இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1 - ராதா மனோகர்


நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (August – 6 – 1928 Monday)

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்ட்ரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்டர்  J C W  றொக் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது.

விசாரணையின் போது முதல் பிரதிவாதியான ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் தம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக கூறியவை. 

(முற்றோடர்) ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா? 

இல்லை.

டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் முயற்சி செய்யவில்லையா? 

அப்படி இல்லை. டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலகம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார். 

உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?

டாக்குத்தர் கந்தையா என்னுடைய தமையனாரிடம் இருந்து கோயிலின் திறப்பை பறிப்பிப்பதற்கு முயற்சி செய்தார், அதனாலே எனது தகப்பனாரும் தமையனாரும் கோயிலில் கும்பிட வந்தரவர்கள் அயலவர்கள் ஆகிய இவர்களை தங்களுக்குக் துணையாக சேர்த்தார்கள்.

அப்படி துணையாக நின்றவர்களில் விதானை நமசிவாயமும் ஒருவரல்லவா?

விதானை நமசிவாயம் போல கோயில் கும்பிட வந்தவர்கள் எத்தனையோ பேருண்டு.

விதானை உங்களோடு சிநேகம் அல்லவா? 

அவர் அதிகமாக எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு, 

நாவலருடைய மருமகன் பொன்னம்பல பிள்ளையும் உங்களோடு சிநேகம் அல்லவா? 

அதை பற்றி எனக்கு தெரியாது.

வேலுப்பிள்ளை உடையார்? 

அவர் சிநேகத்தை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் அயலவர்.

கனகசபாபதி ஐயரை உமக்கு தெரியுமா?

ஆம்.

ஏதுங் கூட்டங்களுக்கு அவரை கொண்டல்லவா உமது பிதா விஞ்ஞாபனங்களை எழுதுவிப்பது? 

எனது தகப்பனார் அப்படி ஒரு கூட்டமும் கூட்டவில்லை.

கோயில் ஏதும் கூட்டம் கூட்டப்படும் பொழுது அந்த ஐயர் விஞ்ஞாபனம் எழுதுவதுண்டல்லவா? 

எனக்கு தெரியாது.

பொன்னம்பல பிள்ளை கோயிலின் புராண படிப்புக்கு இடையிடையே வந்தவரல்லவா? 

வந்ததுண்டு.

அவர் உம்முடைய பிதாவோடு சிநேகிதம் அல்லவா? 

நானறியேன். 

1892 ஆம் ஆண்டு உமக்கு என்ன வயசிருக்கும்? 

மூன்று நாலு வயசிருக்கும். 

ஆனபடியால் அக்காலத்திலே இந்த கோயில் விஷயமாக கூட்டம் கூடியது கூடாதது பற்றி உமக்கு தெரியாதென்று நினைக்கிறேன்? 

நான் அதைப்பற்றி சொல்லவில்லை பொன்னம்பல பிள்ளை புராண படனஞ் செய்தற்கு வந்ததையிட்ட சொன்னேன்.

1892 ஆம் ஆண்டு கோயில் கூட்டம் கூடியதை பற்றி உமக்கு தெரியுமா? 

இல்லை.

1902 ஆம் ஆண்டு கோயிலில் ஏதும் திருப்பணிகள் புதுக்குவித்தது உண்டா? 

ஆனந்த வருஷத்தில் எனது தாயாரின் தகப்பனார் சில திருத்தங்களை செய்தார்.

1902 ஆம் ஆண்டு ஒரு கும்பாபிஷேகம் நடந்ததுண்டா? 

நமது தகப்பனார் காலத்திலும் ஒரு கும்பாபிஷேகம் நடந்ததுண்டு.

உமது தகப்பனார் அக்காலத்தில் கும்பாபிஷேகத்திற்கு வரும்படி ஊரவர்க்களுக்கு ஒரு விஞ்ஞாபனம் விடுத்ததுண்டா? 

இருக்கலாம்.

உமக்கு தெரியவேண்டும் கேள்விகளுக்கு விலத்தி மறுமொழி சொல்ல கூடாது (ஒரு விஞ்ஞாபனத்தை காட்டி இதற்கு உமது தகப்பனாரும் தமையனாரும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள் அல்லவா? இப்பொது தெரிகிறதல்லவா? 

