எல்லை கிராமங்கள்... கைமாறும் பட்டயம்
பாலாவோரையின் எல்லை கிராமங்களில் வழுக்கியாற்று பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. வழுக்கியாறு சீரமைக்கப் பட்டதும் வயல்களுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று போனதால் பல வாய்க்கால்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருந்தன. அவற்றை செப்பனிட வேண்டிய தேவை இருந்தது.
ஏற்கனவே பலதடவை குலதிலகனின் அரசவைக்கு முறை யிட்டும் அரசரோ, அவனது அமைச்சர்களோ எதுவித உருப்படி யான பணிகளுக்கும் செவி சாய்க்கவில்லை.
இறுதியில் அங்கு வசிக்கும் குடிமக்கள் பாலாவோரை பணிமனைக்கு வந்து தங்கள் வேண்டுகோளை தெரிவித்து இருந்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பாக்கியத்தம்மாள் அவற்றை செப்பனிட பாலாவோரை அரசின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் என்று தெரிவித்தாள்.
அவர்களை குலதிலகனின் அரண்மனைக்கு சென்று அதற்குரிய அனுமதி பட்டயத்தை வாங்கிவருமாறு கேட்டு கொண்டாள்.
எல்லையோர குடிமக்கள் தன்னை நாடி வருவார்கள் என்பது ஏற்கனவே பாக்கியத்தம்மாள் எதிர்பார்த்ததுதான்.
எல்லையோர கிராமத்து வாய்க்கால் பணிகள் ஆரம்பிக்கும் போது குலதிலகனுக்கு எள்ளளவு சந்தேகமும் வராதவாறு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலபடுத்தி விடவேண்டும் என பலநாட்களுக்கு முன்பே வழுக்கியாற்று நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
பணிகள் செய்வதற்கு உரிய அனுமதி பட்டயம் கிடைத்ததும் மின்னல் வேகத்தில் செயல்படவேண்டிய தேவை இருந்தது.
குலதிலகனை நோக்கி சென்ற குடியானவர்கள் பட்டயத்தை வாங்கி கொண்டு வர வேண்டுமே?
அவர்கள் சென்ற இருநாட்களுக்கு பின்பு குலதிலகனும் நான்கு பாதுகாப்பு வீரர்களுமாக வழுக்கியாற்றை நோக்கி வந்தனர். அவர்களின் குதிரைகள் எழுப்பும் ஓசை பாக்கியத்தம்மாளுக்கு மிகவும் பரிச்சயமானது. அவற்றின் குழம்போசையை அவள் துல்லியமாக அறிவாள்.
குதிரையை மட்டுமல்ல குலதிலகனின் முகமும் கூட அவனின் மனவோட்டத்தை அவளுக்கு கூறிவிடும்.
ஏனோ அவன் தயங்குவது தெரிந்தது.
கையில் பட்டயத்தை வைத்திருந்தான், ஆனால் முகத்தில் எதோ ஒரு கேள்வி குறி தென்பட்டது.
வழக்கமான விருந்தோம்பல் கருமங்களுக்கு பின்பு மெதுவாக அவனே இதுபற்றி கூற தொடங்கினான்.
“ஒரே நேரத்தில் கோவில் கட்டுமானமும் வழுக்கியாற்று பணிகளும் நமது சக்திக்கு மிஞ்சிய திட்டங்களாக இருக்கையில் எல்லைப்புற வாய்க்கால் பணிகளும் அவசியம்தானா? அவற்றை அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைத்தால் நல்லது என்று தோன்றுகிறது“ என்று கூறி நிறுத்தினான்.
