இன்று Enforcement Directorate (அமலாக்கத்துறை) என்றவுடன் ஒவ்வொருவரின் நினைவுக்கும் வருவது என்னவென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சமீபத்தைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து இன்று இதைப்பற்றி பேசாதவர்கள்தான் குறைவு.
சரி, இந்த துறையின் வரலாறுதான் என்ன..?
இந்தியா சுதந்திரம் அடைந்த1947-ஆம் ஆண்டே சட்டமாக்கப்பட்ட "அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம்" (Foreign Exchange Regulation Act - FERA) பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த சட்டத்தை சரிவர அமுல்படுத்தவேண்டி ஒரு சட்ட வல்லுனர் மற்றும் ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரியின் கூட்டுத்தலைமையில் ஒரு தனிப்பிரிவு 1956-ல் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் அமலாக்கப்பிரிவு (Enforcement Unit)
அடுத்த ஆண்டே, 1957-ல் இந்தப்பிரிவு ஒரு தனித்துறையாக விரிவுபடுத்தப்பட்டு, புதுடில்லி கடந்து மும்பாய், கொல்கத்தா, சென்னை ஆகிய மாநகரங்களிலும் கிளைகள் துவங்கப்பட்டு அந்நியச்செலவாணி பரிமாற்றத்தில் நடைபெறும் பொருளாதார குற்றங்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தும் சிறப்புப்பணி ED வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போதும் இத்துறை அமுல்படுத்தியது ஃபெரா சட்டத்தைத்தான்.
அவ்வப்போது இந்த FERA சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது தொடர்ந்த நிலையில் உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் இந்திய சந்தையிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "கட்டுப்பாடு" என்ற வார்த்தையே அந்நிய முதலீட்டாளர்களுக்கு வேப்பங்காயாய் கசக்க, ஆளும் அரசும் அதை மாற்றி "மேலாண்மை" என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது. ஆக, Foreign Exchange Regulation Act முலாம் பூசப்பட்டு Foreign Exchange Management Act என்றானது. கூடவே சட்டத்தில் நிறைய மாற்றங்களும். இது நடந்தது 1999-ல்.
சென்ற நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகள் உலக அரசியலில் அசாதாரணமானவை. சோவியத் யூனியனின் சரிவு, ராஜீவ் காந்தி உட்பட ஆங்காங்கே பல்வேறு நவயுக அரசியல் தலைவர்களின் படுகொலை என்று உலக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்தது. அமெரிக்கா சர்வதேச போலீஸ்காரனாகவும் எதிர்த்து குரல்கொடுக்க யாரும் இல்லாத ஒற்றை தண்டால்காரனாகவும் பரிணமித்த காலகட்டமிது.
FEMA முன்வைத்த பொருளாதார சலுகைகள் மற்றும் தளர்வுகள் மிகத்தவறாக பயன்படுத்தப்பட்டு பரவலாக வரி ஏய்ப்புகள் நடக்கின்றன என்ற குரல் நாடெங்கும் ஒலிக்கத்துவங்கியது. அந்த காலகட்டத்தின் பொருளாதார இதழ்களில் தலைப்புச்செய்திகள் பெரும்பாலும் இதுவாகத்தான் இருந்தது.
இரண்டாவது முறையாக பிரதமர் ஆகியிருந்த திரு. வாஜ்பாய் அவர்கள் FEMA சட்டத்தை ஒழித்துவிட்டு பல்வேறு மாறுதல்களுடன் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்தார். அதுதான் Prevention of Money Laundering Act. 2002-ம் ஆண்டு முதல் இந்தச்சட்டம்தான் அமுலாக்கத்துறையை வழிநடத்தி கட்டுப்படுத்துகிறது.
இந்த சட்டத்தைப்பற்றி சுருக்கமாக சொல்வதென்றால்... "இது பணமோசடி செய்வதைத் தடுக்கவும், பணமோசடி செய்ததிலிருந்து பெறப்பட்ட அல்லது அதில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், மேலும் இதனுடன் தொடர்புடைய மற்றெல்லா செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தவும், விசாரிக்கவும், தண்டிக்கவும் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும்"
'குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களைக் கண்டறிய விசாரணை நடத்தி, சொத்துக்களை தற்காலிகமாக இணைத்து, குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதையும், சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் சொத்து பறிமுதல் செய்யப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம் PMLA-ன் விதிகளைச் செயல்படுத்தும் பொறுப்பு இந்த சட்டத்தின் மூலம் அமுலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது"
"பார்க்க நல்ல சட்டமாத்தானேங்க இருக்கு..?" தேச பொருளாதாரத்துக்கு நல்லது செய்யும் இந்த சட்டத்துக்கு எதிரா ஏன் எதிர் கட்சிகளெல்லாம் கூப்பாடு போடுது..?
