தமிழகம்
என்றுமே இந்தியாவில் தனித் தீவாக இருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எமெர்ஜென்சி காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்திராவை ஏற்றபோதும், முதல்வர்
கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மட்டும் உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போது, இந்தியாவிலேயே
தமிழகம் மட்டும் தனித் தீவாக இருக்கிறது என்று இந்திரா குறிப்பிட்டார்.
அதன்பிறகு,
இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடும்,
கேரளாவும் மட்டும் மோடியை சுத்தமாக முழுமையாக விரட்டியடித்தன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு
இந்தியாவிலேயே மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.
திராவிட
இயக்க பூமியான தமிழ்நாட்டில் திமுகவையும், பெரியாரையும் மிகவும் தரம்தாழ்ந்து விமர்சனம்
செய்த கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் தமிழக மக்கள் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த
சில ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் 101 சதவீதம் கூட்டணி இல்லை என்று பா.ம.க. கூறிவந்தது.
ஆனால், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுகவுடன் பேச்சு நடத்துவதுபோல ஒரு
தோற்றத்தை உருவாக்கியது. அதைவைத்து அதிமுகவுடன் சீட் பேரத்தை அதிகரித்து கூட்டணியை
முடிவு செய்தது. ஓபிஎஸ்சையும், எடப்பாடியையும் டயர் நக்கிகள் என்று கேலி செய்த அன்புமணி,
இந்தக்கூட்டணியை நியாயப்படுத்த படாதபாடுபட்டு பாவம் அவரே டயர்டானதுதான் மிச்சம்.
சமூகவலைத்தளங்களில்
வைரலான மீம்ஸ்களில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்
சாவடிகளில் நம்மைத் தவிர வேறு யார் இருப்பார்கள் என்று வெளிப்படையாகவே பேசி மாட்டிக்கொண்டு
விழித்தார். ஆனால், அவருடைய தர்மபுரி தொகுதியில் அதிமுக, தேமுதிக துணையிருந்தும் தோல்வியடைந்தார்.
ஹெச்.ராஜா
பேசிய பேச்சு கொஞ்சநஞ்சமல்ல. இவர் பெரியாரிலிருந்து ஸ்டாலின் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
பெரியார் சிலையை உடைக்கும் லெவலுக்கு பேசிய ஹெச்.ராஜாவுக்கு சிவகங்கைத் தொகுதி வாக்காளர்கள்
தோல்வியை பரிசாகக் கொடுத்தார்கள்.
ஸ்டெர்லைட்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுடாமல் விட்டிருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள்
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று, தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்துவதைப்
போல பேசியவர் தமிழிசை சவுந்தரராஜன். நான் கோவிலுக்குப் போவேன். கனிமொழி கோவிலுக்கு
போவாரா என்று கேட்டு தனது பிரச்சாரத்தில் இந்துவெறிக்கு முன்னுரிமை கொடுத்தார். அவரையும்
தோற்கடித்து தூத்துக்குடி வாக்காளர்கள் பதில் கூறினார்கள்.
திமுகவை
வைத்து அதிமுகவுடன் சீட் பேரம் பேச முயன்று தோற்ற விரக்தியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா
தனதுபிரச்சாரத்தில் படுமோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். திமுக என்றாலே தில்லுமுல்லு
கட்சி. அதிமுகவுடனான கூட்டணி ராசியான கூட்டணி. எம்.ஜி.ஆரை ரோல்மாடலாக கொண்டு இன்றுவரை
வாழ்பவர் விஜயகாந்த். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று
பேசினார். ஆனால், தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மக்கள் படுதோல்வியையே பதிலாகக் கொடுத்தனர்.
அ.ம.மு.க.
பொதுச்செயலாளர் தினகரனோ, திருட்டு ரயிலேறி வந்த பாரம்பரியத்தைச் சேர்ந்த சுயநலப்புலி
ஸ்டாலின் என்றும், திமுக அகதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்றும் விமர்சனம் செய்தார்.
அவருடைய கட்சிக்கும் தமிழக மக்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதிகமான வாக்குகளை
பிரித்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைத்த தினகரனை அதிமுக அலட்சியம்
செய்யும் அளவுக்கே அவருடைய கட்சிக்கு வாக்குகள் கிடைத்திரந்தன.
திமுக
தலைவர் ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போல பேசுகிறார். மக்கள் கணக்கு அவருக்கு தெரியாது.
திமுக படுதோல்வி அடையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். தென் சென்னைத் தொகுதியில்
அவருடைய மகன் ஜெயவர்தன் திமுக கூட்டணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறார்.
திராவிட
கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிவந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவுடன்
கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, பிரச்சாரத்தில் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்
என்று கூறினார். ஆனால், 48 ஆயிரம் கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் அழிக்கப்பட்ட நிலையிலும்
வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். முந்தைய தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக
இந்தத் தேர்தலில் பூஜ்யமாகிவிட்டது.
தமிழகத்தின்
அத்தனை பிரச்சனைகளுக்கும் திமுக மீது பழிபோட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தேர்தல்
வெற்றிக்கும் ராசியில்லை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். திமுக இனி தமிழக அரசியலில்
எழவே முடியாது என்று கிண்டல் செய்தனர். ஆனால், அந்தக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும்
2019 மக்களவைத் தேர்தல் மூலம் தமிழக வாக்காளர்கள் தகுந்த பதிலைக் கொடுத்தனர்.
தமிழக
மக்களின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகுவைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துமதவெறி
செயல்திட்டத்தை திராவிட பூமியில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிற கட்சிகளுக்கு இங்கே
இடமில்லை என்று வாக்காளர்கள் நிரூபித்தனர்.
2024
ஆம் ஆண்டு நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜகவின் கேடுகெட்ட
ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். ஒளிமிகுந்த இந்தியாவை, ஒடுக்கப்பட்டோரின்
உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்கிற இந்தியாவை, வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற இந்தியாவை,
மதசார்பற்ற இந்தியாவை, கல்வியறிவில் சிறந்த இந்தயாவை அமைக்கும் வகையில் பாஜகவை வீழ்த்துவார்கள்
என்ற நம்பிக்கை பிறக்கிறது.
(2019 தேர்தல் முடிவு குறித்து நக்கீரனில் எழுதியது)