பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
* 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன் கூடால், முதனியயலாளர் அல்லது, முதல்நிலை விலங்கியல் ஆய்வாளராகவும், நடத்தையியலாளர் அல்லது, விலங்குகளின் நடத்தை ஆய்வாளராகவும், மானுடவியல் ஆய்வாளராகவும் சிறப்பான பணி புரிகிறார்.
* 1977 ஆம் ஆண்டு ஜேன் கூடால் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் சிம்பன்சிகளை பாதுகாக்க சரணாலயங்களை உருவாக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
* சிம்பன்சிகள் எவ்வாறு குழுவாக வாழ்கின்றன. பிரச்சினைகளை தீர்க்கின்றன. தங்களது சுற்றத்தாருடன் எப்படி பழகுகின்றன ஆகியவை குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தினார். சிம்பன்சிகள் சிறிய கருவிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை உருவாக்கும் திறனையும் பெற்றிருப்பதை அறிந்தார். மனிதனால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நினைத்த விஷயங்களை சிம்பன்சிகள் செய்கின்றன என்பதை கூடால் தெரிவித்தார்.
* அதுவரை சிம்பன்சிகளையும் மற்ற விலங்குகளையும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட விலங்குகளுக்கு எண்களையே வைத்தனர். அவர்களைப் போல் அல்லாமல், தனது ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விலங்குகளுக்கு பெயர்களை வைத்து அழைத்தார் கூடால். கூடாலின் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளுக்கு கடும் விமர்சனம் கிளம்பியது.
* ருவாண்டாவில் வாழும் கொரில்லாக் குரங்குகளைப் பற்றி அமெரிக்காவின் பிரபல விலங்கியல் ஆய்வாளர் டியான் ஃபோசி நீண்டஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். தனது ஆய்வுகளை “கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அது பின்னர் திரைப்படமாக வெளியானது. அவருடைய பணிகளுக்கு நிகராகவே கூடாலின் பணிகளும் தொடர்கின்றன. சொல்லப்போனால், ஃபோசிக்கு இருந்த வசதிகளையும் ஆதரவையும் விட கூடாலுக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.
* விலங்குகள் உரிமைகளின் தீவிர ஆதரவாளராக கூடால் செயல்படுகிறார். பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறார். விலங்குகள் உரிமைகளுக்கான ஆதரவாளர்கள் அமைப்பின் தலைவராக 1998ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தார்.
*அயராத பணிக்காக கூடாலுக்கு பல்வேறு கவுரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. அவற்றில் கியோட்டோ விருது, உயிர் அறிவியலுக்கான பெஞ்சமின் பிராங்க்ளின் விருது, ரெய்ன்ஃபாரஸ்ட் அலையன்ஸ் சாம்பியன் விருது உள்ளிட்டவை அடங்கும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிக்கான தூதுவராக 2002 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.