பழைய நினைப்புடா பேரான்டி 8 - ஆதனூர் சோழன்


எனது நினைவுகளில் 1965 இந்தி எதிர்ப்பு போர்!

1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும்.

அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில் வரும்போதே அந்தப் பள்ளிக்கூடம் தெரியும்.

“அஞ்சாப்பு முடிச்சிட்டுத்தான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கு போகனும் என்று அம்மாவிடம் சொல்வேன்.

“ஆமா சாமி... மலரு அப்பா மாதிரி படிச்சிட்டு, வேலைக்கு போகனும் என்று அம்மா சொல்லும். அன்றைக்கு எங்களுக்கு தெரிஞ்சு பி.காம்., முடிச்சிட்டு எல்ஐசியில் வேலை பார்த்தவர் மாமா மட்டும்தான்.

அவர்தான் பேண்ட் சர்ட் போட்டு வேலைக்கு போவதை பார்த்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் ஓரளவு படித்தவர்கள்தான். என்னோட தாத்தா வாத்தியார் வேலை பார்த்தவர். அப்பா எட்டாம் வகுப்பு, அவருக்கு அடித்த தம்பி ஆறாம் வகுப்பு, கடைசி சித்தப்பா எஸ்எல்சி. ஒரே பொண்ணு அத்தை. அவுங்க 5 ஆம் வகுப்பு மட்டுமே படிச்சிருந்தாங்க.

அன்றைய நிலையில் வெளியுலகத் தொடர்பு அதிகமா வச்சிருந்த குடும்பம் எங்களோடது. ஆனால் அதுக்காக வெளிமாநிலம், வெளிநாடுகள் என்று நினைக்கத் தேவையில்லை. அதிகபட்சம் ஒருங்கிணைந்த மதுரை ராமநாதபுரம் மாவட்டத் தில் முக்கிய ஊர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

ரெண்டு சித்தப்பாக்களும் அரசியலில் தொடர்பு வைத்திருந்ததால் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு போய் வருவார்கள்.

எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா, எங்க மாமாவை காட்டி அவர மாதிரி படிக்கனும்னு எதுக்காகச் சொன்னாங்கன்ற காரணத்தை சொல்லனும் அல்லவா?

அது வேற ஒன்னும் இல்லங்க. அத்தைக்கு ஒரு பொண்ணு. அதைக் கட்டனும்னா நான் படிக்கனும். இதான் மேட்டரு.

அந்தக் கதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போ, நான் முதல் வகுப்பு படிக்கும் போது நடந்த நிகழ்வுகளில் எனக்கு நினைவில் இருப்பவற்றை சொல்கிறேன். 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற நேரம்.

அலங்காநல்லூர் ஹைஸ்கூலில் திடீரென்று லாங் பெல் அடிப்பார்கள். கொஞ்ச நேரத்தில் புளியந்தோப்பு வழியாக மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வருவார்கள். உடனே, எங்களுக்கு விடுமுறை விட்டுருவாங்க.

ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தா, ரோட்டுப் பக்கம் போகக்கூடாதுனு அம்மா சொல்லும். அந்த அளவுக்கு ரோட்ல மாணவர்கள் கூட்டம். மாணவர்கள் மட்டுமல்ல. அரசு அலுவலங்களில் வேலை செய்கிறவர்களும் மூடிட்டு கலந்து கொள்வார்கள்.

“இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க... என்ற முழக்கம் அலங்காநல்லூர் வீதிகளில் ஒலிக்கும். திடீரென்று மாணவர்கள் ஓடிவருவார்கள். போலீஸ் அடிக்குது என்று சொல்லிக்கொண்டே ஓடுவார்கள். சிலருக்கு ரத்தக்காயம்கூட ஏற்பட்டிருக்கும். எங்கள் வீட்டுக்குள்கூட வந்து ஒளிவார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க என்று முழக்கமிட்ட தற்காக மாணவர்கள் மீது தடியடியா? இந்தி ஒழிக என்றதற்காக தடியடியா? என்பதெல்லாம் அன்றைக்கு எனக்கு புரியவில்லை.

