ஆண் வேடத்தில் 5 ஆண்டுகள் கடற்படை மாலுமியாக வாழ்ந்தவள் - ஆதனூர் சோழன்

ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள்.

அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது.

ஹன்னா ஸ்னெல்லின் தந்தை சாயம் தோய்க்கும் தொழில் செய்துவந்தார். அவருடைய ஒன்பது குழந்தைகளில் ஒருத்திதான் ஹன்னா. ஹன்னாவுக்கு 17 வயதானபோது பெற்றோர் இருவரும் இறந்து விட்டார்கள். அதைத்தொடர்ந்து லண்டனில் வசித்த அவளுடைய மூத்த சகோதரியின் வீட்டுக்கு போனாள். அந்த நகரத்தில்தான் டச்சு மாலுமியான ஜேம்ஸ் சம்ஸ் என்பவரை சந்தித்து அவரை மணந்துகொண்டாள்.

திருமணத்துக்கு பிறகுதான் சம்ஸின் புத்தி கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. அவனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுக்காக ஹன்னாவின் பொருட்களை விற்று செலவழித்தான். ஹன்னா ஏழுமாத கர்ப்பினியாக இருந்தபோது, ஒருநாள் திடீரென சம்ஸ் காணாமல் போனான். அவன் தன்னை மோசம் செய்துவிட்டதாக ஹன்னா புரிந்துகொண்டாள். குழந்தையும் இறந்துவிட்டதால், அவள் லண்டனை விட்டு வெளியேறினாள்.

1747ஆம் ஆண்டு ஹன்னாவுக்கு 22 வயது ஆகியது. அந்தச் சமயத்தில் அவள் காணாமல் போன தனது கணவரை தேடி புறப்பட்டாள். தனது கணவன் சம்ஸ் ஒரு மாலுமி என்பதால் அவனை உலகம் முழுவதும் கப்பலில் தேட அவள் முடிவு செய்தாள். ஏதேனும் ஒரு கப்பலில் அவனை கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தாள். 


அதற்காக அவள் ஆணைப் போல வேடமிட்டுக் கொண்டாள். தனது மைத்துனரான ஜேம்ஸ் கிரேவ் என்பவரின் பெயரை தனக்கு வைத்துக் கொண்டாள். பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டாள். அவள் பணத்திற்காகவும் சாகசத்திற்காகவும் இந்தத் திட்டத்தை வகுத்தாள். இடையில் அவளுக்கு துரோகம் செய்து ஓடிய கணவனையும் தேடத் திட்டமிட்டாள். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆணாக மாறுவேடமிட்டு, தன் மைத்துனரின் பெயரை பயன்படுத்தத் தொடங்கினாள். ஜேம்ஸாகவே, அவள் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள போர்ட்ஸ்மவுத்திற்குச் சென்றாள். இராணுவத்தில் சேர்ந்தாள். விரைவில் அவள் தெற்கு நோக்கி பயணித்தாள்.

18ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் இராணுவம் வேலை செய்வதற்கு மிகவும் கடினமான இடமாக இருந்தது. பத்திரிகைகளைச் சேர்ந்து கும்பல்கள் வலுக்கட்டாயமாக ஆள் எடுப்பார்கள். கடற்படையும் மிகக் கடினமானதுதான். குறிப்பாக, கடல்நோய், உணவுப் பற்றாக்குறையால் கப்பல்படை கப்பலில் பயணிப்போர் சிரமத்துக்கு ஆளானார்கள். 

ஆனாலும், ராணுவத்தில் வேலை என்பது பல சமயங்களில் பொருளாதார மேம்பாடுக்கு உதவியாக இருந்தது. அதாவது, பணம் ஈட்டவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும் அது வாய்ப்பளித்தது.

ஹன்னா கடல்பயணத்தின் அனைத்து கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் அனுபவித்தாள். புயலடித்தது. உணவு அளவு குறைவாக இருந்தது.  ஆனால் அவள் அதை இங்கிலாந்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது.

