மரணமும் சுடுகாடும் தீட்டு என்பது ஆரியம். அவர்கள் இறந்ததும் சடலத்தை மண்ணில் கிடத்தி தீட்டைக்கழிக்க சடலத்தை எரிப்பார்கள். நெருப்பு அவர்களுக்கு தீட்டை எரித்து தூய்மையாக்கவல்ல அக்னி. அதன் நீட்சிதான் சுடுகாடுகள் தீட்டான இடங்களாயின. இறப்போடு தொடர்புடைய எல்லாமே தீட்டாயின. இறப்பின்போது சடலத்தை கையாளும் மனிதர்களும் தீண்டத்தகாதவர்களாயினர். அதன்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளும் “சாவுமோளங்கள்” ஆயின. அதற்கு எதிராக “மங்கள இசை” என்பதாக ஒன்று கட்டமைக்கப்பட்டது. மங்கலம் அமங்கலமென இசைக்கே தீட்டை ஏற்றியதன் பின்னணி இது.
இதற்கு நேர் எதிராக திராவிடம் என்பது இறப்பையும் சடலத்தையும் தீட்டாக பார்க்காத பாரம்பரியம் கொண்டிருந்தது. மூத்தோரை முன்னோரை வழிகாட்டிகளாக பார்த்த மரபு அவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக வணங்கி நினைவு கூறுவதாக பரிணமித்தது.
உயிர் நீத்தாரை எல்லாவித அலங்கரங்களுடன் உலாவாக கொண்டாட்ட இசையோடு கொண்டுசெல்வதாகட்டும் நடுகற்கள் நாட்டுவதாகட்டும் பொங்கலின் போதும் திருமணத்திற்கு முன்பும் நடுவீட்டில் மூத்தோருக்கு புதுத்துணி வைத்து படையல் போடுவதாகட்டும் சமாதிகளில் இருந்து பிடி மண் எடுப்பதாகட்டும் எல்லாமே இறப்பை தீட்டாக பார்க்காததன் மிச்ச சொச்சங்கள்.
இந்த அடிப்படை புரியாத மண்டூகம் ஒன்று மெரினாவை திராவிட சுடுகாடென்றும் அது தீண்டத்தகாத இடமென்றும் உளறிக்கொட்டியிருக்கிறது. இடுகாடு வேறு சுடுகாடு வேறென்கிற வித்தியாசம் ஒருபக்கம். புதுவித தீண்டாமையை பொதுவெளியில் கொக்கரிக்கும் ஆணவம் மறுபக்கம்.
இவரது இந்த உளறலை இதற்குமுன் இன்னொருவரும் இதேபோல் வாந்தியெடுத்திருந்தார். அக்ரஹார அம்மணி (பேரில் ஒளிந்திருந்த அம்பி?) மெரினா போகநேர்ந்தால் குளித்துவிட்டு பூணல் மாற்றவேண்டும் என்று அருள்வாக்கு அருளியிருந்தது. அதையே இது மறுஒலிபரப்பு செய்திருக்கிறது.
ஆனால் மெரினாவில் குவியும் பொதுமக்கள் இதுகளின் உளறலை காது கொடுத்து கேட்கவில்லை. மாறாக அங்கே குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் குவிந்தபடி இருக்கிறார்கள். அதுவும் பச்சிளம் குழந்தைகளை ஈரம்காயாத கலைஞரின் நினைவிடத்தில் வைத்து ஆசிவாங்கியபடி.
பகுத்தறிவாளர்கள் சிலருக்கு இது ஒருவேளை நெருடலாய் தோன்றலாம். ஆனால் இறப்பும் நினைவிடமும் தீட்டல்ல என்கிறவர்களின் செயலும் ஒரு கனமான கலகக்குரல் தான். சொற்களைவிட செயல்களே வலிமையானவை.
தீட்டு என்று கற்பிக்கப்பட்ட இடங்களில் குடும்பத்தோடு போவதும் குழந்தைகளை கிடத்தி ஆசிவாங்குவதும் கூட ஆனப்பெரிய கலக செயற்பாடுகளே. முக்கியமாக அங்கே செல்வதற்கு முன் வேண்டுமானால் குளிப்பார்களே தவிர போய் வந்தபின் யாரும் குளித்ததாக தெரியவில்லை
தீண்டாமைக்கு எதிராக “தீட்டாயிடுத்து” என்று குடியரசில் தலையங்கம் எழுதியவரின் நினைவிடமும் தீட்டை எதிர்க்கும் தன் பணியை தீர்க்கமாய் செய்துகொண்டிருக்கிறது போலும்.