ஆனால், மாணவர்களும், இளைஞர்களும் இந்தித் திணிப்புக்கு எதிராக அன்றைக்கு அதிகார வர்க்கத்தை எதிர்த்து போர் புரிந்திருக்கிறார்கள். அடியும் உதையும் பெற்றார்கள். ரத்தம் சிந்தினார்கள். அதன் விளைவாக நாம் இன்றும் இந்தியாவில் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பது மட்டும் இப்போது புரிகிறது.

அன்றைக்கு நாங்கள் முதல் வகுப்பு படித்தாலும், இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று இயல்பாகவே முழக்கமிடும் அளவுக்கு உணர்ச்சிகரமான போராட்டமாக அது இருந்தது.

இந்த போராட்டம் காரணமாக பள்ளிகள் அடிக்கடி மூடப்பட்டன. மாணவர்கள் ஊர்வலங் களும் போலீஸ் தடியடியும் வாடிக்கையானது. எனக்கெல்லாம் ஒரு சிலேட்டும், அ, ஆ அட்டையும் மட்டுமே மொத்த சொத்து.

பள்ளிக்கூடம் லீவ் விட்டால் வாடிவாசல் அருகே உள்ள ஊர் பஞ்சாயத்து மேடையிலும், காளியம்மன் கோவில், முத்தாளம்மன் கோவிலில்தான் விளையாட்டு. அந்த வயதில் அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் என்றால் எனக்கு ரொம்ப பயம். அலங்காநல்லூர் முனியாண்டி மட்டுமே எனக்கு தெரியும். ஆனால் பின்னாளில் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் பெயரை பார்த்தால் மதுரையில் ஏதோ பிரபலமான முனியாண்டி இருப்பார் போல என்று நினைத்துக் கொள்வேன்.

மொத்தத்தில் மதுரை மாவட்டத்தில் முனியாண்டி பிரபலம் என்பது புரிந்தது. ஆனால், இப்போதும் அலங்காநல்லூர் முனியாண்டி சாமி திருவிழா போல வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை. கோட்டை முனியாண்டிக்காகத் தான் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக சொல்வார்கள்.

இந்த முனியாண்டி திருவிழா பற்றியும், அதன் மாயத் தோற்றத்தை உடைத்தவர் பற்றியும் பிறகு பார்க்கலாம்.

ஒருவழியா இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்து, எங்கள் கூரைப்பள்ளிக்கூடம், தனியார் இடத்திலிருந்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்துக்கு மாறியது. யூனியன் அலுவலகம் அருகிலேயே பள்ளிக்கூடம் இருந்தது. தொடக்கப் பள்ளிக்கு அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையும் இருந்தது.

ஒன்றியத்துக்கே அதுதான் அரசு மருத்துவமனை. காய்ச்சல்னாலும், தலைவலினாலும், வயிற்று வலினாலும் த/அ என்ற எழுத்துகள் பொறித்த மாத்திரையும், சிவப்புக் கலரில் ஒரு கசப்பும் துவர்ப்பும் கலந்த மருந்தும் கொடுப்பார்கள். நீடில்களை கொதிநீரில் போட்டு பயன்படுத்துவார்கள். அது முனைமழுங்கி, குத்தும்போது ரத்தமும் வரும்.

நான் சும்மாக்காச்சும் இதெல்லாம் பார்த்திருக்கிறேன். நண்பர்களுடன் சென்று வரிசையில் நின்றிருக்கிறேன். ஆனால், எங்களுக்கு காய்ச்சல் என்றால், அலங்காநல்லூரில் குருட்டு டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். தெலுங்கு பார்ப்பனர் குடும்பம்.

சாமி என்றே கூப்பிடுவோம். நாம் நோயை சொன்னால் அவர் நாடி பிடித்து பார்ப்பார். அவருடைய மகன் மருந்து கொடுப்பார். ஊசி போடுவார். ஆனால், சிறுவர்களுக்கு வலிக்காமல் சின்ன நீடிலில் மருந்தேற்றி போடுவார்.

“வலிக்காம ஊசி போடுங்க சாமி” என்று நெளிவேன். “சரி. வீட்டுக்கு வந்தால் இளநீர் கொடுப்பியா? என்று கேட்டுக்கொண்டே ஊசியைப் போட்டுவிடுவார்.       (தொடரலாம்)


Previous Post Next Post

نموذج الاتصال