இதற்கு பதில் சொல்லுமுன் இந்த PMLA சட்டத்தின் சில முக்கிய கூறுகளை பார்ப்போமா..?
சட்டம் படிக்காதவர்களுக்குக்கூட தெரிந்த அடிப்படையான விசயங்களுள் ஒன்று, "குற்றம் சாட்டப்பட்டவர்களெல்லாம் குற்றவாளிகள் அல்ல; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை அனைவரும் நிரபராதிகளே" என்பது. அதுபோல், "ஒருவரை குற்றவாளி என்று நிரூபிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை" என்பதும்.
ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சாசனம் தரும் இந்த அடிப்படை உரிமையையே முற்றாக நிராகரிக்கிறது இந்த PMLA சட்டம். ஆம்...
1. அமலாக்கத்துறை ஒருவர்மீது குற்றம் சாட்டினாலே அவர் இந்த சட்டத்தின் பார்வையில் குற்றவாளி ஆகிவிடுகிறார் (குற்றம் சாட்டப்பட்டவராக அல்ல)
2. குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றத்தை அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்தான் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்படவேண்டும்.
3. இந்தியாவில் யார்மீது புகார் அளிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டாலும் ஒரு FIR (முதல் தகவல் அறிக்கை) தாக்கல் செய்யப்பட வேண்டும். அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டும், மேலும் நீதிமன்றத்திலும் சமர்பிக்கப்பட வேண்டும். ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் இந்த நடைமுறையே கிடையாது.
4. மேற்சொன்ன விதிவிலக்குக்கு PMLA சட்டம் சொல்லும் காரணம் இன்னும் விசேஷமானது. "அமலாக்கத்துறை காவல்துறை அல்ல, எனவே CRPC சட்டப்பிரிவுகள் இவர்களுக்கு பொருந்தாதாம்"
5. FIR க்கு இப்படி பரிந்துபேசும் சட்டம், காவல்துறை அல்லாத அமலாக்கத்துறைக்கு கைது செய்து காலவரையின்றி ஒருவரை சிறையில் அடைக்கும் அதிகாரத்தை அளித்திருப்பதுதான் ஆச்சரியம்.
6. அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டவருக்கு ஜாமீன் கிடைப்பது "குதிரைக்கு கொம்பு முளைப்பது" போன்றது. காரணம் முதல் தகவல் அறிக்கையே இல்லாதபோது எந்த அடிப்படையில் ஜாமீன் கோருவது..?
7. காவல்துறை விசாரணையின்போது கொடுக்கப்படும் வாக்குமூலங்களை பொதுவாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. நீதிமன்றத்தின் கூண்டில் ஏறி சம்பந்தப்பட்டவர் வாக்குமூலம் அளித்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும். ED வழக்கை பொறுத்தவரை விசாரணையின்போது கொடுக்கப்படும் வாக்குமூலம் முழுக்க செல்லும். ஆக, அச்சுறுத்தியோ ஆசைகாட்டியோ பெறப்படும் வாக்குமூலத்தால்கூட சம்பந்தப்பட்ட மாநில அரசியல் சூழலையே அசைத்துவிட முடியும்.
இன்னும் நிறைய சொல்லிக்க்ண்டே போகலாம், கட்டுரையின் நீளம் கருதி சுருக்குகிறேன்.
இதனால்தான் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ஹரி பரந்தாமன் அவர்கள், "இது ஒரு கறுப்புச்சட்டம்" என்று கூறுகிறார்.
"அரசியல் சாசனத்தின் பல அம்சங்களுக்கு எதிராகவும், இந்திய குற்றவியல் சட்டத்திற்கு முரணாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு சாவுமணி அடிப்பதாகவும் இருக்கும் இந்த சட்டம் ஜனநாயகத்துக்கே எதிரானது" என்பது நீதியரசரின் வாதம்.
குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் தண்டனை சட்டபூர்வமாக கொடுக்கப்பட வேண்டும் இல்லையா...?
2005 முதல் 5,906 வழக்குகளை கையாண்டுள்ள ED, 24 வழக்குகளை மட்டுமே முடித்துவைத்து குற்றத்தை நிரூபித்திருக்கிறது. இது 0.42% Conviction rate (தண்டனை விகிதம்). இதிலிருந்து இந்த சட்டத்தின் நேர்மை மற்றும் பயன்பாட்டை புரிந்த்கொள்ளலாம்.
சட்டத்தின் தீர்ப்புகள் நீதி வழங்குவதாக மட்டும் இருந்தால் போதாது, நீதி, நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கவேண்டும்.
தோழமையுடன்,
Fazil Freeman Ali