பழைய நினைப்புடா பேரான்டி 7 - ஆதனூர் சோழன்


காலந்தோறும் நடிகர்களும் ரசிகர்களும்!

ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள்.

ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். நான் எந்த ஒரு நடிகருக்கும் வெறித்தனமான அல்லது கிறுக்குத்தனமான ரசிகராக இருந்ததில்லை என்பதில் சற்று கர்வமாகவே இருக்கிறேன்.

சிறுவனாக இருந்த சமயத்திலேயே எம்ஜியார் ரசிகனாக இருந்திருக்கிறேன். சிவாஜியையும் ரசித்திருக்கிறேன்.  ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரையும் ரசித்திருக்கிறேன். எனது நண்பர்களில் யாருக்கெல்லாம் எந்த நடிகரை யாருக்கு பிடிக்குமோ அவர்களைப் பற்றி பேச முடிந்திருக்கிறது.

சிவாஜியை குறை சொன்னால் சிவாஜிக்காக வாதாடவும், எம்ஜியாரைக் குறை சொன்னால் எம்ஜியாருக்காக வாதாடவும் முடிந்திருக்கிறது. ஆக, நான் எப்போதுமே சினிமா ரசிகனாகவே இருந்திருக்கிறேன்.

எம்ஜியார் நடித்த சினிமாக்கள் என்றால் முதல் மூன்று நாட்கள் சினிமாவைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான அன்று, எங்கள் மரக்கடையில் வேலை செய்த மலையாளி ஆசாரிகள் என்னையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

அன்றைக்கு டிக்கெட் கவுண்ட்டருக்குள் மூச்சுத் திணறி கதறியது இப்போதும் நினைவில் இருக்கிறது. நான் கதறுவதைக்கூட கண்டுகொள்ளாமல் முண்டியடிப்பதிலேயே ரசிகர்கள் குறியாக இருந்தார்கள். அந்த மலையாளி ஆசாரி என்னை தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டு கெஞ்சியதை நினைத்தால் இப்போதும் கடுப்பாக இருக்கும். அன்று நான் உயிர்பிழைத்ததே பெரியபாடு.

அந்த படம் வந்த புதிதில் கத்திச் சண்டை பாப்புலர். தகரத்தில் கத்தி செய்யச் சொல்லி விளையாடுவோம். முதுகில் துணியைக் கட்டிக்கொண்டு மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கிச் சண்டை போடுவோம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களை பார்த்துவிட்டு கராத்தே சண்டை போடுவோம்.

எல்லோரிடமும் பிடித்த அம்சம் இருக்கும். ஆனால், ஒரு நடிகரிடமோ, அல்லது ஒரு தலைவரிடமோ தனக்கு பிடித்த ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது எனக்குப் பிடிப்பதில்லை.

எனக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகரின் நடிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது. அதற்காக முன்பு நான் ரசித்த நடிகரை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனக்குப் பிடித்த நடிகருக்காக இன்னொரு நடிகரின் ரசிகரை கேவலப்படுத்தவும் மாட்டேன்.

ஆனால், எம்ஜியாரை மட்டும் எனக்கு பிடிக்காமலே போய்விட்டது. நடிகராக பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் பெண்களை அவர் சினிமாவில் பயன்படுத்திய விதம் குறித்து எனக்கு விமர்சனம் உருவானது. அவரைப் பற்றி பலரும் எழுதிய விஷயம்தான். ஆனால், எனது நண்பர்களே, எம்ஜியார் படத்தில் எந்தெந்த காட்சிகளை எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்த்திருப்பதால் அவரை பிடிக்காமல் போயிற்று.

அப்புறம் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலுக்கு வந்தார். அப்போது நான் 9 ஆம் வகுப்பு மாணவனாக இருந்தாலும், அவரைப்பற்றிய செய்திகளை வாசிக்கும்போதே, அவருடைய அரசியல் அறிவு கேலிக்குரியதாக இருந்தது.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடிக்காமலே போயிற்று. சிவாஜி குறித்த எனது பார்வையும் இதுதான். ஒரு கட்டத்தில் அவர் பெண்களுடன் தனது வயதுக்கும் உடலுக்கும் மீறி கட்டிப்பிடித்து, டூயட் பாடி, உருண்டு புரண்டு நடிப்பதை நான் விரும்பவில்லை. அவருடைய அரசியல் நுழைவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சினிமா விஷயத்தில், எனது நண்பர்கள் யாரையெல்லாம் பிடிக்கவில்லை என்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவாக பேசும் மனநிலை மட்டும் இப்போது வரை மாறவேயில்லை. கல்லூரிக் காலத்தில் நான் கமல் ரசிகராக இருந்தேன். ஆனால், ரஜினியை விமர்சனம் செய்தால் அவருக்கு ஆதரவாக பேசுவேன். விஜயை விமர்சனம் செய்வேன். ஒரேமாதிரியான கெட்டப்பில், பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் அவருடைய ஸ்டைல் எனக்கு பிடிக்காது.

தனுஷ் அறிமுகமான புதிதில், அந்தச் சின்னவயதிலேயே அவர் டைரக்டரின் நடிகராக வளர்கிறார் என்பதை உணர்ந்தேன்.

“நீங்க வேணா பாருங்க... இவன் ரொம்ப சீக்கிரமாவே சிறந்த நடிகர் விருது வாங்குவான்Ó என்று கூறினேன்.

அப்போது எனது நண்பர்கள் சிரித்தார்கள். ஆனால், ரொம்பச் சின்னவயதிலேயே சிறந்த நடிகர் பட்டம் வாங்கினார் தனுஷ்.

அதுமட்டுமல்ல. டைரக்டரின் நடிகராகவே இன்றுவரை சிறந்த படங்களை கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து விருப்பமாக இருக்கிறார்.

ஒரு நடிகர் என்றால் நல்ல திரைப்படங்களை கொடுக்கனும். தனது ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தனும். அவர்களுக்கு இன்றைய எதார்த்த வாழ்க்கையை உணரும்படி செய்யனும் என்ற நோக்கம் இருந்தால் போதும். சினிமாவுக்குள் வந்துவிட்டதால், தனது ரசிகனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மனநிலைக்கு தள்ளப்படும் நடிகர்களே அதிமாகிவிட்டார்கள்.

சினிமா என்பது ஒரு தொழில், நடிகன் என்பவன் ஒரு தொழிலாளி. இதுதான் எதார்த்தம். ஆனால், தனது லாபத்துக்காக எதையும் செய்யும் நடிகர்களே அதிகமாகிவிட்டார்கள். தன்னை பூஜிக்கும் ரசிகர்களை மனரீதியாக அடிமைப்படுத்துகிறார்கள். தங்களுடைய தவறுகளுக்கு ரசிகர்களை கேடயமாக்குகிறார்கள்.

ஆம், அவர்களுடைய ரசிகர்களின் கிறுக்குத்தனம்தான் அவர்களுடைய சம்பளத்தை தீர்மானிக்கிறது. ரசிகர்களின் எண்ணிக்கைதான், நடிகர்களின் பொருளாதாரக் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது. எல்லாமே அரசியல்தான். தூண்டில் புழுவாய் இரையாகி வருவாயை இழப்பவர்கள் ரசிகர்கள்தான்.

Previous Post Next Post

نموذج الاتصال