ஆம்.

முதலில் அவரால் கட்டப்பட்டது பின்னர் தானே (பறங்கியரால்) இடிக்கப்பட்டது? 

ஆம்.

பறங்கியரால் இடிக்கப்பட்ட பின்னர்தான் அதே கோயில் ஸ்ரீ மாப்பாண முதலியரால் கட்டப்பட்டது? 

ஆம்.

இதில் ஒரு தவறும் இல்லையே? 

இல்லை. 

ரகுநாத மாப்பாணர் அந்த நிலத்தை விலைக்கு வாங்கி கோயிலை கட்டுவித்தார். யாரிடம் வாங்கினார்? 

கொழும்பில் ஏதோ ஒரு ஒழுங்கு செய்து இந்த நிலத்தை வாங்கினார் என நான் கேள்விப்பட்டேன். 

யாரும் தரும தானம் செய்ததோ? 

இல்லை விலைக்கு வாங்கியது.

இந்த விஞ்ஞாபனத்தில் ஊரவர்கள் இயன்ற பொருளுதவி செய்யவேண்டும் என்று காட்டப்பட்டிருக்கிறது அல்லவா? 

இல்லை.

(விஞ்ஞாபனத்தை பிரதிவாதியிடம் கொடுத்து) இதில் கடைசி பிரிவிற்கு மேலான பிரிவை படித்து பாரும் – (பிரதிவாதி படித்து பார்த்து) 

அப்படி ஒன்றும் இல்லை.

இந்த விஞ்ஞாபனத்தில் உமது பிதாவும் தமையனாரும் தங்களை ஆதீனகர்த்தர் என்று வெளியிட்டிருக்கிறார்கள் அல்லவா? 

ஆம்.

அதன் கருத்தென்ன? 

சொந்தக்காரர்.

நியாயவாதி சென்னை சர்வகலாசங்கத்தார் வெளியிட்டு வரும் தமிழகராதி பிரதியொன்றை பிரதிவாதி கையில் கொடுத்து, இதில் ஆதீனகர்த்தர் என்பதற்கு என்ன அர்த்தம் எழுதப்பட்டிருக்கிறது என்று பாரும்? 

“ஒரு சைவ மதத்தின் தலைவர்” ஆனால் இந்தியாவில் வழங்கும் அர்த்தம். யாழ்ப்பாணத்திலே சொந்தக்காரர் என்பதே வழக்கு!

உமது மூதாதையர் எல்லோரும் ஆதீனகர்த்தர் மணியம் என் எழுதி வந்தார்களல்லவா?

ஆம்.

இவ்விதமான சில விஞ்ஞாபனங்களில் தர்மகர்த்தா என்றும் காணப்படுகின்றது அல்லவா?

(இச்சந்தர்ப்பத்தில் நியாயவாதி ஒரு சாதனத்தை பிரதிவாதிக்கு எடுத்து காட்டி, இதில் உமது தகப்பனார் சங்கரப்பிள்ளை என்பவர் தம்மை தருமகர்த்தா அல்லது பராமரிப்புக்காரன் என்று எழுதியிருக்கிறார் அல்லவா? இவர்கள் இப்படி எழுதி இருப்பதன் கருத்தென்ன? 

தருமகர்த்தா என்பது பெரும்பான்மையும் ஊரவர்கள் கொடுக்கும் தரும பொருளை பரிபாலிப்பவர் என்னும் கருத்துப்படும் பராமரிப்புக்காரன் என்றால் அதிபர் என்று பொருள்படும். சிலர் இச்சொற்களுக்கு முறையே சொந்தக்காரர் அதிபர் என்றும் பொருள்கொள்கிறார்கள்.

குத்தகை உறுதி ஒவ்வொன்றிலும் உமது தகப்பனார் இன்றேல் தமையனார் சொந்தக்காரர் என எழுதவில்லையா? 

அவர்கள் கோயில் சொந்தக்காரரும் கோயில் பொருள்களை பார்ப்பரிப்பவருமாவார்.

