பழைய நினைப்புடா பேரான்டி 6 - ஆதனூர் சோழன்


கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா!

சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. 

மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. 

அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான் வழி. 

அத்தை வீட்டுக்கு போகனும்னா கோரிப் பாளையம் மேம்பாலம் ஏறி, தெற்குவெளி வீதி வழியா மதுரை பழைய பஸ்ஸ்டாண்ட் வரணும். அங்கேயிருந்து, மதுரை ரயில்வே காலனிக்குள் நுழைந்து கரிமேடு வரணும்.

பாரதா டிரான்ஸ்போர்ட்டில் வந்தாலும், கட்டை வண்டி, கூட்டு வண்டி வழியா வந்தாலும் இதுதான் ரூட்.  நாங்க கூட்டு வண்டியில் போயிருந்தோம். அத்தை வீடு வாடகை வீடுதான். நான்கு போர்ஷன்கள் இருக்கும். அங்கு தான் முதன்முதலில் மாடி ஏறினேன். மொட்டை மாடிதான்.

அத்தைவீட்டு வரி¬சைக்கு பக்கத்தில் நெசவுத் தொழிலும் நடக்கும். அது ஒரு விதமான ஓசை எழுப்பியபடி இருக்கும். அத்தை வீட்டு முன் சிமெண்ட் கரையுள்ள சாக்கடை வாய்க்கால் இருக் கும். தண்ணீர் சுத்தமாக ஓடும். ஆனால், அந்த வாய்க்கால் கரையில் சிறுவர் சிறுமிகள் ஆய் போவார்கள். அது அந்த வாய்க்கால் தண்ணீரில் மிதந்து பயணிக்கும்.

அப்படி ஒரு பயணத்தில்தான் மாமா எங்களை சினிமாவுக்கு அழைத்துப் போனார். அத்தை வீட்டுக்கு கூட்டு வண்டியில் போவதென்றால் பெரும் பாலும் காமாயி அப்பத்தா, கருப்பாயி அத்தையுடன் நானும் அக்காவும்  போவோம்.

அத்தை வீட்டுக்கு தேவையான பயறு, அரிசி, காய்கறி, விறகு உட்பட அப்பத்தா தயார் செய்து கொண்டு போகும். அப்படி போகும்போதுதான் ஒருமுறை மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் சினிமாவுக்கு மாமா கூட்டிப் போனார்.

அந்தப் படத்தை இதுவரை எத்தனையோ  முறை பார்த்திருக்கிறேன். ஆனால், எனது நினைவில் ஆழமாக தங்கியிருப்பது, ஒரு சிறு குழந்தையை பெட்டியில் வைத்து தண்ணீரில் விடும் காட்சியும், குதிரை குளிப்பாட்டும் குதிரை யோட்டியும், ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி பாடல் வரிகளும், கர்ணன் மடியில் குருநாதர் படுத்திருக்க அவனுடைய தொடையை வண்டு துளைக்கும் காட்சியும், கர்ணன் கவச குண்டலத்தை பிய்த்து கொடுக்கும் காட்சியும், தேர்ச் சக்கரத்தில் கர்ணன் சாய்ந்து உயிருக்கு போராடும் காட்சியும் மட்டும்தான்.

அப்போவெல்லாம் ஒரு சினிமா மதுரையில் ஓடிக் களைத்து அலங்காநல்லூர் வர மாதங்கள் ஆகிவிடும். அந்த வகையில் நான் கொடுத்த வைத்தவன்தானே. 

1964ல் கர்ணன் படம் வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு சிறு குழந்தையாய் அம்மாவுடன் அஜந்தா தியேட்டரில் பார்த்த படங்களில், பாசமலர், அய்யப்பன், நல்லதங்காள், அவ்வையார், ஹரிச்சந்திரா போன்ற படங்களில் சில காட்சிகள் ஆழ்மனதில் பதிவாகி இருக்கின்றன.

பாசமலர் படத்தில் கைவீசம்மா கைவீசு என்று சிவாஜி பேசும் வசனம். அதைக் கேட்டு அம்மா அழுதது. அய்யப்பன் படத்தில் புலிப்பால் வேண்டும் என்று அய்யப்பனை காட்டுக்கு அனுப்புவார்கள். அவரோ புலிமேல் ஏறி வீட்டுக்கு வருவார். நல்லதங்காள் படத்தில் மதினியின் கொடுமைக்கு ஆளாகும் நல்லதங்களா, கடைசியில் குழந்தைகளை கிணற்றில் வீசும் காட்சி, அவ்வையார் படத்தில் பாழடைந்த ஒரு கட்டிடத்தில் அவ்வையார் தங்கும் காட்சி. நிலநடுக்கம் ஏற்படும் காட்சி. ஹரிச்சந்திரா படத்தில் லோகிதாஸை பாம்பு கடிக்கும் காட்சி, ஹரிச்சந்திரன் சந்திரமதி கழுத்தில் தொங்கும் தாலியை கேட்கும் காட்சி இப்படியாக நீளும்.

