கற்பனையை விரித்த கலையரங்கம்!
அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும்.
தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும்.
மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு உடைப்பார்கள். சுள்ளிகள் தனியாகவும், உடைத்த விறகு தனியாகவும் அடுக்கி வைத்திருப்போம்.
சுள்ளிகளையும், உடைத்த விறகுகளையும் வெயிலில் காயவைத்து அடுக்க வேண்டும். தினமும் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடன், நானும் அக்காவும் காய்ந்த விறகுகளை அள்ளி கொட்டைகைக்குள் அடுக்குவோம். பெரும்பாலும் சினிமாவுக்கு கிளம்பிருவோம். பக்கத்தில் யாராச்சும் துணைக்கு வருவாங்க. விறகு அள்ளிப் போட்டதுக்கு அம்மா ஆளுக்கு 35 காசு கொடுக்கும்.
25 காசு தரை டிக்கெட்தான் பெரும்பாலும். 15 காசுக்கு பட்டாணி, வேர்க்கடலை வாங்கினா சினிமா முடியிற வரைக்கும் போதும்.
அஜந்தா தியேட்டர்னு பேரு. நிஜமாகவே தியேட்டர் அமைப்பு நல்லா இருக்கும். ரொம்ப அழகா இருக்கும். அஜந்தா என்ற எழுத்து கலர்ஃபுல்லா லைட் எரியும். முன்புறம் கலைவாணி சிலையில் நீரூற்று பீய்ச்சி அடிக்கும். பஸ்ஸ்டாண்ட் அருகே இருக்கும். நான் பெரும்பாலும் அக்கா, அம்மாவுடன் பெண்கள் பக்கம்தான் டிக்கெட் எடுத்து போவேன்.
படம் தொடங்கப் போவதற்கு முன் குங்குமம் மங்கள மங்கள மங்கையர் குங்குமம் என்ற பாடல் ஒலிக்கும். இந்தப் பாடல் ஒலித்தால் நடை வேகமாகும்.
தியேட்டர் சிமெண்ட் தரைதான். பாதி தரைடிக்கெட்டுக்கும், பாதி பெஞ்ச்சுக்கும் ஒதுக்கியிருப்பாங்க. பெஞ்சுக்கும் தரைக்கும் 10 பைசாதான் வித்தியாசம்.
எம்ஜியார், சிவாஜி படம்னா முதல் நாள் அனுப்ப மாட்டாங்க. ரெண்டு மூனு நாள் ஓடிய பிறகுதான் அனுப்புவாங்க. எங்கே பார்த்தாலும் “எச்சில் தொட்டியில் துப்பவும் என்று எழுதப்பட்ட வாளி தொங்கும். வெற்றிலை புகையிலை போடும் பெருசுகள் நிறைய வந்திருக்கும். பீடி குடிப்பவர்களும் இருப்பார்கள்.
சுகாதாரமே இல்லாமல் இருக்கும். புகை மண்டலத்துடன் புகையிலை காரமும் சேர்ந்து தியேட்டருக்குள் மூச்சை அடைக்கும். திரையை ஒட்டி, வரிசையாக தீ என்று எழுதப்பட்ட மணல் வாளிகள் தொங்கும். தீயணைப்பு கருவிகள் சிலது சுவரில் மாட்டியிருப்பார்கள்.
திரைக்கு முன் ஒரு மேடை இருக்கும். அதில் மணல் கொட்டி வைத்திருப்பார்கள். எனக்கு விவரம் தெரிந்து, அக்காவுடன் போனாலும், அம்மாவுடன் போனாலும் அந்த மேடையில் சாய்ந்து படுத்தபடிதான் படம் பார்த்திருக்கிறேன்.
பெரும்பாலும் படம் முடிவதற்குள் தூங்கியிருப்பேன். ஆனால், ஒரு படத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்றுமுறை பார்த்திருப்பேன். அதனால் ஏதோ ஒருவகையில் படத்தை முழுமையாக பார்த்திருப்பேன்.