கந்தசாமி கோயில் ஒருவருடைய சொந்தமென்றா நீர் கூறுகிறீர்? 

ஆம் எம் முன்னோர்கள் வழிபடுவதற்காக கட்டுவித்த கோயில்.

டொன் சுவான் மாப்பாண முதலியார் மானிப்பாயை சேர்ந்தவர் அல்லவா? 

ஆம். ஆனால் அவர் கல்யாணம் முடித்தது மட்டுவில்லிலாகும்.

அப்படியானால் நல்லூரில் ஏனிந்த கோயிலை கட்டுவித்தார்? 

அவர் நல்லூரில் வசித்தாரென்றும் அதனால்தான் அங்கே கோயிலை கட்டுவித்தார் என்றும் கேள்வி. 

கந்தையா மாப்பாணரின் ஆதனங்களுக்கு உருமைத் தத்துவம் எடுத்ததா? 

கந்தையா மாப்பாணரின் சொந்த ஆதனங்களுக்கு உரிமை தத்துவம் எடுத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். கோயிலா தனங்கள் எங்கள் குடும்பம் முழுவதற்கும் உரிய தரும சொத்தாதலால் அவைகளுக்கு தத்துவம் எடுக்கவில்லை.

ஆறுமுக மாப்பாணருடைய ஆதனங்களுக்கு உரிமை தத்துவம் எடுத்தாகிவிட்டதா? 

ஆம்

கோயிலாதனங்கள் அதில் சேர்க்கப்படவில்லையா? 

இல்லை

1921 ஆம் ஆண்டு பின்னரும் ஒரு உறுதி முடித்தரல்லவா? 

ஆம்.

அதில் உம்மையும் உமது தமையனாரையும் கோயிலின் ஒருமித்த அதிகாரிகளாக காட்டப்பட்டிருக்கிறதல்லவா? 

ஆம்

அந்த உறுதியிலே உங்கள் இருவரையும் சொந்தக்காரர் என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? 

இருக்கலாம்.

குறித்த உறுதியிலே தருமத்திற்கும் நிபந்தனைகளுக்கும் அமைய என்பதன் கருத்தென்ன?

(இந்த சமயத்தில் நீதிபதி ஹெய்லி பிரதிவாதி ஆங்கிலம் அறியாதவராலும் உறுதி ஆங்கிலத்தில் இருப்பதாலும் இந்த கேள்வி கேட்பது சரியல்ல என ஆசங்கித்தனர்)

இந்த சொற்கள் குறித்த உறுதியில் இருப்பது உமக்கு தெரியும்தானே? அவற்றின் கருத்தென்ன? 

எனக்கு தெரியாது.

ஸ்ரீ குணசிங்கம்: ஊரவர்கள் கோயில் தங்களுக்கு உரிமை உண்டென்று இதற்கு முன் சொல்லவில்லை என நீர் சொன்னீரே? 

நான் சொன்னது இந்த கருத்திலல்ல.

பின் எந்த கருத்தில்? 

எங்களுடைய இனத்தவர்கள் அல்லாமற் பிறர் உரிமைக்கு வரவில்லை என்பதே நான் சொன்னது.

கோயில் பரபரப்பை பற்றியல்ல? 

கோயில் விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிறர் முன்னொருபோதும் வெளிப்படவில்லை.

நீரும் உம்முடைய முன்னோரும் பிரமணர்களோடு வழக்கு பேசி இருக்கிறீர்களல்லவா? 

ஆம்.

கட்டியத்திலே புவனேகபாகுவின் பெயரும் சொல்லப்படுகிற தல்லவா? 

ஆம்.

ஏன் அவருடைய பெயர் சொல்லப்படுவதென்பதை இங்கே விளங்கப்படுத்தவும்.

கட்டியஞ்சொல்லும் பொழுது முதலில் தெய்வங்களை குறித்தும் பின்னர் அரசனை குறித்தும் பின்னர் கோயிலதிகாரியை குறித்தும் அதன்பின் அன்பர்களை குறித்தும் சொல்வது வழக்கம்

இவர்களில் புவனேகபாகு எவராக தென்படுவார்? 