“அது உண்மைதான் இரண்டு காரியங்களுமே கொஞ்சம் அகலக்கால் வைக்கும் வேலைதான். ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் வழுக்கியாற்று பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் வந்ததும் வழுக்கியாற்றில் முன்பு போல் இல்லாமல் இனி நீரின் அளவு மிக அதிகமாக வரும். எல்லை வாய்க்கால்கள் சீராக இல்லாவிடில் அவை குடியிருப்புக்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடவும் கூடும். அது மட்டுமல்ல வாய்க்கால்கள் சீரமைத்துவிட்டால் குடியானவர்கள் வயல்கள் செழிக்க தொடங்கிவிடும். நமது மூதாதையர் காலத்தை போன்று நமது காலத்திலேயே மீண்டும் வயல்கள் தங்கம் விளையும் பூமியாகிவிடும். அரசின் தானிய கிடங்கும் நிரம்பி விடும், நாட்டின் பொருள் வளமும் பெருகிவிடும்“ என்று நீட்டி முழங்கினாள்.
அக்கையாரின் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை தேனருந்திய மாந்தி போல கேட்டுகொண்டிருந்தான் பாலவோரை அரசன் குலதிலகன்.
மிகுந்த திருப்தி அடைந்த அவன் தன்கையில் வைத்திருந்த பட்டயத்தை கொடுத்தான்.
வாய்க்கால் திருப்பணிக்கு அனுமதி வழங்கிய அந்த பட்டயங்களை பெற்று கொள்ளும்பொழுது அவளின் மெல்லிய புன்னகையையோ அல்லது கண்களில் தெரிந்த மின்னலையோ அவனது சிற்றறிவு கவனிக்கவில்லை.
பிற்காலத்தில் அந்தந்த எல்லை கிராமங்கள் வழுக்கியாற்று நிர்வாகத்தின் கீழ் வரப்போகின்றன.
உண்மையில் இந்த கணத்தில் இருந்தே அவன் அதன் மீது தனக்குள்ள அதிகாரத்தை இழந்து விட்டான். அக்கையாரிடம் அவனுக்கு இருந்த நம்பிக்கை அவனது அறிவை ஓரளவு கட்டி போட்டிருந்தது.
வழுக்கியாற்று பணியாட்களில் ஐம்பது பேரை தெரிவு செய்து எல்லைக்கிராம வாய்க்கால் பணிகளுக்கு அனுப்ப வேண்டும்.
புத்தூர் நம்பி உடனே செயலில் இறங்கினான். வாய்க்கால் கட்டும் பணிகளை தானே நேரடியாக கண்காணித்து பல இடங்களில் புதிய வாய்க்காலும் அமைக்க வேண்டி இருந்தது.
அளவு சித்திரங்கள் வரைவோரை அழைத்து பலவிதமாக ஆலோசித்து புதிய வாய்க்கால் அடையாளங்களும் இடப்பட்டன.
பாலாவோரையை சுற்றி அமைக்கப்படும் வாய்க்கால்கள் உண்மையில் வெறும் வாய்க்கால்கள் மட்டுமல்ல. தேவை ஏற்படின் பாலாவோரையின் காவல் அரண்களும் அவைதான்.
இந்த உண்மை பாக்கியத்தம்மாளுக்கும் அவளது நெருங்கிய ஆலோசகர்களுக்கு மட்டும்தான் தெரிந்து இருந்தது.
இந்த வாய்க்கால் சீரமைப்பு பணிகள் பற்றிய விபரம் சிலநாட்களின் பின்பு அரசனின் பார்ப்பன குழாத்துக்கு தெரிய வந்தது.
அவர்களுக்கு முதலில் இதுபற்றி போதிய விளக்கம் இல்லாமல் இருந்தது. பின்பு வாய்க்கால்கள் ஒழுங்காக அமைந்தால் தங்களுக்கு பின்பு நன்மைதானே என்று எண்ணிக்கொண்டனர்.
கொஞ்சம் சந்தேகமும் அதிக அறிவும் கொண்ட சில பார்ப்பனர்களுக்கு ஏனோ இந்த பணிகள் கொஞ்சம் பயத்தை கொடுத்தது. அக்காவும் தம்பியும் மிகவும் ஒற்றுமையாகி விட்டனர். குறிப்பாக அனுமதிப்பட்டயத்தை அவன் எவரது ஆலோசனையையும் பெறாமல் அக்கையரிடம் கொடுத்தது அவர்களுக்கு உகந்ததாக இல்லை. மேலும் அந்த பட்டயத்தில் இருந்த வாசகங்கள் என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை.