ஒரு படத்தை 4 பாகமாக ஓட்டுவார்கள். ஒரு பாகம் முடிந்தவுடன் மிட்டாய், முறுக்கு, பொறிகடலை, பட்டாணி என்ற சத்தம் கேட்கும். ஆனால், பெரிய அளவில் வியாபாரம் நடக்காது. இடைவேளையில்தான் வியாபாரம் நடக்கும். என் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்கும் பையன்கள்கூட வியாபாரம் செய்வார்கள்.
படம் முடிந்து வெளியே வந்தால், “இன்று போய் நாளை வாராய்Ó என்ற பாடல் ஒலிக்கும்.
இந்த தியேட்டரில் மூன்று பேருக்கு பங்கு இருந்தது. எனது தாத்தாவை ஒரு பங்குதாரராக சேரும்படி கேட்டார்களாம். அதற்கு அவர் மறுத்துவிட்டாராம்...
“எனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இப்பவே நீங்க மூனுபேர். இருக்கீங்க. இதுல நானும் சேர்ந்தா நாலு பங்குதாரர்கள் ஆகிரும். அப்புறம் உங்கள் பிள்ளைகள், என் பிள்ளைகள், என்று பெரிசாகும்போது சிக்கலாகிரும் என்று காரணம் சொன்னாராம்.
அதன்பிறகு, தாத்தாவிடம் பணம் பெறுவதும், படம் ஓடி லாபம் வந்ததும் திருப்பிக் கொடுப்பதுமாக இருந்தார்கள்.
கொஞ்ச காலத்திலேயே எனது தாத்தா சொன்னமாதிரியே ஆச்சு என்பதை நான் பார்த்தேன். சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. ஆளுக்கு ஆறுமாதம் பொறுப்பு என்று பிரித்தார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், எந்த படத்தை திரையிடுவது என்பதில் ஏற்பட்ட முரண்பாடு.
இது என்ன ஆச்சுனா, ஒரு பங்குதாரர் பொறுப்பில் நல்ல நல்ல படங்களாக வரும். சில சமயம் மதுரையில் ஓடி முடிச்சதுமே படங்களை வாங்கி திரையிட்டார்கள். இன்னொரு பங்குதாரர் பொறுப்பில் விலை குறைந்த படங்களையே எடுத்து வந்து திரையிட்டார்கள்.
இன்னொரு பிரச்சனை என்னவென்றால், ஒருத்தர் பொறுப்பில் தியேட்டர் சுத்தமாக இருந்தது. இன்னொருத்தர் பொறுப்பில் குப்பையாகியது.
மூவருக்கும் பிள்ளைகள் அதிகமாகினர். பிள்ளைகளுக்குள் பங்கு பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிலர் தங்களுக்கு தியேட்டரை நடத்த விருப்பமில்லை என்று சொன்னார்கள். அவர்கள் பங்கை விற்க விரும்பினார்கள். ஆனால், வெளி ஆளுக்கு விற்கக்கூடாது என்று மற்றவர்கள் முட்டுக்கட்டை போட்டார்கள்.
சரி நீங்களே எடுத்துக்குங்க என்று சொன்னால், அடிமாட்டு ரேட்டுக்கு கேட்டார்கள். தியேட்டரை புதுப்பிக்கவும் உடன்படவில்லை. வேறு வழியே இல்லாமல் தியேட்டரை இழுத்து மூட முடிவு செய்தார்கள்.
நல்ல நிலையில் தியேட்டரை விற்றிருந்தால் எல்லோருக்கும் லாபமாக இருந்திருக்கும். கடைசியில், மதுரையைச் சேர்ந்த ஒருத்தர் வந்து தியேட்டரை விலைக்கு வாங்கி புதுப்பித்தார்.
தொலைக்காட்சி, வீடியோ கேஸட், சி.டி. என்று தொழில்நுட்பம் பாடாய் படுத்தியது. அவரும் லாபகரமாக நடத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் இழுத்து மூடிவிட்டார்.
நவீனப்படுத்த ஆட்கள் வந்தார்கள். ஆனால், அதுபாட்டுக்கு கிடக்கட்டும் என்று சொல்லிவிட்டார். இப்போ வெறிச்சோனு கிடக்கு. ஆனால், இந்த தியேட்டர் தொடர்பான எனது நினைவுகள் மட்டும் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.