பெரு மழை கட்டியம் கூறிய போர் மழை
புத்தூர் நம்பியின் அதீத அறிவிலும் ஆற்றலிலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பது சரியானதா என்று சில வேளைகளில் அக்கையர் எண்ணுவது உண்டு. அதற்கு காரணமும் இருந்தது.
காணமல் போன பார்ப்பனர்களின் விபரங்களை தேடி அயல் தேசத்து ஒற்றர்கள் உலாவ தொடங்கினர்.
இச்செய்தி அக்கையர் செவியில் எட்டியது. அயல்தேசங்கள் பார்ப்பனர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவது தங்கள் திட்டங்களை மேலும் சிக்கலாகும் என்ற கவலை அவளுக்கு உண்டாயிற்று.
நம்பியின் திட்டப்படி எல்லைப்புற கிராமங்களின் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் புயல் போல வேகமாக நடைபெற்று கொண்டிருந்தன. அங்கு என்ன நடக்கிறது என்று யாரும் சிந்திக்கும் முன்பாகவே களப்பணிகள் நிறைவேறிக் கொண்டிருந்தன.
இடையிடையே அங்கு வருகை தந்த குலதிலகன் நடைபெறும் பணிகளை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டு அக்கையார் பாக்கியத்தம்மாளை ஒரேயடியாக புகழ்ந்த வண்ணமே இருந்தான்.
கூடவே வரும் பார்ப்பனர்கள் தங்கள் சந்தேகங்களை வெளியே காட்டி கொள்ள பயந்தார்கள். அவர்கள் வாய்க்கால் கட்டுமானங்களை உற்று உற்று நோக்கி கண்களால் அளவெடுத்தார்கள். ஈற்றில் சிந்தித்து சிந்தித்து எதுவித முடிவுக்கும் வர முடியாமல் திணறிய வண்ணம் நம்பியின் விருந்தோம்பலை புகழ்ந்து விட்டு செல்லலாயினர்.
பெருவாரியான வயல் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறைவேறி விட்டன.
அதுமட்டுமல்ல வழுக்கியாற்று பணிகளும்கூட பெருமளவு நிறைவேறி இருந்தது. எவராலும் ஊகிக்க முடியாத அளவு வேகமாக அப்பணிகள் நிறைவேறி இருந்தது.
வெளியே தெரியாத ஒரு அமானுஷ்ய சக்தி புத்தூர் நம்பியின் பின்னால் இருப்பதாக சிலர் கருதினர். நம்பியின் வரவுக்கு பின்பு காரியங்கள் புயல் வேகத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.
அடிக்கடி வழுக்கையாற்று படுகைக்கு வருகை தரும் குலதிலகன், ஏனோ புத்தூர் நம்பியுடன் அதிகம் பேசியதில்லை. அவனின் பார்வைக்கு ஏனோ நம்பியின் முக்கியத்துவம் உவப்பில்லாமல் இருந்தது. கற்றோரை கற்றோர் அல்லவா காதலிப்பர்!
நம்பியை அளவெடுக்கும் ஆற்றல் அற்று இருந்தான் குலதிலகன். அவன் மட்டும் கொஞ்சம் அறிவுள்ளவனாக இருந்து, நம்பியின் ஆலோசனைகளை கேட்க தயாராகவும் இருந்திருந்தால் வரலாறு அவன் பக்கமாக இருந்திருக்கும்.
மழைக்காலம் வருவதற்கு அறிகுறியாக அங்காங்கே சிறு சிறு மழையும் கருத்த மேக மூட்டமும் உருவாக தொடங்கியது.
நம்பிக்கும் அக்கையாருக்கும் தற்போதெல்லாம் நித்திரையே போய் விட்டிருந்தது.
புதிதாக கட்டியிருந்த வழுக்கியாற்று அணைகளின் உண்மை யான பலம் மழைக்காலத்தில்தான் தெரியவரும்.
