தொடரும் தொடக்கம்!
நமது அன்றாட வாழ்க்கை எளிதாக மாறுவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. தேவைகள் அடிப்படையில் மனிதன் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான்.
காலங்காலமாக இவை படிப்படியாக நிகழ்ந்துள்ளன. மனித சமூகத்தின் முன்னேற்றம் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது.
ஒரு பகுதி மனிதனின் புதிய யோசனைகள் கடன் வாங்கப்பட்டு அல்லது காப்பியடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளன.
ஒரு காலகட்டத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கண்டுபிடிப்புகள் காலப்போக்கில் வாழ்க்கையின் அத்தியாவசிய மான விஷயங்களாகி விட்டன.
கி.மு.களில் தொடங்கிய கண்டுபிடிப்புகள் ஒரு காலகட்டத்தில் வேகம் பிடித்தன. எதையேனும் புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்று மனிதர்கள் பித்துப்பிடித்து அலைந்தார்கள்.
அப்படி அலைந்தவர்கள் சாதித்தார்கள். அவர்களுடைய சாதனைகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கால வரிசைப்படி இல்லாமல் ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
20 லட்சம் ஆண்டுகளாக மனிதன் கற்களை மட்டுமே பயன்படுத்தினான். கற்களை ஆயுதங்களாக பயன்படுத்துவது தான் அவன் கண்டுபிடித்த ஒரே விஷயம்.
அந்த காலகட்டம்தான் கண்டுபிடிப்புகள் ஏதுமில்லாமல் மனிதன் வாழ்ந்த ஒரே காலகட்டம்.
பிறகு 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பைக் கண்டுபிடித்தான். அதுவும் மனிதனின் கண்டுபிடிப்புதான்.
கற்காலத்தில்கூட அம்பு நுனியைப் போலவும், கொக்கியைப் போலவும் மனிதன் கல்லிலும் எலும்பிலும் செதுக்கியிருந்தான். அவைகூட கண்டுபிடிப்புகள்தான்.
அவற்றின் மேம்பட்ட வடிவங்கள் பின்னர் உபயோகத்தில் வந்தன.
இருந்தாலும், ஊசியின் காது, வில்லின் நாண் ஆகியவை தான் கண்டுபிடிப்பு என்ற வார்த்தைக்கு முழுத் தகுதி பெறுகின்றன.
வெதுவெதுப்பான உடைகள் தேவைப்படும் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் விலங்குகளின் தோலை வெட்டி நரம்புகளால் இணைத்து அணிந்தான். தோலில் துவாரம் இட்டு நரம்பை அந்த துவாரத்தில் நுழைத்து இழுத்து இணைத்தான்.
இப்படிப்பட்ட சமயத்தில் யானைத் தந்தத்தில் செய்யப் பட்ட ஒரு ஊசியும் அந்த ஊசியின் நுனியில் போடப்பட்ட துவாரமும் மனிதனின் உடை தயாரிப்பு வேலையை இலகுவாக்கின. அதாவது துளையிட்டு பிறகு நரம்பை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. ஒரே சமயத்தில் ஊசியில் நரம்பைக் கோர்த்து விரைவாக உடையை தயாரிக்க முடிந்தது.
பாலியோலித்திக் காலத்தில் அதாவது 15 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இந்த ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பா வில் உள்ள குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் இதை செய்திருக்கிறார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் வளைந்து கிடந்த மரக்கிளையை மனிதன் எதேச்சையாக விடுவித்தான். அது மிகுந்த ஆற்றலுடன் விடுபட்டது. அதுதான் வில்லை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதுவும் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதிருந்துதான் தொலை தூரத்தில் இருந்து விலங்குகளையும் சக எதிரிகளையும் மனிதன் கொல்லத் தொடங்கினான். ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இந்த வில் முதலில் பயன்படுத்தப்பட்டது.
நியோலித்திக் காலத்தில்தான் மனிதர்கள் நெருப்பை உருவாக்க கற்றுக் கொண்டார்கள். இந்த கண்டுபிடிப்பு உலகில் ஒரேசமயத்தில் பரவிவிடவில்லை. பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட காலகட்டத்தில் நெருப்பை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான்.
இந்தப் புத்தகத்தில் மனித சமூகத்தின் வளர்ச்சியில் அதிசயிக் கத்தக்க மாற்றங்களை உருவாக்கிய பல்வேறு கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எந்த ஆண்டு யாரால் அது கண்டுபிடிக்கப்பட்டது என்ற விவரம் இதில் இடம்பெற்றுள்ளது.
மிகமுக்கியமாக, 2008 ஆம் ஆண்டு வரையிலான கண்டுபிடிப்புகள் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி இதுவரை நமக்கு தெரியாத சுவையான உண்மைகளும் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்