இரண்டு கொள்ளைக்காரிகள் 4 - ஆதனூர் சோழன்

உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள்

 ஆனியின் கணவன் ஜேம்ஸ் கொல்லப்பட்டான். இது பஹாமஸ் கவர்னரான வுட்ஸ் ரோஜர்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. கடல் கொள்ளையர்களை ஒழித்துக் கட்ட உறுதியாக இருந்த அவனுக்கு, ஜேம்ஸ் மரணம் பீதியை ஏற்படுத்தியது.

அவன் தனது நடவடிக்கையை வேகப்படுத்தினான். அவர்களை வேட்டையாட திறமைவாய்ந்த தனியார் நிறுவனங்களை ஏற்பாடு செய்தான். அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகைகளில் கடல் கொள்ளையர்களை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளம்பரம் செய்தான். குறிப்பாக, ஆனி மற்றும் மேரி குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தான். 

1720 ஆம் ஆண்டு ஏராளமான பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியது. அவர்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு மன்னிப்பும் வெகுமதியும் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். இந்த விளம்பரங்களைத் தொடர்ந்து இரண்டு கொள்ளைக் காரிகளையும் பற்றி பரபரப்பான செய்திகள் வெளியாகின.

ஆனால், யாரும் அவர்களை காட்டிக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ஆனி மற்றும் மேரி அவர்களுடைய தலைவன் ராக்ஹாம் ஆகியோர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து சர்வ தேச சட்டங்களுக்கு விரோதிகளாக மாறினார்கள்.

இது ஒருபக்கம் போய்க்கொண் டிருந்தது. ஆனால், ஆனியும் மேரியும் பஹாமஸ் துறைமுகத்திற்கு அருகே கடற் கரையில் நிறுத்தப்பட்டிருந்த 7 மீன் பிடி படகுகளை 1720 செப்டம்பர் 3 ஆம் தேதி கொள்ளையடித்தனர். படகுகளையும் கைப்பற்றினர். ரத்தக்களறியாக நடந்த இந்த சண்டை யில், அந்த மீனவர்களின் பொருள்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.

அடுத்த மாதமே அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி ஹிஸ்பானியோலா தீவு நோக்கி சென்றார்கள். அந்த தீவின் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இரண்டு வர்த்தக கப்பல்களை குறிவைத்தார்கள். வணிகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்தனர்.

அடுத்தடுத்த வெற்றியால் ராக் உற்சாக மடைந்தான். கொள்ளையை இரட்டிப்பாக்க உத்தர விட்டான். அவனுடைய உத்தரவு ஆனியையும் மேரியையும் அச்சப்படுத்தின. ஓய்வில்லாத சண்டை எதிர்பாராத தோல்வியை கொடுக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

“அவசரப்படாதீர்கள் ராக்” என்று அவர்கள் எச்சரித்தார்கள். ஆனால் ராக் கேட்கவில்லை. 

ராக் மீது ஆனியும் மேரியும் ஒருவருக்கொருவர் பைத்தியமாக இருந்தார்கள். எனவே, தங்களை வருத்திக்கொண்டு சண்டைக்கு தயாராக இருந்தார்கள்.

அதேமாதம் 19 ஆம் தேதி ஜமைக்கா அருகே பிரிட்டனின் வணிகக்கப்பல் ஒன்றை தாக்கினர். தாமஸ் ஸ்பென்லோ என்பவர் தலைமையில் அந்தக் கப்பல் வந்தது. அவர் எதிர்ப்பு காட்டாமல், தனது உயிரை காப்பாற்ற, ராக்கிடம் பேரம் பேசினார். தனது ஆட்களின் மரணத்தை தடுக்க முயற்சி செய்யவில்லை. 

கொள்ளையடித்த பின்னர், ஸ்பென்லோவையும், அவருடைய ஆட்கள் சிலரையும் சிறிய படகில் தப்பிச் செல்ல அனுமதித்தனர். ஆனால், திடீரென மனம் மாறி அவர்களை பிணைக்கைதிகளாக மாற்றி தங்களுடன் வைத்துக் கொண்டனர். 