 ஆப்பிரிக்காவின் முனையைச் சுற்றி அவள் பயணம் செய்தாள், மொரீஷியஸுக்கு எதிரான ஒரு குறுகிய தாக்கு தலில் பங்கேற்றாள். இந்தியாவிற்கும் வந்தாள்.  அங்கு அவளது படைப்பிரிவு தென்னிந்தியாவில் உள்ள பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து உரிமை கோரி போரிட்டது. அந்தச் சண்டையில் அவள் இடுப்பில் காயம்பட்டாள், அதைத்தொடர்ந்து கூட அவள் பெண் என்பது அறியப்படாமல் காப்பாற்றிக் கொண்டாள்.

அவள் ராணுவத்திலிருந்து திரும்பிய பின்னர்தான் அவளுடைய வாழ்க்கை கதையை ராபர்ட் வாக்கர் என்பவர் எழுதினார். ஹன்னா மட்டுமே ராணுவத்தில் ஊடுருவிய பெண் என்று இல்லை. மேலும் பலர் இருந்தார்கள். அவர்கள் பொதுவாக ஆண்களுடன் குளிப்பதை தவிர்ப்பார்கள். ஆண்களை தழுவுவதை விரும்புவதில்லை. ஹன்னாவின் கடற்படை நண்பர்கள், அவள் ஒருபோதும் ஷேவ் செய்ததில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து அவளை கிண்டல் செய்திருக்கிறார்கள். தனக்கு தாடிவளரும் வயது இன்னும் வரவில்லை என்று அவள் சமாளித்திருக்கிறாள். 

தாய்நாட்டுக்கு திரும்பிய பின், அவள் தன்னை ஒரு பெண்ணாக அடையாளம் காட்டினாள். அவளுடைய குழுவினரே ஆச்சரியப்பட்டனர். ஆனால், ஒதுக்கி வைக்கப்படுவதற்கு பதிலாக அவள் ஒரு அதிசயமாக மாறினாள். 

இந்தியாவில் அவள் அடைந்த காயங்களின் அடிப்படையில், அவள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவளது கப்பல் தோழர்கள் ஊக்குவித்தார்கள். அவளுடைய ரகசியம் வெளியே வந்தவுடன், பெண் சிப்பாயின் கதை லண்டன் மட்டுமில்லாமல் இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவியது. 

அவள் விரைவிலேயே தனது சாகசம் குறித்து சொந்த மேடையில் விளக்கம் அளிக்கத் தொடங்கினாள். மேடையில் சீருடை அணிந்து, தனது சாகசங்களை விவரித்தாள். இராணுவ பயிற்சிகள் மற்றும் பாடல்களை பாடினாள். தனது கதையின் உரிமையை ராபர்ட் வாக்கருக்கு விற்றாள். வாக்கர் எழுதிய அவளுடைய வரலாற்று நூல் அதிக விற்பனையான புத்தகமாக மாறியது.

 தி ஃபிமேல் சோல்ஜர் என்ற அந்த புத்தகம் பொய் கலப்பில்லாத உண்மையான வாழ்க்கைக் கதையா என்று தெரியவில்லை. குறிப்பாக பாண்டிச்சேரி யுத்தத்தில் அவள் காயமடைந்தும் பெண் என்பது வெளிப்படவில்லை என்றால் நம்பும்படி இல்லை என்று அந்தச் சமயத்திலேயே விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகள், அவள் ஒரு மாலுமியாகவும், போர் வீரராகவும் ஆகியிருக்கிறாள். ஒரு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திருக்கிறாள். அவள் தனது உண்மையான பாலினத்தை வெளிப்படுத்தியும், மோசடி புகார்கள் எதிலும் சிக்காமல்,  பிரிட்டன் முழுவதும் உடனடியாக பாப்புலர் ஆகியிருக்கிறாள்.

Previous Post Next Post

نموذج الاتصال