பனிபடர்ந்த இமய மலை முகடுகளில் சிரித்து
தென் குமரியின் அலைகளில் பாதங்களை நனைத்து மகிழ்ந்த பாரதமாதா
மணிப்பூரின் மலை காடுகளில் சீரழிக்கப்படுகிறாள்
காவிகள் கால் வைத்த மாநிலங்களிலெல்லாம் களங்கப்படுத்த படுகிறாள்!
அன்று லங்காவை எரித்து அழித்த வானரங்கள்
இன்று மணிப்பூர் திரும்பி விட்டனவோ?
காவி போதை தலைக்கேறிய காட்டேரிகளின் கோர தாண்டவம்..
கொடும் பாவிகளால் குதறப்பட்ட பெண்கள், நம் மகள்கள், தங்கைகள், சகோதரிகள்...
அங்கே ஆடையின்றி அம்மணமாகியது மொத்த நாட்டின் கண்ணியம்!
ஏழேழு நாடுகளுக்கு ஊர் மேயும் தலைவனெனும் ஒரு தறுதலை...
எழுபத்தொன்பது நாட்களுக்கு எங்கே ஒளிந்து தொலைந்தது?
பெத்துப் போட்ட 'புதிய இந்தியா' பித்து பிடித்து திரிவது கண்டு புளகாங்கிதம் அடைவானோ?
இத்துப்போன இந்துத்துவாவிற்கு
இன்னும் எத்தனை உயிர்களை நரபலியிடுவானோ?
அன்று பாஞ்சாலிக்கு சேலை தந்த கண்ணணுக்கு
பழங்குடி பெண்களுக்கு ஒரு துண்டு துணி தரமுடியாதா?
சந்திரனுக்கு விண்கலன் அனுப்பிய கையோடு நம்மை
சந்தி சிரிக்க வைத்து சந்ததியும் தூற்ற வைத்து விட்டதே இந்த சங்கிக் கூட்டம்
அரியணையில் அமர்ந்திருப்பதோ அயோக்கியர்கள்
வெறியாட்டம் ஆடுவதோ அவர்கள் அடியாட்கள்
கடமை மறந்து கயவர்களோடு கள்ள உறவில் காவலர்கள்
உயிரிழந்து உடைமை இழந்து தவிப்பதோ எளிய மக்கள்
யார் இந்த மலைவாழ் குக்கிகளும் மீத்தேய்களும்
இந்துக்களும், இசுலாமியரும், கிறித்துவர்களும் இன்னும் பல மத இன பிரிவினரும்?
இரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட சகமனிதர்கள் தானே?
இத்தேசத்தின் உரிமைகளை பெற்ற சமமனிதர்கள் தானே?
மனிதம் இல்லாத மதம் எதற்க்கு?
ஈரம் இல்லாத இதயம் எதற்க்கு?
பாசம் இல்லாத பாரதம் எதற்க்கு?
தகைமை இல்லாத தலைமை எதற்க்கு?
காட்டுத்தீயின் நடுவே குருவிகள் கூடு கட்டலாமா?
கற்குதிரையில் ஏறி ஆகாயத்தில் பறக்க நினைக்கலாமா?
காவிகளுக்கு வாக்களித்த பின் அமைதியை தேடலாமா?
பொய்க்கு பலியான நாட்டில்
புயல் வீசத்தானே செய்யும்?
இரந்து யாசித்து நிற்க இங்கு நடப்பது மன்னராட்சியில்லை
கனன்று கொதித்து கட்டளையிடுவோம் மக்களை காத்திடு அரசே என்று
கருத்தியல் வேல் வாளினை கூர்மைப்படுத்தி காத்திருப்போம்
வரும் தேர்தல் யுத்தத்தில் பாசிசத்தை வேரறுத்து மனிதம் காக்க!