இந்தக் காலகட்டத்தில் கடல்பயணம் செய்ய விரும்புகிறவர்கள் ஆனி மற்றும் மேரி கூட்டத்திற்கு பயந்தனர். சில மாதங்களிலேயே அவர்கள் கடல் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதேசமயம் இவர்களைப் பற்றிய தகவல் ஜமைக்கா கவர்னரான சர் நிக்கோலஸ் லாவ்ஸுக்கு கிடைத்தது. அவர், கடல் கொள்ளையர்களை ஒழித்துக்கட்ட சபதம் ஏற்றிருந்தார். அவர்கள் மீது கடுமையான வெறுப்புடன் இருந்தார்.

அவர், தனியார் நிறுவனம் ஒன்றை உருவாக்கி, கடல் கொள்ளையர்களை போல இயங்க அனுமதி அளித்திருந்தார். ஜொனாதன் பார்னெட் என்ற கேப்டன் மூலம் ஆனி மற்றும் மேரி கூட்டத்தை அவர் விரைவிலேயே நெருங்கினார்.

நிஜத்தில் பார்னெட் ஜமைக்காவின் கடற்படை வீரர். ஆனால், கடல்கொள்ளையராக வேடமிட்டு வேட்டையைத் தொடங்கியிருந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார். கடல் கொள்ளையரின் நடவடிக்கைகளையும், அவர்களுடைய மறைவிடங்களையுடம் அறிந்திருந்தார்.

கடல் கொள்ளையருடன் தொடர்புடைய யாரும் பார்னெட்டிடம் தப்பவில்லை. ஜமைக்கா கவர்னராக இருந்த ஹாமில்டனை பதவி நீக்கம் செய்யுமளவுக்கு அவர் ஆதாரங்களை கொடுத்திருந்தார்.

இவ்வளவு திறமை வாய்ந்த பார்னெட், ரிவென்ச் கப்பலையும் கண்டுபிடித்தார். ஜமைக்காவில் உள்ள நெக்ரில் விரிகுடா கடற்கரையில் கேப்டன் ராக் பதுங்கியிருப்பதாக அறிந்தார்.

தனக்கு துணையாக கேப்டன் போனிவியால் தலைமையிலான ஆயுதமேந்திய கப்பலையும் அழைத்துக்கொண்டு நெக்ரில்ஸ் விரிகுடாவை நெருங்கினார்.

இரவு சூழத்தொடங்கியதும், பார்னெட் தனது கப்பல்களை நெருக்கமாக செல்ல உத்தரவிட்டார். பிரிட்டனின் கொடி பறந்த கப்பலை தொலைவில் இருந்து ஆனி கவனித்துவிட்டாள். 

அவளுடைய கப்பலில் சமீபத்திய கொள்ளையில் கிடைத்த மது வகைகளை குடித்துவிட்டு, கொள்ளையர்கள் அனைவரும் மயங்கிக் கிடந்தனர். அவர்கள் யாரும் சண்டையிட தயாராக இல்லை. 

ராக்ஹாமும் குடித்திருந்தார். ஆனால், ஆனியும் மேரியும் குடிக்கவில்லை. அவர்கள் எதிர்த்து சண்டையிட்டு சாகவும் தயாராக இருந்தார்கள். போதையில் இருந்த கொள்ளையர்கள் சரணடைய தயாராக இருந்தார்கள்.

ஆனி, மேரியுடன் இணைந்து சண்டையிட ராக்ஹாம் ரெடியானார். ஆனால், சண்டையே தொடங்கவில்லை, அதற்குள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். 

கைது செய்யப்பட்ட  அவர்கள் ஸ்பானிய நகரத்தில் உள்ள கடல் கொள்ளையருக்கான சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கேப்டன் பார்னெட், அவர்களை உள்ளூர் ராணுவ அதிகாரியான மேஜர் ரிச்சர்ட் ஜேம்ஸின் பொறுப்பிற்கு மாற்றினார்.

Previous Post Next Post

نموذج الاتصال