“ஆன்மிக அறிவு ஒரு பிரமிட் மோசடி“ கேள்வி கேள்.. சவால் விடு..
உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆன்மிக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆன்மிக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள்.
இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும். நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.
என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி, கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன். அதில் ஈடுபாடும் கொள்பவன். இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது என்பதை அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு அதீத விருப்பம்.
நான் ஒரு ஆத்மீகவாதியாக காட்டி கொள்ள விரும்பினால் எனக்கு ஆத்மீகம் தவிர இதர விசயங்களில் ஆர்வம் இல்லாத மாதிரி ஒரு வேஷத்தை போட்டு கொள்ள வேண்டும். அதே சமயம் எல்லா அரசியல் வர்த்தக கலை உலக பிரமுகர்களிடம் நல்ல உறவையும் வைத்திருக்க வேண்டும். இப்படியாக எல்லாம் நடப்பதுதான் ஒரு சராரரி ஆத்மீகவாதிக்கு இலக்கணமாகும்.
உலக விசயங்களில் இருந்து ஆத்மீகத்தை கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்திருப்பது சாமியார்களுக்கும், சமயம் சார்ந்த வியாபாரிகளுக்கும் அவசியமான தேவையாகும். உலகின் எந்த விசயங்களிலும் எனக்கு ஈடுபாடு கிடையாது, சதா எனது ஆத்மீக தேடலில் மட்டும்தான் எனக்கு லட்சியம் என்று கூறுபவன் ஒரு முட்டாள் அல்லது ஏமாற்றுக்காரன்.
உண்மையை அறியவேண்டும் என்ற எண்ணம் உள்ள எவருக்கும் தான் காணும் இந்த உலகை பற்றிய எல்லா உண்மைகளையும் அறியவேண்டும் என்றுதான் தோன்றும். பல ஆத்மீகவாதிகள், எனக்கு அந்த உண்மை மட்டும் தெரிந்தால் போதும் இதைபற்றி எல்லாம் எனக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு பூனை வேஷம் போடுகிறார்கள்.
இந்த பூனை ஆத்மீகவாதிகள் உண்மையில் ஒரு வகை மனித குல விரோதிகள்தான். ஆனால் என்ன இவர்கள் பலரும் கால காலாமாக சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டனர். எல்லா சமயங்களும் சேர்ந்து தத்துவார்த்த ரீதியில் ஒரு கூட்டு கொள்ளையை நடத்தி விட்டன.
உண்ணும் உணவை விட, சுவாசிக்கும் காற்றைவிட, பார்க்கும் ஒளியை விட, கேட்கும் சத்தத்தை விட, பேசும் மொழியை விட, நேசிக்கும் மனதை விட மற்றும் வேறு எல்லாவற்றையும் விட ஆத்மீக உண்மைகள் உயர்ந்தவை. ஆத்மீகம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது.
ஆகவே ஆத்மீகத்தை நோக்கி செல்பவர் இதர விசயங்களை தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இதர விசயங்கள் எல்லாம் அற்பமானவை. இதுதான் மிகபெரும் மோசடி தத்துவம். ஏறக்குறைய முழு மனித குலத்தையும் இந்த தத்துவதத்தை நம்பும்படி செய்துவிட்டார்கள்.
நான் கண்ட மனித வாழ்வில் இந்த மனித வாழ்வை விட அதி உத்தமமான தெய்வீகம் வேறொன்றும் கிடையாது. ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் என்று கூறிகொள்ளும் எவரையும்விட எனது தேடல் ஒன்றும் குறைந்தது அல்ல. அதே சமயம் ஒரு சாதாரண நாய்க்குட்டி பூனைக்குட்டி அல்லது ஒரு மரம் செடி கொடிகளை விட எனது ஆத்மீகம் ஒன்றும் பிரமாதம் என்று நான் கூறமாட்டேன்.
