மரங்கள்தான் உண்மையான ஞானகுரு... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?
நாம் வாழும் இந்த பூமியை பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா?
இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது.
மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது.
எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே மரங்கள் செடி கொடிகளோடு மிகவும் பரிச்சயம் உள்ளவர்கள்.
மனதை ஒரு முகப்படுத்தி தியானம் அல்லது சுயதேடல் முயற்சி உள்ள பலர் மர நிழலில் அமர்ந்து இருப்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதை அறிவோம்.
புத்தர் மட்டும் அல்ல அவருக்கு முன்பிருந்தவர்களும் மரத்தின் நிழலில்தான் மன அமைதி பெற்றார்கள் என்பது வரலாறு.
இவற்றில் இருந்து நாம் மிகப்பெரும் பாடத்தை படிக்க வேண்டி உள்ளோம்.
இந்த உலகில் இருக்கும் எல்லா பொருட்களும் எல்லா செயல்களும் உண்மையில் ஒரு இயங்கு சக்தியின் வெளிப்பாடுதான்.
(இங்கே சக்தி என்றதும் யாராவது அம்பாள் என்று கருத்து கூற முயன்றால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.)
இயங்கு சக்தியானது எண்ணங்கள்,ஆசைகள் கோபம் காதல் வெறுப்பு போன்றது மட்டும் அல்லாமல் அவையே கண் செவி போன்ற ஐம்புலன்களாலும் உணரக்கூடிய பொருட்களாகவும் சம்பவங்களாகவும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன.
இந்த பரிணாம வளர்ச்சி என்பது இன்று பெரும் வல்லமை உள்ள ஒரு உயிரினமாக நாம தோற்றம் பெற்றுள்ளோம்.
நாம் எங்கே இருந்து வந்தோம்?
நாம் வந்த வரிசையில் எமக்கு பின்னே இருப்பவர்கள் யார் யார்?
பரிணாம வளர்ச்சி புகையிரதத்தில் நாம்தான் முதல் பெட்டியில் இருப்பதாக எண்ணுகிறோம்.
இதுவரை அதை எந்த உயிரனமும் மறுத்து கூறவில்லை என்று நம்புகிறோம்.
இந்த பரிணாம வளர்ச்சி தொடரில் எமக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் நாய் பூனை போன்றவை இருப்பதாக சிலர் நம்புகிறார்கள் ( சில மனிதர்கள் கூட அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்தால் நான் பொறுப்பாளி அல்ல) இங்கேதான் மிகவும் அற்புதமான ஒரு பரிணாம வளர்ச்சி கட்டமைப்பு தோன்றியுள்ளது.
தோற்றத்தின் பல ஆரம்ப கட்டங்களை கடந்து மரம் செடி கொடிபயிர் என்ற படிகளில் தோற்றம் பெற்ற உயிரினங்கள் நாம் இதுவரை கண்ட பரிணாம வளர்சி படிகளிலே அதி அற்புத அழகான பிறப்பு என்று கூறுவேன்.
நன்றாக சிந்தித்து பாருங்கள் மரங்கள் எவ்வளவு அழகாக இயற்கைக்கு மிகவும் உதவியாக வளர்கின்றன?
சகல உயிரனங்களும் வாழும் இந்த பூமிக்கு அவை ஆற்றும் சேவை அளவில்லாதவை. மரங்களில் கருப்பெற்று உருப்பெற்று இருக்கும் சக்தியானது இந்த உலகுக்கே ஆதாரமாக விளங்குகிறது. அவற்றின் ஆதாரம் இந்த பிரபஞ்சத்தின் தோற்றுவாய்க்கு அருகில் அல்லவா இருக்கின்றது!
இன்னும் சரியாக சொல்வதென்றால், மரங்கள் நமது நண்பர்கள் உறவினர்கள் என்று எண்ணி அவற்றோடு நெருங்கி வாழ்ந்தால் நாம் எமது வாழ்வை மிகவும் நேர்த்தியாக வாழ்வோம். ஏனெனில் மரங்கள் தங்கள் உணர்ச்சிகளை, செய்திகளை சதா வெளியேற்றி கொண்டேதான் இருக்கின்றன.
அப்படி மரங்கள் பொழியும் அறிவு மிகவும் சூட்சுமமாக எம்மை வழிநடத்தும்.
எமது மனம் ஒரு பெரிய சக்திவாய்ந்த கருவி. அதை நாம் சரியான வழியில் உபயோகிக்க இன்னும் போதிய அளவு அறியவில்லை. அறிந்திருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதை விட இன்னும் அற்புதமான உலகாக இருந்திருக்கும். எமது மனத்தின் சக்திகளை நாம் தினசரி வீணடிக்கிறோம்.
எமக்கு தேவையான எமது வாழ்வை எமக்கு உருவாக்கி தருவதற்கு எமது மனம் பெரிதும் தவறி விட்டது என்றுதான் நான் கருதுகிறேன். மனிதர்கள் ஆத்மாவின் தேவை அல்லது ஆத்மாவை உணர்தல் என்றெல்லாம் பெரிதும் அலட்டி கொள்கிறோம். மேலும் கடவுளை அடைதல் அல்லது கடவுளை காணுதல் என்றெல்லாம் மனதை போட்டு பிராண்டி தள்ளுகிறோம்.
நம்பினால் நம்புங்கள், உண்மையில் இவை எல்லாம் ஒரு சிறுபிள்ளை தனமான விளையாட்டுதான். அதுவும் சிலவேளைகளில் நல்ல பொழுது போக்காக அல்லது ஒரு திரபி போல இருக்கும். எனவே அதில் தவறு இல்லை.