கோயில் இப்பொழுது இருக்கும் ஸ்தானத்திலேயே ஆதியில் புவனேகபாகு ஒரு கோயிலையமைப்பித்தவர். அந்த தொடர்புதான் சொல்லப்படுகிறது.

ஆறுமுக நாவலர் சைவ சமயத்தை பெரிதும் விருத்தி செய்தவரல்லவா? 

அப்படித்தான் சொல்கிறார்கள்

அவர் கல்வியில் சிறந்தவர் அல்லவா? 

ஆம்

கீரிமலையில் சிவன் கோயில் கட்டுவதற்கு அவர் காரணமாக இருந்தவர் அல்லவா? 

நான் அதைப்பற்றி கேள்விப்படவில்லை

நாவலருக்கு குருபூசை செய்யப்படுவதல்லவா? 

அவர் ஸ்தாபித்த பள்ளிக்கூடங்களில் செய்யப்படுகிறது.

அவரிடத்தில் சொந்த பணம் இல்லையென்பது உமக்கு தெரியுமல்லவா? 

ஆறுமுக நாவலர் ஒரு மடத்தில் இருந்தார். கொஞ்சம் கருங்கற்களை குவித்திருந்தார். கோயில் கட்டுவதற்காக ஊரவர்களிடம் இருந்து பொருளுஞ்சேர்த்தார். அதனாற் அந்த மடத்தில் இருந்து போகும்படி கேட்கப்பட்டார்.

குறித்த கோயிலில் தாசியார் நடனம், ஆடு வெட்டுதல் முதலிய துர்வழக்கங்களை உமது முன்னோர் அனுசரித்தார்களென்ற காரணம் பற்றி நாவலர் அவர்களோடு பிணக்கு பட்டுக்கொண்டு போனார் என்பது உண்மையல்ல என்றா சொல்கிறீர்? 

ஊரிலே அப்படித்தான் சொல்கிறார்கள்.

நீர் ஒரு பெரிய மணியை தருவித்து அதற்காக ஒரு பெரிய கோபுரமும் தற்போது கட்டுவிக்கிறீரல்லவா? 

ஆம்.

அந்த மணியின் விலை என்ன? 

4500 ரூபா.

கோயில் காசில்தானா எடுத்து கொடுத்தீர்? 

எனது மனைவி கொடுத்த பொருள். சகோதரி தாயார் இவர்கள் தந்த பொருள். கோயில் பொருளும் கொஞ்சமுண்டு.

அந்த மணியிலே அது உம்மால் செய்யப்பட்டது என்று வரைந்திருக்கிறதாமே? 

ஆம்.

கோயில் பொருளை எடுத்து இப்படி ப்பட்ட விஷயங்  களுக்காக உமது தமையனாரும் இப்படி செலவிட்டிருக்கிறாரா? 

சில விஷயங்களை கோயில் பொருள் கொண்டும் சில விஷயங்களை சொந்த பொருள் கொண்டும் அவர் செய்வித்திருக்கிறார். ஆனால் கோயில் பொருள்கொண்டு செய்ததேது சொந்த பொருள் கொண்டு செய்ததேது என்று எனக்கு தெரியாது.

ஆறுமுக மாப்பாணரும் சிலசில திருப்பணிகளை தாம் செய்வித்ததென்று காட்டியிருக்கிறார். உதாரணமாக முந்திய மணிக்கோபுரத்தில் தம்மால் கட்டுவிக்கப்பட்டது என்று எழுதி இருக்கிறாரல்லவா? 

ஆம்.

ஆனால் இவைகள் கோயில் பொருள் கொண்டுதானே செய்யப்பட்டன? 

தன்னுடைய சொந்த பொருள்கொண்டும் கோயில் பொருள்கொண்டும் இவைகளை செய்வித்தார். ஒரு கோயிலை பரிபாலிப்பவர் ஏதும் ஒரு கருமத்தை கோயிலில் நிறைவேற்றும் பொழுது தாம் செய்ததாக சொல்லுவதும் எழுதுவதும் வழக்கம்தானே?

ஆனால் அவர் தம்மை ஆதீனகர்த்தா என்று சொல்லுகிறாரே? 

ஆம்.

Previous Post Next Post

نموذج الاتصال