இந்தமாதிரி பல படங்கள் துணுக்குத் துணுக்காய் மட்டுமே நினைவில் நிழலாடுகின்றன. அதேசமயம், எனது வகுப்பு நண்பர்களுடன் அலங்காநல்லூர் சந்தை மேட்டில் உள்ள மேடையில் நடந்த பொதுக்கூட்டங்கள், அந்த மேடையில் ஒளி பரப்பப்பட்ட செய்திப் படங்கள் எல்லாம் மங்கலான காட்சிகளாக ஓடுகின்றன. 

இந்திய சீன யுத்தக் காட்சிகளை பார்த்திருக்கிறேன். அலங்காநல்லூரில் இன்றைக்கு  விஏஓ ஆபீஸ், சமுதாயக்கூடம் ஆகியவை இருக்கிற இடத்தில் ரேடியோ ஒலிபரப்பு இருக்கும். அது சிறுவர்கள் விளையாடும் இடமாக இருக்கும். நேரு மரணத்தின் போது ரேடியோவில் சோக இசை ஒலிபரப்பானது நினைவில் இருக்கிறது. 

இந்தியா பாகிஸ்தான் யுத்தக் காட்சிகள் ஒளிபரப்பானது. லால்பகதூர் சாஸ்திரி மரணச் செய்தி, அதே சோக இசையை கேட்டிருக்கிறேன். இதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் கிராமப்புற சிறுவர்களுக்கு கிடைக்காத அனுபவங்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக லீவ் விட்டால் மதுரைக்கு போகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. பாரதா பஸ்சில் மதுரை போனால் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பக்கவாட்டில் வெளியேறி, குதிரை வண்டி பேச வேண்டும். மதுரை ரயில்வே பாலம் சிங்கிள் ரோடாக இருந்தது. அந்த பாலத்தை அகலப்படுத்த முடியாமல் பலகாலம் தள்ளிப்போனது. 

குதிரை வண்டியிலும் ரயில்வே காலனிக் குள் நுழைந்துதான் கரிமேரி வரவேண்டும். இப்போ இருக்கிற மீன் மார்க்கெட் தெருவில் நுழைந்து மோதிலால் தெரு செல்ல வேண்டும். மழைக்காலம் என்றால் இப்படி.

வெயில் காலம் என்றால் மதுரை கொன்ன வாயன் சாலையில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆற்றுக்கு குறுக்கே, ஆரப் பாளையம் தண்ணீர் தொட்டிக்கு நேராக சுடு மணலுக்கு ஊடாக நடக்க வேண்டும். 

பெரும்பாலும் அப்பத்தாவுடனோ, கருப்பாயி அத்தையுடனோ வருவோம். வெள்ளிபோல மின்னும் மணல் இப்போது இல்லை. வைகை ஆற்றை கடப்பது மிகப் பெரிய வேலையாக தெரியும். கிடுகிடுவென நானும் அக்காவும் ஓடுவோம். கையில் ஆளுக்கு ஒரு துண்டு இருக்கும். கால் சுடும்போது அந்த துண்டைப் போட்டு அதன்மேல் நிற்போம். அப்பத்தா சுமையோடு மெதுவாக வந்து சேரும். பிறகு மறுபடியும் ஓடுவோம்.

இப்போ வைகை ஆற்றின் நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. ஆற்றில் மணலை காணவில்லை. புல்வெளி யாக கிடக்கிறது. தண்ணீருக்கு பதிலாக சாக்கடை நீர் ஓடுகிறது. ரொம்ப சீக்கிரத்தில் மதுரையின் கூவமாக மாறினாலும் மாறிவிடும்.

ஆனால், மதுரையை கடக்க இப்போது எத்தனை பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வைகையில் எவ்வளவு பெரியவெள்ளம் வந்தாலும் நகருக்குள் நுழைய முடியாதபடி ஆற்றின் கரைகள் எவ்வளவு உயர்த்தப் பட்டிருக்கின்றன என்று பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆற்றின் இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் எழுப்பி டபுள் ரோடு போட்டு போக்குவரத்து நெருக்கடியை குறைத்திருக்கிறார்கள். அதெல்லாம் சரிதான், ஆற்றின் அகலத் தையும் குறைத்துவிட்டார்களே என்பதுதான் மிகப்பெரிய வருத்தம்.


Previous Post Next Post

نموذج الاتصال