கேதார்நாத் பாண்டே முதல் ராகுல் சாங்கிரித்யாயன் வரை...
அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறார். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டார்.
வாரணாசிக்கு சென்று, அங்கு ஏழை மாணவர்களுக்கான ஆசிரமத்தில் தங்கி சமஸ்கிருதம் கற்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ மடத்தின் தலைவரை சந்தித்தார். அந்த மடாதிபதியுடனான சந்திப்பு இவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது. பழங்கால சமஸ்கிருதத்தை படித்துத் தேர்ந்தார்.
மடத்தின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தனது பெயரை ராமோதர்தாஸ் என்று மாற்றிக்கொண்டார். ஆனால், அவருடைய கற்கும் ஆர்வம் தென்னிந்தியப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டியது. வேதாந்த கல்வியை அறிந்துகொண்டார்.
வேதாந்த கல்வியை அறிந்த அவர், சைவ சமயச் சடங்குகளுக்கு எதிராக திரும்பினார். அதைத்தொடர்ந்து, ஆர்ய சமாஜத்தில் இணைந்தார். இந்தச் சமயத்தில் கேதார்நாத் வித்யார்த்தி என்ற பெயரில் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதத் தொடங்கினார்.
பின்னர், புத்த துறவியாக மாறினார். இலங்கைக்கு சென்று, பாலி மொழி கற்று, பௌத்த நூல்களை தீவிரமாக ஆய்வு செய்தார். இங்கேதான் அவர் ராகுல் சாங்க்ரித்யாயன் என்ற பெயரைப் பெற்றார். இந்தப் பெயரே அவர் வாழ்நாள் முழுக்க தொடர்ந்தது.
பவுத்த மதத்தில் இருந்தபோது, காஷ்மீர், லடாக் மற்றும் நேபாளம் வழியாக திபெத்வரை நெடிய பயணம் மேற்கொண்டார். நான்கு முறை திபெத்துக்குச் சென்றிருக்கிறார். அவரது தீவிர முயற்சியின் காரணமாக, நாளந்தா பல்கலைக் கழகத்திலிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஆயிரக்கணக்கான பனை ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை திபெத் பவுத்தமத தலைவர்களின் அனுமதியோடு, 22 கழுதைகளின் முதுகில் ஏற்றி இந்தியாவுக்கு கொண்டுவந்தார். இப்போதும், அவரை பெருமைப்படுத்தும் வகையில் அந்த சுவடிகளும், பழமையான ஓவியங்களும் பாட்னா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தான் கொண்டு வந்த ஓலைச் சுவடிகளில் சிலவற்றுக்குப் புலமைமிக்க விளக்கங்களைத் திருத்தி எழுதினார்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இலங்கை, நேபாளம், திபெத், சோவியத் ரஷ்யா ஆகிய பகுதிகளுக்கும் இவர் பெரும்பாலும் கால்நடையாகவே பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்களை குறிப்புகளாக எழுதினார். இந்தியில் இந்த வகை பயண நூல்களின் தந்தையாகக் ராகுல் சாங்கிருத்தியாயன் கருதப்படுகிறார்.
தனது வாழ்க்கையில் பல மதங்களைத் தழுவி அவற்றை ஆய்வு செய்த ராகுல்ஜி, கடைசியாக தான் ஏற்றிருந்த பவுத்த மதத்தையும் கைவிட்டு, மார்க்சியத்தை ஏற்றார். வாழ்வின் இறுதிவரை மார்க்சிஸ்ட்டாகவே வாழ்ந்தார்.
சங்கிரித்யாயன் 30 மொழிகளை அறிந்திருந்தார். ஹிந்தி, சமஸ்கிருதம், பாலி, போஜ்புரி, உருது, பாரசீகம், அரபு, தமிழ், கன்னடம், திபெத்தியம், சிங்களம், பிரெஞ்சு மற்றும் ரஷ்ய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
சோவியத் ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு ரஷ்ய பெண் ஒருவரை திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு மகள் பிறந்தார். ஆனால், இந்தியா திரும்பியதும், டாக்டர் கமலா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் ஜெயா என்ற மகளும், ஜெடா என்ற மகனும் பிறந்தனர்.
ராகுல் சாங்க்ரித்யாயனின் படைப்புகளுக்காக இந்தியாவின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான சாகித்ய அகாடமி விருதை 1958 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடமிருந்து பெற்றார்.
மிகப்பெரிய படைப்பாளியாக இருந்த அவர், சமூகவியல், வரலாறு, தத்துவம், பௌத்தம், திபெட்டாலஜி, அகராதி, இலக்கணம், உரை திருத்தம், நாட்டுப்புறவியல், அறிவியல், நாடகம் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஆனால், இந்த புத்தகங்களில் பல இன்னும் வெளியிடப்படாமல் கிடக்கின்றன.
அவர் எழுதிய “வோல்கா சே கங்கா” அல்லது வோல்கா முதல் கங்கை வரை என்ற நூல், கி.மு. 6000 மாவது ஆண்டு முதல் மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவல் விடுத்த 1942 ஆம் ஆண்டு வரை, மனித சமூகம் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதைப் பற்றி பரந்த பார்வையுடன் எழுதப்பட்ட, புகழ்பெற்ற கதைகளின் தொகுப்பாக இருக்கிறது.
இந்தப் புத்தகம் தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராகுல் சாங்கிரித்தியாயன், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், அக்பர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். மதவெறியின் எல்லா அம்சங்களையும் எதிர்த்து போராடுவதில் சமரசம் இல்லாத போராளியாக இருந்தார்.
அவருடைய வாழ்நாள் சாதனைக்காக 1963ல் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1993 ஆம் ஆண்டு அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டு சிறப்பித்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்த, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மேல், சில சமயங்களில் கால் நடையாக பயணம் செய்து, முறையான கல்வியின்றி, தானே அனைத்தையும் விரும்பிக் கற்றறிந்து, புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிய, பிரிட்டிஷாரை எதிர்த்து எழுதியதற்காக மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பெருமையுடைய ஒருவரை இந்தியா இன்னும் காணவில்லை.
பயணக் குறிப்புகள், சமூகவியல், வரலாறு, மதம், திபெட்டாலஜி, புனைகதை, அறிவியல், நாடகம், கட்டுரைகள், இன்னும் பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதி வெளியிட்ட 135 க்கும் மேற்பட்ட அவரது படைப்புகள் உள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர் என்று அவரை அழைப்பது மிகப் பொருத்தமானது. ஆம், ராகுல் சாங்கிரித்யாயன் என்ற பெயருக்கு மிகச்சிறந்த அறிஞர் என்றே அர்த்தம் கொள்ளலாம்.
ஆதனூர் சோழன்