சீரமைக்கப்பட்ட வாய்க்கால் போதியளவு வெயிலில் காய முதல் மழை பெய்தால் அவை கரைந்து போய்விடும்.
அளவான மழை பெய்தால் அவை கெட்டியாகி மிகவும் பலம் வாய்ந்ததாகி விடும்.
வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடக்க முதலே நிமித்தகாரி அம்மணியின் ஆலோசனைகளை கேட்டுத்தான் ஆரம்பித்தார்கள்.
கால நிலையியல் கலையில் அவள் மிகவும் நிபுணத்துவம் பெற்றவள் என்பது பலருக்கும் தெரியாது. அவளை வெறும் நிமித்தகாரி என்ற அளவில் தெரிந்த அளவு அவள் காலநிலை இயல் கலையில் தேர்ச்சி பெற்றவள் என்பது பலருக்கும் தெரியாது. அதை அவள் தனது பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டாள்.
அம்மணி கூறியிருந்த காலப்பிரமாணம் கொஞ்சகூட தவறக் கூடாது. ஒருவேளை தவறி விட்டால் அதற்கு என்ன மாற்றுவழி செய்யலாம் என்றெல்லாம் கூட நம்பியும் சிந்தித்து கொஞ்சம் சிரமபட்டான். என்னதான் அம்மணி ஒரு ஞானக் களஞ்சியமாக இருந்தாலும் முற்று முழுதாக அவளின் அறிவுரையில் மட்டும் தங்கி இருப்பது ராஜதந்திரம் அல்லவே?
அவனின் ஒவ்வொரு நாடி நரம்பிலும் ராஜதந்திர குருதிதான் ஓடிக்கொண்டு இருந்தது. அதை சரியாக புரிந்து கொண்டது பாக்கியத்தம்மாள் மட்டும்தான். அவனை சுற்றி ஒரு மர்ம வரலாறு இருப்பதாக பலருக்கும் தோன்றியது.
அவர்களின் சந்தேகத்துக்கு பல காரணங்கள் இருந்தன.
பேராவூர் பெரியவரசு காலத்திலேயே அரண்மனையில் நம்பிக்கு மிகவும் செல்வாக்கு இருந்தது ஒரு காரணம். அதைவிட முக்கியமான காரணமாக அமைந்த்தது நம்பியின் தோற்றம்.
அரசரின் முகச்சாயல் அவனிடம் இருந்தது. இளம்பிராயத்தில் சதா அரண்மனையிலேயே உலவி திரிந்து அரசனின் கொஞ்சலுக்கும் குலாவலுக்கும் ஆளாகி இருந்தான். அதனாலேயே அரசனின் முகச்சாயல் அவனிடம் பதித்து விட்டதாக வேடிக்கையாக பலரும் கூறுவர். பாக்கியத்தமாளும் குலதிலகனும் நம்பியோடு சிறுவயதில் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். நம்பிக்கு பத்து வயதில் அவனது பெற்றோர் அவனையும் கூட்டி கொண்டு புத்தூர் சென்று விட்டனர்.
மனிதர்களின் வாழ்வில் உள்ள மர்மங்களே கண்டறிய கடினமாக இருக்கும்போது இயற்கையின் மர்மங்களை அளவிட முடியுமா?
நிமித்தகாரி அம்மணி கூறிய காலப் பிரமாணத்துக்கு முன்பாகவே மழை வரும் அறிகுறி தென்பட்டது.
நம்பியும் அக்கையாரும் ஊசி முனையில் இருப்பது போல நிம்மதி இழந்தனர். நல்லவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்து விடக்கூடாது என்பது இயற்கையின் எண்ணம் போலும்?
மெல்லிய நடையில் மழைக்காலம் தனது பவனியை தொடங்கியது. ஆங்காங்கே சிறு தூறல்கள் ஆரம்பித்திருந்தன.