ஆனால் நாம் மிகவும் சிரத்தையோடு மேற்கண்ட ஆத்மா, கடவுள் போன்ற சிந்தனை வசப்பட்டால், மரங்களை விட பெரிய குரு கிடையாது. மேற்கண்ட விடயங்களில் மரங்களை விட பெரிய அறிவாளி கிடையாது. மரங்களை விட பெரிய ஞானியும் கிடையாது.
மனித உருவில் உள்ள எவரும் மரங்கள் அளவு கடவுளுக்கு அல்லது பிரபஞ்ச சக்திக்கு அருகாமையில் இல்லை. எனவேதான் மரங்களின் அருகாமை உங்களுக்கு ஞானத்தை தரும். மரங்களின் நிழல் உங்கள் சந்தேகங்களை போக்கும்.
மரங்களின் காற்று உங்கள் வாழ்வில் வசந்தத்தை வீச செய்யும். எல்லா மரங்களும் கற்பகதருக்கள்தான். அதில் சந்தேகம் வேண்டாம். மரங்களோடு கொஞ்சம் பேசிபாருங்கள் உங்களோடு அவை பேசும்.
ஓஷோ அவர்கள் தான் கடமையாற்றிய கல்கத்தா பல்கலை கழகத்தை விட்டே வெளியேறிய அன்று அதன் வாசலில் இருந்த ஒரு மிக பழமையான மரத்தை இறுக கட்டிப்பிடித்தபடி சுமார் பதினைந்து நிமிஷங்கள் அதனோடு மனதில் ஏதோ பேசி விட்டு போய்விட்டார், பல நூற்றாண்டுகள் கண்ட அந்த மரம் அவர் போன நாளில் இருந்து திடீரென்று வாடி கருகி இறந்தே போய்விட்டது. பல தாவரவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தும் அந்த மரத்தை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
தினமும் அந்த மரத்தோடு கொஞ்சம் நேரத்தை கழித்த ஓஷோவின் பிரிவை அந்த ஜீவன் தாங்க முடியாமல் உயிர்விட்டது. மரங்களின் அறிவு மிகவும் அடிப்படையான அளவு மட்டும்தான் உள்ளது. நாமோ அடிப்படியான அறிவை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டோம் அல்லவா?
அடிப்படையான அறிவு என்றால் அது இந்த பிரபஞ்சத்தின் தோற்றுவாயில் இருக்கும் சக்தியாகும். அதுதான் நான் யார்/ எங்கிருந்து வருகிறேன்? எங்கே போகிறேன்? என்பது போன்ற கேள்விகளோடு பின்னி பிணைந்து இருக்கிறது.
இவற்றுக்கு எல்லாம் சமஸ்கிருதத்திலோ அரபியிலோ பாளியிலோ அல்லது லத்தீன் மொழிகளிலோ பதில்களை தேட தொடங்கினால் ஏராளமான வழிப்பறி திருடர்களிடம் மாட்டு படுவீர்கள்.
அப்படித்தானே நீங்கள் தொலைந்து போய்விட்டீர்கள்?
மனிதர்கள் பேசும் எந்த மொழியிலும் உங்களுக்கு பதில் கிடைக்காது. பதில்கள் என்று நீங்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டு இருப்பதெல்லாம் வெறும் பாப்பா கதைகள்தான். நீங்கள் வெறும் பாப்பாவாக இருப்பதிலேயே சுகம் கண்டால் அப்படியே தொடருங்கள் அதுவும் தவறில்லை.
அது உங்களை தாலாட்டும் தூங்கவைக்கும், ஆனால் உண்மையான் செய்தியை சொல்லாது. உண்மையான செய்திகள் பெரிதும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவைதான். மனிதர் பேசும் வார்த்தைகள் எல்லாம் பூரணமான கருவிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்..
மரத்தின் அருகே நாம் இருக்கும் பொழுது மிகவும் அமைதியை அடைவது அன்றாடம் பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான்.
ஆனால் அது ஏன் என்று பெரிதாக யாரும் சிந்திப்பதில்லை. மரத்தின் ஒட்டுமொத்த இருப்பும் அதன் அடிப்படையான சுகமாக இருத்தல் என்பதுலேயே தங்கி உள்ளது.
அந்த சுகமாக இருத்தல்தான் தானே அதுவாக இருத்தல் என்ற I am That உன்னத நிலையாகும். நாம் அதில் இருந்துதான் வந்துள்ளோம் அங்கேதான் போகவும் போகிறோம். உண்மையில் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.
நிச்சயமாக அங்கேயிருந்து வந்தோம் அங்கேயே போகிறோம் எனவே அதை பற்றி அலட்டி கொள்ள தேவை இல்லை.
இல்லை இல்லை அது பற்றி நான் இப்போதே அறிந்தே ஆகவேண்டும் என்றால் மனிதர்களை விட மரங்கள் கொஞ்சம் சரியான வழியை காட்டும். ஏனெனில் ஏற்கனவே அவைதான் அந்த இடத்துக்கு மிகவும் அருகே இருக்கின்றன.
அந்த உண்மைகளை அல்லது அந்த பிரபஞ்ச இரகசியத்தை மனிதர்களின் மட்டுப்படுத்த பட்ட வார்த்தைகளின் மொழிகளில் விளக்கி விட முடியாது. அது உள்ளுணர்வு தொடர்புடைய விடையம். உணரத்தான் முடியும். விளங்கப்படுத்த முடியாது.
இதனால்தான் பல ஞானிகள் மௌனமாகவே இருந்தனர், அதுவும் மரத்தின் நிழலில்தான் பெரும்பாலும் அவர்கள் தியானத்தில் இருந்தனர் அல்லது பொழுது போக்கினர்.