போக்கும் கலையில் டபுள் ஸ்ரீ ரவிஷங்கர், ஜக்கிவாசுதேவ், நித்தி போன்ற மோசடி ஆட்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது உண்மையே.
இதில் மிகவும் பரிதாபத்திற்கு உரிய மனிதர்கள் இவர்களின் பின்னால் செல்லும் அப்பாவி மக்கள்தான்.
இவர்கள் தியானத்தை பற்றி விஞ்ஞான விளக்கம் கொடுப்பார்கள். பிரணயாமம் மட்டுமல்ல யுனிவெர்ஸ் இப்படித்தான் ஃபங்சன் பண்ணுது என்று தானே கண்டு பிடித்த அரியபெரிய உண்மைகள் போன்று முழக்குவார்கள் இவர்களது நோக்கம் எல்லாமே பணம் புகழ் போன்றவைதான்.
மக்களின் அறிவியல் சோம்பல்தான் இவர்களது மூலதனம்.
அடுத்தது மனிதர்கள் தங்கள் சமுக வாழ்வை இன்று இழந்து கொண்டுவருகிறார்கள்..
மனிதர்களிடேயே பரஸ்பரம் உள்ள நட்பு பேச்சு எல்லாமே தற்போது அருகிவிட்டது.
ஏராளமானோர் டி.வி. கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களையே தங்கள் சமூகமாக ஏற்று கொண்டுவிட்டார்கள்.
இதில் ஒரு வெறுமை நிச்சயம் ஏற்படும். இந்த வெறுமையை போக்க தற்போது சமயம் சார்ந்த பொழுது போக்குகள் பெரிதும் உதவி செய்கின்றன.
இந்த ஆன்மீக பொழுது போக்குகள் சாராயத்தை விட மோசமானதாக உள்ளது என்பதுதான் கண்கூடாக தெரியும்உண்மையாகும்.
மெல்ல மெல்ல மனிதர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து ஒரு சோம்பல் தற்குறிகள் ஆக்கி விடுகிறது.
அதன் வெளிப்பாடுதான் சதா எதாவது ஒரு சாமி அல்லது தெய்வீக அற்புதம் என்று அலைந்து அலைந்து ஏதாவது நம்பிக்கையான ஒளி தெரியாதா என்று ஏங்குவது.
தனக்கே தெரியாத அறிவொளியை பிறருக்கு காட்டுகிறேன் என்று சொற்பொழிவு ஆற்றுவதும் பரிதாபத்துக்கு உரியதாகும்.
உலகில் உள்ள எல்லா உயிரனங்களும் இந்த பிரபஞ்ச வாழ்வை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன். அவை வாழ்கின்றன, அது ஒன்றேதான் பிறவியின் நோக்கம்.
பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற இந்த மூன்று நிகழ்வுகளும் இயற்கையில் எமக்கு கிடைத்த பாக்கியம்.
வாழ்க்கையில் வாழ்வை மதிக்காதோர் எல்லோரும் தத்துவார்த்த கோட்பாடுகள் பின் செல்வர்.
பிரபஞ்சத்தை உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள்!
வாழ்க்கை வாழ்வதற்கே.. சாமி கும்பிடுவதற்கு அல்ல!
பிரபஞ்சத்தின் இயற்கை விதிகள்தான் வாழ்வை வழி நடத்துகின்றது.
இயற்கை நியதி மட்டுமே உண்மையானது. இரவு வந்தால் பகலும் வரும். பகல் வந்தால் இரவும் வரும்.
நீ அடித்தால் உனக்கு அடிவிழும்.. நீ அணைத்தால் உன்னை அணைக்கும்.
அடித்துவிட்டு அர்ச்சனை செய்தாலும் அடித்த அடிக்கு பதிலடி கிடைக்கும் அதுதான் இயற்கை விதி.
உனது சாமி நம்பிக்கை ஒரு போதும் உனக்கு வீட்டோ பவரை தராது. உனது மனம்தான் உனது வாழ்வின் விளைநிலம்.