இந்த ஆத்மீகம் உயர்ந்தது எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற கோட்பாடு இந்தியாவை பொறுத்தவரை பார்பனீயத்தின் ஜாதி கட்டுமானத்தின் உட்கார்ந்து கொண்டுள்ளது.உயரத்தே உட்கார்ந்து கொண்டு மனிதர்களை மேய்ப்பதுதான் இதன் அடிப்பை நோக்கமாகும். இதன் காரணமாகத் தான் மனிதர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெரிதும் இழந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆத்மீகத்தை பற்றி அதற்கு உரியவர்கள் மட்டும்தான் பேசவேண்டும். அரசியலை பற்றி அதற்கு உரியவர்கள் மட்டும்தான் பேசவேண்டும். விஞ்ஞானத்தை பற்றி அதற்கு உரியவர்கள் மட்டும்தான் பேசவேண்டும். கலை கலாச்சாரம் பற்றி எல்லாம் அதற்கு உரியவர்கள் மட்டும்தான் பேசவேண்டும். இன்னும் என்னனவோ வரைவிலக்கணங்கள் சமுகத்தால் வரையப்பட்டு உள்ளது.
இந்த வரைவிலக்கணங்கள் யாருக்கு உதவி செய்யும்? சமுகத்தை கட்டி மேய்த்து அதன் மீது சவாரி செய்யும் சுயநலமிகளுக்கு இது பெரிய உதவியை செய்யும். மிக சரியாக சொல்லப்போனால், கேள்வி கேட்பவர்களின் தொகையை குறைப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபாயம் தான் இது.
எதையும் அலசி ஆராய்ந்து கேள்விகள் கேட்க வேண்டும். மனிதர்களின் இன்றைய நிலை திருப்திகரமாக இருக்கிறாதா? மனிதர்கள் பொதுவில் மகிழ்வாக உள்ளார்களா? நாம் வாழும் இந்த உலகம் சரியான பாதையில் செல்கிறதா? இந்த உலகில் உள்ள சகல உயிரினங்களும் மகிழ்வாக வாழ்கின்றனவா? பல உயிரினங்கள் அழிந்து இல்லாமலே போய்விட்டதாக கூறப்படுகிறதே? உலகின் இயற்கை வளங்கள் பலவும் நிரந்தரமாகவே அழிவை நோக்கி போகிறதா? உலகம் பல அழிவு யுத்தங்களை நோக்கி செல்கிறதா? இந்த உலகின் மகிழ்ச்சிக்கு ஏதாவது ஆத்மீக தத்துவங்கள் காரணமாக இருக்கிறதா? உண்மையில் ஆத்மீகம் அல்லது சமயம் சார்ந்த தத்துவங்கள்தான் இன்றுவரை பெரும் பெரும் யுத்தங்களுக்கும் மனிதகுலத்தின் அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது.
எவற்றை எல்லாம் உயர்ந்த தத்துவங்கள் புனிதமானவை என்று கூறுகிறார்களோ அவை எல்லாம் சுத்த மோசடி வார்த்தைகளாகும். வேதங்கள் சாஸ்திரங்கள் போன்றவற்றை எல்லாம் பற்றி கண்டபடி கேள்வி கேட்க கூடாது.
அப்படியே அவற்றை போற்றி கும்பிட வேண்டும் அல்லது யாராவது ஒரு பார்பனரிடம் கேட்டு அறிந்து அதன்படி போற்றி ஒழுக வேண்டும் என்பது போன்ற வாசங்களை கூறுபவர்கள் பரிதாபத்துக்கு உரிய மனிதர்களாகும்.
ஆத்மீக அறிவு என்ற உடனேயே அவை எல்லாம் வேதங்களில் இருப்பவைதான் என்று கூறும் எனது பார்பன நண்பர்களுக்கு எவ்வளவோ நயமாக கூறினாலும் அவர்களுக்கு புரிவதே இல்லை.
அவ்வளவு தூரம் பார்பன சேற்றில் அவர்கள் ஊறிப்போய் உள்ளார்கள். அவர்கள் எப்படியாவது இருந்து விட்டுபோகட்டும் என்று என்னால் விடமுடியாதுள்ளது. மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாமல் செய்வது இந்த அறிவியல் பிரிவினைவாதம் தான்.
இந்த “ஆத்மீக உயர் கட்டுமான பிரமிட் அறிவு” என்பது ஆம்வே பிரமிட் மோசடியை விட மிகவும் கீழ்த்தரமான ஒரு நிலையை முழு மனித குலத்திற்கும் உண்டாக்குகிறது.