வழுக்கியாற்று பணியாளர்களும் வாய்க்கால் சீரமைப்பு பணியாளர்களும் தங்கள் தங்கள் ஊதியங்களை பெற்று கொண்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
நேமிநாதர் கோவில் பணிகள் மட்டும் தொடர்ந்தது. கோவில் பணிகள் தொடர்வதற்கு மழை ஒரு தடை இல்லையல்லவா?
அக்கையரும் நம்பியும் ஏனைய நம்பிக்கைக்கு உரிய ஆலோசகர்களும் கரந்துறை பாசறையில் கூடினர். எதிர்பார்த்த தற்கு முன்பாகவே களமிறங்க வேண்டிய அவசியத்தை எல்லோரும் உணர்ந்து அதற்குரிய முன் நகர்வுகளை பற்றி ஆலோசித்தனர். பல மணிநேர ஆலோசனையை எதிர்பார்த்து தொடங்கிய மந்திரிசபை முழுதாக இரண்டு நாட்களை விழுங்கி விட்டிருந்தது. முடிவில் முழுதிட்டமும் உருப்பெற்று இருந்தது.
ஆங்காங்கே இருந்த தளபதிகளையும் இதர அரண்மனை காவலர்களையும் ஒருங்கு சேர்த்து நம்பியின் தலைமையில் புதிய படை அமைப்பது என்று முடிவானது.
பெருமழையை எதிர்பார்த்து அவர்களின் போர்மழை காத்திருப்பது போல தோன்றியது. படைநகர்வு பற்றியோ எது களம் எது தளம் என்பது பற்றியோ பொதுவாக எவருக்கும் தகவல்கள் மிகவும் சொற்பமாகவே தெரிந்திருந்தது.
அக்கையாருக்கும் நம்பிக்கும் மற்றும் நம்பிக்கையான சில தளபதிகளுக்கும் மாத்திரமே அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்று தெரிந்தது..
உண்மையில் அவர்களுக்கும் கூட பல விடயங்களில் சரியான ஒரு திக்கு தெரியவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். ஏனெனில் நிலைமை அப்படி சிக்கலாக இருந்தது.
மிக பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்று நிமித்தகாரி அம்மணி கூறியிருந்த கூற்று தவறிப்போக கூடாது. மழை சரியான நேரத்தில் சரியான அளவு பெய்யுமாக இருந்தால் அவர்கள் எண்ணியது போல திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் அடுத்த மார்க்கத்தை இயக்க வேண்டும். அதில் உள்ள சாதக பாதகங்களை இப்பொழுதே ஊக்கிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
மழை சிறிய அளவில் தூற தொடங்கியதுமே இனி வழுக்கியாற்று பணிகள் நடைபெறாது என்று புரிந்த கொண்ட குலதிலகன், பணியாளர்கள் இனி நேமிநாதர் கோவில் பணிகளை கவனிக்கலாம் என்று அக்கையாரிடம் வேண்டி கொண்டான். வழமை போல மறுப்பேதும் கூறாமல் உடனேயே பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக பதிலளித்தாள்.
அந்தப்புரத்தில் மேனகை பிராட்டியோடு மதுவருந்தி கொண்டு ஆடல் பாடல் மகளிரோடு வேடிக்கையும் விநோதமுமாக குலதிலகனின் பொழுதுகள் கழிந்தது.
ஒரு இரவு நடுச்சாமத்தில் அவர்களின் இசையையும் மீறிய இடி முழக்கம் கேட்க தொடங்கியது.
இடியும் மின்னலும் பெருமழையும் அவர்களின் ஆடல் பாடலை மேலும் ரசனை உள்ளதாக ஆக்குவதாக அவனும் அவனது கூத்துப்பட்டறை மேதாவிகளும் கருதினர்.
அவர்கள்தான் சுயநினைவில் இல்லையே?
அவர்களின் கலை மாண்பை மது அரக்கன் மெல்ல மெல்ல விழுங்கி கொண்டு இருந்தான். குலதிலகனின் சேர்க்கை கலைஞர்களின் மேன்மையை மெதுவாக அரித்து கொண்டு இருந்தது.
