புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்?
“அயோத்தியில்
பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த
ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர்
பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே
நாம் கேட்க முடியும்? அது கற்பனைப் பாத்திரம்தானே. வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும்,
ராமர் கோவில் இருந்த இடத்தி்ல் கட்டப்பட்ட பாபர் மஸ்ஜித்தை இடித்தது நியாயம் என்றால்,
புத்தர் ஆலயங்களை மாற்றி வைணவ ஆலயங்களாகவும், சைவ ஆலயங்களாகவும் மாற்றி இருக்கிறீர்களே
அவற்றை இடித்துவிடலாமா?”
திருமா பேசியது
இதுதான். அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? திருப்பதி வெங்கடாசலபதி
ஆலயமோ, ஸ்ரீரங்கத்தில் சயனம் கொண்டிருக்கும் அரங்கநாதரோ புத்தர் சிலைகள் அல்ல என்பதற்கு
சான்றுகளை எடுத்துவீசி விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
அதைச் செய்வதற்கு
பதிலாக, திருமாவளவன் இந்துக் கோவில்களை இடிக்கச் சொல்கிறார் என்று திசைதிருப்பி மதக்கலவரத்தை
உருவாக்க நினைப்பது எப்படி சரியாகும்?
இந்த விவகாரத்தின்
பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் மக்களுக்கு
உண்மை நிலை புரியும். தமிழ்நாட்டில் புத்தர் ஆலயங்கள் இருந்தனவா? சமணப் பள்ளிகள் இருந்தனவா
என்பதை அறிந்துகொண்டால், இந்து மதவாதிகளின் புரட்டு வாதங்கள் புரிபடும்.
தமிழ்நாட்டில்
புத்தமதம் முதலில் வந்ததா? சமண மதம் முதலில் வந்ததா? என்று கேள்வி எழுப்பினால் துல்லியமாக
பதில் சொல்வது கடினம்தான். ஆனால், இரண்டு மதங்களும் தமிழகத்திற்கு வந்து செழித்து வளர்ந்துள்ளன.
பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியை செய்துள்ளன.
இந்த இரண்டு
மதங்களும் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருந்துள்ளன. ஆண்டான் அடிமை பேதமின்றி மக்களை
கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக மாற்றி இருக்கின்றன.
அப்படி செழிப்பாக
வளர்ச்சியடைந்திருந்த மதங்களின் அடையாளங்களே தமிழ்நாட்டில் இல்லையே ஏன் என்று இப்போது
கேட்கலாம். கி.பி.ஏழாம் நூற்றாண்டுவரை புத்தமதத் துறவிகள் தங்கும் புத்த விகாரங்களும்,
சமணமதத் துறவிகள் தங்கும் சமணப் பள்ளிகளும் தமிழகத்தில் ஏராளமாக இருந்தன.
தமிழ் இலக்கியத்திற்கு
புத்தமதத் துறவிகளும், சமண மதத் துறவிகளும் மிகச் சிறந்த பங்காற்றி உள்ளனர். சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று காப்பியங்களை அவர்கள் கொடுத்தார்கள். தொல்காப்பியம்,
நன்னூல், நிகண்டுகள் என தமிழுக்கு அவர்கள் கொடுத்தது ஏராளம் என்று கவிக்கோ அப்துல்
ரகுமான் கூறியிருக்கிறார். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சமணர் என்பதும் இப்போது
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தில்
மட்டும் நூறுக்கு மேற்பட்ட புத்தவிகாரங்கள் இருந்ததாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தமிழகம்
வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங் எழுதி வைத்திருக்கிறார். சமணப் பள்ளிகளும் காஞ்சியில்
இருந்திருக்கின்றன. ஆனால், இப்போது அவற்றை இந்துக் கோவில்களாக மாற்றியிருக்கிறார்கள்
என்கிறார்கள். இவற்றுக்கு ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். காஞ்சி சங்கர மடமே ஒரு காலத்தில்
புத்தவிகாராக இருந்தது என்கிறார்கள்.
கி.பி.ஏழாம்
நூற்றாண்டுவரை தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும் பண்படுத்திய
புத்த மதமும், சமண மதமும் ஆரியர்களின் தூண்டுதலால், கூன்பாண்டியன் என்ற மன்னனால் அடையாளம்
தெரியாமல் அழிக்கப்பட்டது என்கிறது வரலாறு.
கிட்டத்தட்ட
கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டுவரையிலான தமிழக வரலாறு உருத்தெரியாமல்
அழிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்கிறது ஆரியம்.
