அடிமை ராஜா?
அடிமைப்படுவது இரண்டு வகை.
அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது.
தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது.
அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு.
படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது.
வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது.
அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப் படுத்தினார்கள்.
அவர்களைக் கொண்டே அவர்களுடைய மண்ணின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்.
பூர்வகுடிகள் அழிந்தபிறகு, ஆப்பிரிக்க காடுகளில் வசித்த கறுப்பு இன மக்களை விலங்குகளைப் போல வேட்டையாடி பண்ணைகளிலும் வீடுகளிலும் சவட்டி எடுத்தனர்.
200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர்.
நமக்காக உழைக்கும் மாடுகளுக்குக் கூட அதன் உழைப்புக்குத் தகுந்தபடி இரை போடுவோம். ஒரு நோய் வந்தால் மருத்துவம் பார்ப்போம்.
ஆனால், கறுப்பின மக்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கமாட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தால்தானே தொடர்ந்து தனக்காக உழைக்க முடியும் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட வெள்ளைக்காரர்களுக்கு இருக்காது.
கொடுத்த விலைக்கு மேல் அந்த அடிமை உழைத்தால் போதும். அவனுக்கு எதற்காக உணவுச் செலவு, வைத்தியச் செலவு என்கிற மனப்பான்மைதான் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது.
கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.
இனி அடிமைகள் யாரும் இங்கில்லை என்று பெயரளவுக்கு சட்டம் இயற்றுவதற்கு 200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆப்ரகாம் லிங்கன்தான் அந்தச் சட்டத்தை இயற்றினார். ஆனால், சட்டத்தை தூக்கி அலமாரியில் வைத்துவிட்டு மீண்டும் தங்கள் எஜமான் மனப்பான்மையுடன்தான் வெள்ளைக்காரர்கள் நடந்துகொண்டார்கள்.
ஆட்சி அதிகாரம் பற்றியெல்லாம் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனென்றால், வாக்குரிமைகூட அவர்களுக்கு இல்லை.
ஆனால், காலம் செல்லச் செல்ல கறுப்பின மக்களுடன் வெள்ளை இனத்தவரில் சிலரும் கலக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த கலப்பின மக்களும், கறுப்பின மக்கள்தான் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.
நீக்ரோ என்று அழைக்கப்பட்ட அவர்கள், தங்களை நீக்ரோ என்று அழைக்கக்கூடாது. கறுப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலைக்கு உயர்ந்தார்கள்.
அடிமைப்படுத்திய தேசத்தின் கவுரவம் உலக அளவில் எல்லாத் துறைகளிலும் உயர்ந்து நிற்க காரணமானார்கள்.
இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அமரமுடியும் என்ற நிலை நீடித்தது.
எப்போது ஒருமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நூறு செனட் உறுப்பினர்களில் ஒருவர் இடம்பெற முடிந்தது. சமீப காலத்தில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஓரிருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல.
இதோ, காலம் புரண்டு படுத்திருக்கிறது. அடிமை படுத்தப்பட்ட வம்சத்திலிருந்து வந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஆனால், அவர் வெள்ளையரை மீறி எதை சாதிக்கமுடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையிலும், மேல் சபையிலும் முழுக்க முழுக்க வெள்ளையரே இடம் பெற்றுள்ள நிலையில், இவர் எந்த காரியத்தை தன்னிச்சையாக நிறைவேற்ற முடியும்?
அடிமைப்படுத்திய தேசத்தின் ராஜாவாக பொறுப்பேற்று இருப்பது வரவேற்கக் கூடியதுதான். ஆனால், வெள்ளைக்காரர் களின் கைப்பாவையாக செயல்படவேண்டிய நிலை நீடிக்கும் போது இவரை அடிமை ராஜா என்றுதானே கருதமுடியும்.
ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்தேன். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, கென்யா நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிட்டார். தனது உறவினர் ஒருவருக்கு பிரதமர் பதவி தரும்படி அந்த நாட்டின் ஜனாதிபதியை மிரட்டினார் என்ற விஷயம் அதிர்ச்சியளித்தது.
ஏழைப்பங்காளன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒபாமாவின் தேர்தல் நிதி வசூல் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் என்கிற விவரம் மலைக்க வைத்தது. தவிர, ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்களும் புரிந்தன.
முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் மட்டுமே நிறைந்த நாடாளுமன்றத்தில் இவர் எதை தன்னிச்சையாக நிறைவேற்றப் போகிறார்? தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாத ராஜாவை, அடிமை ராஜா என்றுதானே அழைக்க முடியும்.
புதிய தகவல்களுடன் இந்த நூல் உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.
நன்றி!