அதைப்பற்றி அரசனிடம் கேட்கவே பயந்தார்கள்.
சிலநாட்கள் சென்றது அவர்கள் அடிக்கடி எல்லையோரம் சென்று வாய்க்கால் பணிகளை பார்த்து வந்தார்கள். மெதுமெதுவாக அந்த வாய்க்கால்களின் நேர்த்தியும் உறுதியும் பார்பனர்களை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
இவ்வளவு சிரத்தையாக வாய்க்கால்களை அமைத்து விட்டு எப்படி எங்களுக்கு இந்த வயல்களை தானமாக தருவதற்கு முன்வருவார்கள்?
இந்த எண்ணம் தவிர்க்க முடியாமல் அவர்கள் மனதில் எழுந்து பயம் காட்டியது.
வல்லாளனுக்கு பாக்கியத்தம்மாளின் தூதன் ஒரு ஓலை கொண்டுவந்தான். ஓலை கொண்டு வந்தவனை உரிய சன்மானம் கொடுத்து அனுப்பி விட்டு அதை வாசித்தான். ஒரு பெரிய உதவியை அவனிடம் எதிர்பார்த்து அவள் எழுதியிருந்தாள். இந்த நாளுக்காகத்தான் அவன் காத்திருந்தான் என்றுதான் கூறவேண்டும்.
வாழ்க்கையில் எல்லாம் கிடைத்தும் எதுவுமே இல்லாதவனாக அவன் மாறிப்போயிருந்தான்.
தெரிந்தே தோல்வியை தேடி தேடி ஓடியது அவர்களின் காதல் இதிகாசம்.
அவளின் சாம்ராஜ்யத்தில் வீசும் காற்றாகத் தானும் இருந்திருக்க கூடாதா என்று மனம் நொந்தான். அவள் தன் உதவியை நாடியது அவன் நெஞ்சில் ஆயிரம் மலர்களை பூத்து விட்டிருந்தது.
மிகுந்த மகிழ்ச்சியோடு குதிரையில் ஏறினான். அவனது மனதில் ஓடும் உணர்வுகளை புரிந்து கொண்ட அவனது சிவப்பு குதிரை காற்றோடு போட்டி போட்டுகொண்டு பறந்தது.
குதிரை பாக்கியத்தமாளின் மாளிகையை அடையவும், மழை தூறல் தொடங்கவும் சரியாக இருந்தது.
“என்ன பெரியவரே வரும்போது மழையையும் சேர்த்தே கூட்டிக்கொண்டு வந்துவிட்டீரே“ என்று வேடிக்கையாக வரவேற்றாள் பாக்கியத்தம்மாள்.
மழையில் நனைவது அவனுக்கு விருப்பமானதுதான் ஆனால் அது அவ்வளவு நல்ல சகுனமாக இருப்பதில்லை என்பது அவனது நம்பிக்கை.
இன்றோ அந்த மழையையும் அவன் ரசித்தான் என்றே கூறவேண்டும். அவளை காணப்போகிறோம் பேசப்போகிறோம் என்ற மகிழ்ச்சி சுற்றி நடப்பதை எல்லாம் சொர்க்கத்தின் காட்சிகளாக்கி விட்டிருந்தது.
அவள் மட்டுமென்ன என்னதான் பொறுப்புகள் சுமக்கும் அரசியாக இருந்தாலும் மனதில் கிளர்ந்தெழுந்த மகிழ்ச்சியை அருகில் நிற்பவர்களுக்கு மறைக்க முடியாமல் கொஞ்சம் திணறித்தான் போனாள்.
அது அவளுக்கே ஒரு அதிசயம். ஓ எனக்குள் இன்னமும் ஒரு சாதாரண பெண் ஒழிந்து கொண்டிருக்கிறாளே என்று தனக்குள் சிரிந்து கொண்டாள்.