ஆனால், அந்தக் காலகட்டம்தான் தமிழகத்தின் பொற்காலம் என்கிறது வரலாறு.
ஆரியம், அன்றைய
சைவ சமயத்தை கூட்டுச் சேர்த்துக்கொண்டு சமண மதத்தை அழித்தது. புத்த, சமண மதத்தவர் எழுதிய
நீதி நூல்களை அழித்து ஒழித்தார்கள். அல்லது அவர்களுடைய நூல்களை பிற சமய நூல்களாக மாற்றினர்.
அருகன் கோவில்கள் சைவ வைணவக் கோவில்களாக ஆகின. ஒருகட்டத்தில் சமணம் ஒழிக்கப்பட்டதும்
சைவர்கள் நிர்வாகத்தில் இருந்த கோவில்களை ஆரியர்கள் கைப்பற்றினார்கள். சைவ வேளாளர்கள்
ஒதுக்கப்பட்டு அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டன. உதாரணத்திற்கு சிதம்பரம் கோவிலை
சொல்லலாம்.
புத்தமதம்
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பரவியதாக அசோகர் காலத்து
சாசனம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பெஷாவர் நகருக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட இந்தச் சாசனம்
கி.மு.258 ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.
திருமலையில்
சமணர்கள் நேமிநாத் என்ற சமணத் தீர்த்தங்கரருக்கு ஆலயம் எழுப்பி இருந்ததாக ஒரு கல்வெட்டு
கூறுகிறது. கர்நாடகத்தை ஆண்ட புக்கராயா என்ற மன்னர், திருமலையை வைணவரிடம் ஒப்படைத்தால்,
சிரவணபெலகோலாவில் உள்ள மகாவீரர் சிலையை விட்டு வைப்பதாக சமணரிடம் ஒரு உடன்பாடு செய்ததாகவும்
அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு, கர்நாடக மாநில தொல்லியல்துறை மியூசியத்தில்
இருக்கிறதாம்.
தமிழகத்தில்
எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொன்றதாக பெரியபுராரணத்தில் சேக்கிழார் கூறியிருக்கிறார்.
அந்தக் கொடூரமான படுகொலையை திருஞானசம்பந்தர் புன்னகையுடன் ரசித்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார்.
இந்தப் படுகொலை குறித்து பேராசியர் அருணன் தனது நிழல்தரா மரம் என்ற நூலில் ஏராளமான
ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
மதுரை, ஆனைமலை,
நாகமலை, புதுக்கோட்டை சித்தன்னவாசல், கழுகுமலை உள்பட பல இடங்களில் சமண துறவிகளின் பள்ளிகள்
இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் இந்தப் பள்ளிகளில்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு
கல்வி கற்பிக்கப்பட்டது. கல்விக் கூடத்திற்கு பள்ளி என்ற பெயரே இதிலிருந்துதான் வந்தது
என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.
ராணிப்பேட்டை
அருகில் உள்ள வள்ளிமலை அடிவாரத்தில் முருகன் கோவில் இருக்கிறது. மூலவர் சன்னிதானத்தில்
முருகன் சிலைக்கு மேலே சுவரில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இருக்கிறது. அது சமணர்களின்
24வது தீர்த்தங்கரர் என்கிறார்கள்.
திருமாவளவன்
பேசியதை வைத்து மதக்கலவரத்தை உருவாக்க பாஜகவினர் நினைத்தால் அது தமிழகத்தில் நிறைவேறாது.
மாறாக, இந்து மத ஆலயங்களில் எத்தனை ஆலயங்கள் புத்த, சமண மதத்தவருக்குச் சொந்தமானவை
என்ற உண்மைகளை வெளிக்கொண்டுவரவே உதவியாக இருக்கும்.
இப்போதிருக்கும்
திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயங்களில் உள்ள கடவுளருக்கு செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் கலைக்கப்பட்டால்
போதும். அவை சமண தீர்த்தங்கரரா? புத்தரா என்ற உண்மை தெரிந்துவிடும்.
தமிழகத்தின்
புராதன வரலாற்றை வெளிப்படுத்தும் எந்த ஒரு காரியத்தையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காவிக்கூட்டம்
ஒப்புக்கொள்ளாது என்பது தெரிந்த உண்மைதான். கீழடி அகழ்வாய்வு கோக்குமாக்குகள் அதைத்தானே
நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
-ஆதனூர் சோழன்
12-12-2017 அன்று நக்கீரனுக்கு எழுதியது