ஓர் இனத்தை, மொழியை அவ்வினத்தின் கலையை அரசியலை இன்னும் பற்பல விழுமியங்களை தலை நிமிர்த்திட காலம் அவ்வப்போது ஒரு தலைவனை தேர்வு செய்யும்…
மாணவப் பருவத்திலேயே ஈரோட்டுக் கண்ணாடி அணிந்துகொண்டு காஞ்சித்தலைவன் கை பிடித்து வளர்ந்த கலைஞரையும் தமிழ் மண் அப்படித்தான் தேர்வு செய்தது…
இளம் மாணவப் பருவத்திலேயே தான் பிரசவித்த மாணவ நேசன் இதழுக்காய் திறந்த அவரின் பேனா மூடி முரசொலியின் பல்லாயிரம் உடன்பிறப்பிற்கான கடிதங்களை தடம் பதித்து கனல் மூட்டும் கவிதை வரிகளையும் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட திரைப்பட வசனங்களையும் குறளுக்கும் சிலம்பிற்கும் பொன்னருக்கும் சங்கருக்கும் வாளுக்கு வேலிக்கும், காவியம் படைத்து அவர் விழி மூடிய பின்னேதான் அவர் பேனாவும் தன்னை மூடிக்கொண்டது..
அவசர நிலை காட்டாட்சி அவிழ்த்து விடப்பட்ட வேளையில் தணிக்கைத் துறையின் கண்களில் மண் தூவி இயக்கத்தை உயிர்ப்பாய் வைத்திருந்த ஓர் அரசியல் தலைவன் உண்டென்றால் அது கலைஞர் மட்டுமே..
மண்டியிட வேண்டுமென்று மத்திய அரசின், அல்ல அல்ல…ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் இறுமாப்பில் இருக்க, நிதி வேண்டி கலைஞர் கோரிக்கை விடுத்த போது, ” என்னிடம் பணம் காய்க்கும் மரம் கிடையாது ” என மொரார்ஜி எகத்தாளமாய் கூறினார்..
” அப்படி ஓர் மரம் உங்களிடம் மட்டுமல்ல, உலகத்திலேயே கிடையாது” என உரக்கச் சொல்லிய ஆளுமை கலைஞருக்கே உரித்தானது..
அன்னை இந்திரா அவருக்கு அணுக்கமாய் இருந்த போது குடியரசு தலைவருக்கான தேர்வு பரீசிலனைக்கு வந்தது..நயவஞ்சக வெங்கட்ராமன் பரீசிலனையில் இந்திராவின் மனதில் முதலில் இருந்தார்…
கலைஞரின் கருத்தைக் கேட்டபோது, ” நீங்கள் உயர்குடியில் வந்தவர், குடியரசு தலைவரும் உயர் குடி என்றால் அது சமூக நீதி ஆகாது. எனவே க்யானி ஜெயில்சிங்கை அப்பொறுப்பிற்கு ஆளாக்குங்கள்” என்றவுடன் அன்னை கேட்டாராம் அவர் எந்தச் சமூகம் என்று…
ஜெயில்சிங் பிற்படுத்தப்பட்ட ஆசாரி சமூகத்தை சேர்ந்தவர்..அவரையே ஆக்குங்கள் தலைவராய் என்ற கலைஞரின் முன்னெடுப்பே அன்னையால் செயற்படுத்தப் பட்டது..(அதற்காக ஆர்.வீ வஞ்சம் தீர்த்துக் கொண்டது தனிக்கதை)
இப்படி குடியரசு தலைவரைக்கூட சமூக நீதிக் கண்ணோடு தேர்வு செய்தது தமிழ்நாடு என்று நம் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் கலைஞரின்றி வேறு எவருமில்லை…
பள்ளி இறுதி தாண்டாத அந்த பகலவனால்தான் தமிழினத்தின் கொடி தரணியெங்கும் பட்டொளி வீசி பறந்தது…
தந்தை பெரியார் காலமான மறுகணம் அரசு விடுமுறை அறிவிக்கச் சொன்னார் கலைஞர்.. தலைமைசெயலர் சபாநாயகமோ விதிகளில் வழி இல்லை என மறுத்துரைத்தார்…
காந்தியின் மரணத்திற்கு எப்படி நாடு முழுதும் விடுமுறை அளிக்கப்பட்டது என வினவினார் கலைஞர்..
மென்று முழுங்கியவாறே தலைமைச் செயலர் சொன்னார் ,” அவர் father of nation “. உடனே உரைத்தார் கலைஞர் ” பெரியார் father of our nation” என்று ..
விடுமுறை அறிவிக்கப்பட்டது..
