ஸ்புட்னிக் முதல் சந்திராயன் 3 வரை - ஆதனூர் சோழன்



இது விண்வெளிக் காலம்

விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும்  முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு  ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். 

எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார்.

இத்தனைக்கும் நாங்கள் இருவரும் சந்தித்தது கூட கிடையாது. அறிவியல் நூல்கள் நிறைய வெளிவர வேண்டும் என்ற அவருடைய கனவை தொடர்ந்து நிறைவேற்றவே விரும்புகிறேன்.

இளைய தலைமுறைக்கு நான் செய்யும் சேவையாகவும் அது இருக்கும்.

2007 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் டூ காஸினி என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். அந்தப் புத்தகத்தை பாவை பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 

அப்போதே, அந்தப் புத்தகத்தை தமிழில் எளிமையாக தர வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால், சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

அதுவும் நல்லதுதான். 

முந்தைய எனது ஆங்கிலப் புத்தகத்தில் இந்தியாவின் சாதனை இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

ஆனால், இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாறும் இடம்பெற்றுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்களில் அன்றைய சோவியத் யூனியன் முதல் வெற்றியைப் பெற்றது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் என்ற விண்கலம், முதன் முதல் விண்வெளிக்கு சென்று பூமியைச் சுற்றி சாதனை நிகழ்த்தியது.

அன்று தொடங்கியது விண்வெளிக் காலம். அதற்கு முன்னும் விண்வெளி ஆராய்ச்சி இருந்தது. ஆனால், விண்வெளிக்கே சென்று ஆராய்ச்சி செய்யும் புதிய நடைமுறை அன்றுதான் அறிமுகமாகியது.

தொடக்கத்தில் அமெரிக்கா பின்தங்கியிருந்தது. அதுதான் உண்மை.

விண்வெளிக்கு முதல் விலங்கு, முதல் மனிதன், முதல் பெண்மணி, நிலவில் முதன்முதலாக ஆளில்லாத விண்கலம் என்று சோவியத் யூனியன் பல பெருமைகளைப் பெற்று சாதனை படைத்தது.

அடுத்தடுத்த சில தோல்விகளுக்குப் பிறகு அமெரிக்காவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. நிலவுக்கு மனிதனை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையை இன்று வரை அது தக்க வைத்துள்ளது.

மனித உயிர்களை பணயம் வைக்க சோவியத் யூனியன் மறுத்துவிட்டதே இதற்கு காரணம். நிலவில் மனிதன் செய்ய வேண்டிய ஆய்வுகளை சோவியத் யூனியன் ஆளில்லாத விண்கலங்கள் மூலமாகவே செய்தது. நிலவில் விண்கலத்தை இறக்கி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதை பூமிக்குத் திரும்பச் செய்தது சோவியத் யூனியன்.

விண்வெளியில் மிர் என்ற மிகப் பிரமாண்டமான ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கியதும் சோவியத் யூனியன்தான்.

அதற்கு முன் அமெரிக்காவும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தது. அது விண்வெளியில் உருவாக்க முயன்ற ஸ்கைலேப் 1970 களின் இறுதியில் உலகை அச்சுறுத்தி கீழே விழுந்து சிதறியது.

நிலவை ஆராய்ச்சி செய்து, அது மனிதனுக்கு எந்தவகையி லும் உதவாது என்பதை தெரிந்து கொண்டார்கள். பிறகு, சூரிய மண்டலத்தின் அடுத்த கோள்களை குறி வைத்தார்கள். வெள்ளி, புதன் ஆகிய கோள்கள் அதிவெப்பம் மிகுந்தவை என்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து, பூமிக்கு வெகு அருகில் உள்ள செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். அந்த கோளில் மேற்கொண்ட ஆய்வுகள் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அங்கு மனிதன் வாழும் சூழல் இருக்கிறதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை.

அந்தக் கோளை ஆய்வு செய்யும் முயற்சியில் ஏற்பட்ட இழப்புகள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தின.

அதுமட்டுமல்ல, சேலஞ்சர், கொலம்பியா என்ற இரு விண்கலங்கள் வெடித்துச் சிதறி, அந்த விபத்துகளில் 14 விண்வெளி வீரர்களையும் அது பலி கொடுத்தது.

மிர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஆயுள் முடிந்துவிட்டதால் 2001 ஆம் ஆண்டு அது பூமியில் விழும்படி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை கட்ட தீர்மானித்தன. அந்த நிலையத்தை கட்டும் பணியில்தான் அமெரிக்கா அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்தது.

இப்போது, அந்த நிலையம் கட்டி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, 1970களில் வாயேஜர் 1, வாயேஜர் 2, என்ற இரு விண்கலங்களை அமெரிக்கா அனுப்பியது. வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய அந்த விண்கலங்கள் சூரிய மண்டலத்தின் அனைத்து கோள்களையும் பற்றி வியப்புமிக்க தகவல்களையும் படங்களையும் அனுப்பின.

இப்போது, அவை இரண்டும் சூரிய மண்டலத்தின் விளிம்பை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளன. அவை, 2020 ஆம் ஆண்டு சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டி வெற்றிடத்துக்குள் புகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அவை தவிர, சனி கோளை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய காஸினி என்ற விண்கலம் தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது. ஆனால், சனியின் நிலவுகளில் ஒன்றான டைட்டனை ஆய்வு செய்யும் முயற்சிதான் தோற்றுவிட்டது.

இந்நிலையில்தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய முடிவு செய்தது. 

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் விண்கலம் நிலவில் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டது. நிலவில் விண்கலம் இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

அதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி செவ்வாய்க் கோளுக்கு மங்கள்யான் என்ற செயற்கைக் கோளை அனுப்பி சாதனை படைத்துள்ளது. அது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இது 6 மாதங்களுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எனினும், இந்த விண்கலம் 8 ஆண்டுகள் 8 நாட்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல அரிய படங்களை அனுப்பியது.

இந்நிலையில், மங்கள்யான் உடனான தொடர்பு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி துண்டிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நீண்ட நேரம் கிரகணம் ஏற்பட்டதால் எரிபொருள் தீர்ந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

சீனா நிலவுக்கு அனுப்பிய ரோபோ குறித்த விபரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர். ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. 

அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடும் இதுவரை தொட்டிராத நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை ஏவியது.

அது 2023 ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் எனும் தரையிறங்கு சாதனத்தை வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இறக்கியது. பின்னர் 25 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்யும் ரோவரை வெற்றிகரமாக தரையில் விடுவித்தது.

இதையடுத்து நிலவில் தடம்பதித்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றது.

Previous Post Next Post

نموذج الاتصال