பொருளாசையால் குலதிலகனை தங்கள் வலையில் வீழ்த்தி அரசைகளவாட வந்தவர்கள், மதுப்பழக்கத்தால் தங்களையே இழந்து கொண்டிருந்த பரிதாபம் அந்த அரண்மனையில் அரங்கேறி கொண்டு இருந்தது.
நேமிநாதர் கோவில் பணிக்கு வழுக்கியாற்று பணியாளர்களும் வந்து சேர்ந்து கொண்டமையால் அரண்மனையிலும் கோவில் மண்டபங்களிலும் இடநெருக்கடி ஏற்பட்டது.
பார்ப்பனர்கள் தங்கள் ஆசார சீலங்கள் மிகவும் பங்கப்படுவதாக அரசனிடம் செயற்கையான கவலையோடு முறையிட்டனர்.
அவர்களுக்கு என்ன இடர்பாடு நேர்ந்தாலும் உடனேயே உருகி வழியும் குலதிலகன் அமைச்சர்களை அழைத்து இது பற்றி ஆலோசனை கேட்டான்.
பார்ப்பனரக்ளுக்கு தனியாக மூன்று பெரிய கூடாரங்களை அமைத்து கொடுத்து விட்டால் அவர்கள் கோவில் மண்ட பங்களில் தங்கவேண்டியதில்லை என்று ஆலோசனை கூறினர். எல்லோரும் அது நல்ல ஏற்பாடு என்று ஏற்று கொண்டனர்.
இந்த செய்தியை அறிந்து அக்கையாரும் நம்பியும் பரஸ்பரம் புன்னகை பரிமாறி கொண்டனர். இதுவும் உண்மையில் நம்பியின் திட்டத்தில் உள்ள ஒரு நகர்வுதான்.
ஒரு இரவு ஊழிக்காலமே வந்துவிட்டதோ என்னும் படியான பெருமழை பொழியத்தொடங்கியது. இடியும் மின்னலும் பயமுறுத்தியது. குலதிலகனும் அந்தப்புர அழகிகளும் தங்களை மறந்து போதையின் மேல் நீந்தி கொண்டிருந்தனர்.
பார்ப்பனர்கள் தங்கி இருந்த கூடாரம் அந்த மழையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை மெதுவாக இழக்க தொடங்கியது. ஆங்காங்கே மெதுவாக மழை நீர் ஒழுக தொடங்கியது. அவர்கள் ஓடி ஓடி கையில் கிடைத்த பாத்திரங்களை நீர் ஒழுகும் இடத்தில் எல்லாம் பரப்பி வைக்க தொடங்கினர்.
நேமிநாதர் கோவில் பணியாளர்களும் வந்து கூடாரத்து மழை ஒழுக்கோடு போராடிக்கொண்டு இருந்தனர். நேரம் செல்ல செல்ல மழை பெருத்து கொண்டே போனது.
மழையின் அடுத்த தாக்குதல் போன்று எந்த காலத்திலும் எந்த பெரிய மழையிலும் ஒழுகாத குலதிலகனின் அரண்மனையிலும் ஆங்கங்கே நீர் ஒழுக தொடங்கியது.
அரண்மனையில் மழைநீர் ஒழுகிறதே என்று எல்லோரும் அதிர்ந்து போயினர். இது எப்படி நிகழும்?
எத்தனை வருடங்கள் எத்தனை பெருமழையை எல்லாம் கண்ட இந்த அரண்மனை கூரை இப்போது எப்படி ஈடாடுகிறது?
எல்லோர் மனதிலும் திகில் பரவ தொடங்கியது.
இது ஏதோ ஒரு தீய சகுனமாக அல்லவா தெரிகிறது என்று புரோகிதர்கள் பேசத்தொடங்கினார்.
அதிர்ந்து போன அரசனும் திகைப்பு நீங்காமல் ஏனையோர் பேசும் கருத்துக்களை கேட்டு கொண்டிருந்தான்.