ஆட்சி கலைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலையும் மீறி தந்தை பெரியாருக்கு தகைமை சேர்க்க உத்தரவிட்ட கரங்கள் தான் கலைஞரின் கரங்கள்…
பாடல்கள் மட்டுமே ஒலித்த, பட்டி தொட்டி தேநீர் கடைகளில்
முதன் முதலாய் ஒலித்த, வசனங்களுக்கு சொந்தக்காரர் அவர்…
திரை உலகில் சக்தி கிருஷ்ணசாமி, ஆரூர்தாஸ், திருவாரூர் தங்க ராசு, வியட்நாம் வீடு சுந்தரம் போன்ற ஆளுமைகள் வசனகர்த்தாக்களாக இருந்த போதிலும்….
பட்டுக் கோட்டை அழகிரியின் மேடைப் பேச்சிலும், சுய மரியாதை சீற்றத்திலும் கவரப்பட்ட அவர் மனம் பெரியாரின் வளர்ப்பிலும், அண்ணாவின் அரவணைப்பிலும் ஓர் மாபெரும் அரசியல் சகாப்தமாய் முகிழ்த்து, அரசியல் விஞ்ஞானிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாய் வாழ்ந்தவர் அவர்…
அவசர நிலைப் பிரகடனம் என்ற அந்தகாரம் இந்திய துணைக் கண்டத்தை சுற்றி சூழ்ந்த போது, ஆட்சி அதிகாரத்தை இழப்போம், அடக்கு முறைக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் எமர்ஜென்சியை எதிர்த்து தென் மூலையில் இருந்து அவர் ஏற்றிய வெளிச்சமும் அவர் தீரமும் அடங்கிய அத்தியாயத்தை, இந்திய ஜனநாயக வரலாற்றில் நமக்கு வழங்கிய ஆசான் அவர்….
பெற்ற புதல்வனை காராக்கிரகத்திற்கு கையளித்து, அவர் குண்டாந்தடி கொடுமைகளுக்கு ஆளானபோதும், கட்சியின் தள கர்த்தர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறைக் கொடுமையால் உயிர் நீத்தபோதும், கடும் அடக்கு முறைகளுக்கு நடுவே திருமண வாழ்த்தரங்கங்களையும், இரங்கல் கூட்டங்களையும் அரசியல் மேடைகளாக மாற்றி கட்சியை உயிர்ப்புடன் கொண்டு சென்றவர் அவர்…
அரசியல் தவிர்த்து, ஆழ்ந்த இலக்கியம், நாடகம் கவிதை கட்டுரை, கேலிச்சித்திரம், பத்திரிக்கை என ஒர் அஷ்டாவதானி யின் திறன் கொண்டு அனைத்திலும் முத்திரை பதித்தவர் அவர்…
தேனியைப் போன்ற சுறுசுறுப்பு கொண்டவர் அவர்….
நாற்பது தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும், இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்கி தண்டித்த போதும், இரண்டையும் சமமாய் கருதும் மனோபலம் கொண்டவர் அவர்….
எல்லாக் கிராமங்களுக்கும் மின்சாரம் என்று தற்போது மைய அரசு சாதிக்க முயற்சிக்கும் கனவை போன நூற்றாண்டிலேயே தமிழகத்தில், நனவாக்கியவர் அவர்…
விவசாய பல்கலை கழகம் நிறுவியதும், குமரியில் வள்ளுவன் சிலை வடித்ததும், சென்னையிலும் பூம்புகாரிலும் கோட்டங்கள் கண்டதும், வரலாற்று ஆளுமைகளுக்கு மெரீனாவில் சிலைகள் செதுக்கியதுமான போற்றத்தகுந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர் அவர்…
பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை நாட்டிலேயே முதன் முதல் வழங்கியவர் அவர்… கண்ணொளி திட்டம், கை ரிக்க்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வு, குடிசை மாற்று வாரியம் போன்ற சமூக நல திட்டங்களை கொண்டு வந்தவர் அவர் …
எதிரிகளின் கடும் விமர்சனங்களைக் கூட, சிலேடை கலந்த நகைச்சுவையோடு எள்ளலாய் பேசி திருப்பி விடும் திறமையை தன்னகத்தே அபாரமாய் பெற்றவர் அவர்….
குளித்தலையில் ஆரம்பித்த சட்டமன்ற பணி தோல்வியே காணாமல் அரை நூற்றாண்டு தாண்டித் தொடர்ந்ததும், தமிழக அரசியல் ஐம்பதாண்டு காலமாய் தன்னையே சுற்றிச் சுற்றி வருமாறு வாழ்ந்தவர் அவர்…
இன்று அவரின் பிறந்த நாள்…
கலைஞரின் பிறந்த நாள்…