திமுக 75 - ஏ.எஸ்.பன்னீர்செவனின் கற்பனாவாதமும் எம்.ஜி.ஆர் இருட்டடிப்பும் - Aravindan Kannaiyan


“திமுக 75:இந்திய பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மத்தியில் பாஜகவுக்கு மகிழ்வளிக்க பத்திரிக்கையாளர்களும் பேராசிரியர்களும் உரைவீச்சுகளும் கட்டுரைகளும் பொழிவதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் திமுக, பெரியார் சார்பில் நடக்கிறது. பிம்ப கட்டமைப்புகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.

“எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார் செய்த இயக்கம் தான் திமுக” என்கிறார். இதில் விட்டுப் போனது எம்.ஜி,ஆரின் சினிமா கவர்ச்சி. சினிமா என்றதும் ‘பராசக்தி’யை மட்டும் சொல்கிறார். திமுக வரலாற்றெழுத்தில் எம்,ஜி,ஆரின் மகத்தான பங்களிப்பு எப்போதும் இருட்டடிப்பு செய்யப்படும் ஏனென்றால் அவரின் அசுரத்தனமான வெகுஜன கவர்ச்சியை அங்கீகரித்தால் இவர்கள் ஏதோ அறிவுச் செயல்பாட்டின் மூலமே ஆட்சியை பிடித்தார்கள் என்ற பிம்பத்தை கட்டமைக்க முடியாதே. எம்.ஜி,ஆரின் செல்வாக்கை அங்கீகரித்து அரவணைத்துக் கொண்டார் அண்ணா, அதனால் தான், “என் மடியில் ஒரு கனி விழுந்தது அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்” என்றார் எம்.ஜி.ஆர் குறித்து.
1952 தேர்தலுக்குப் பின் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்துவிட கூடாதென்று கூட்டாட்சி அமைத்தார் ராஜாஜி. அதனை சந்தர்ப்பவாத கூட்டணி என்று நியாயமாக சாடுகிறார் ஆசிரியர். சரி. 1967-இல் எதிர்கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து காங்கிரசை அண்ணா வீழ்த்தியது “அரசியல் உத்தி” என்பதுடன் இன்றைய “INDIA” கூட்டணிக்கு முன் மாதிரி என்று பூரிப்போடு சொல்கிறார் ஆசிரியர். ஐயா ஆசிரியரே அந்த 1967 கூட்டணியில் தான் குல்லுக பட்டர் என்றும் ஆச்சார்யார் என்றும் பார்ப்பனர் என்றும் குலக்கல்வி கொண்டு வந்த நாசகாரர் என்றும் இகழப்பட்ட ராஜகோபாலாச்சார்யாரின் சுதந்திரா கட்சியும் இருந்தது, அவர்கள் இக்கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து அதிக சீட்டுகள், 20, வென்றார்கள். இந்த கூட்டணி அமைத்ததில் ராஜாஜியும் வெட்கமின்றி செயல்பட்டார். காமாரஜரால் ஓரங்கட்டப்பட்ட பின் அவருக்கு எதிராகவும் நேருவின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும் ஒரு வலதுசாரி கட்சியைத் துவக்கி செயல்பட்டார் ராஜாஜி. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத சந்தர்ப்பவாத கூட்டணி இது. இத்தேர்தலுக்கு முன் பல வருடங்களாக ராஜாஜியும் அண்ணாதுரையும் சேர்ந்து கூட இஸ்லாமியர்களின் மிலாது நபி விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம், அப்போது காங்கிரஸ் ராஜாஜியை “ஜனாப் ராஜாஜி” என்று தூற்றியது.
1967 தேர்தல் என்னமோ கொள்கை கோட்பாட்டுக்கு கிடைத்த வெற்றி போல் பலர் எழுதுகிறார்கள். பட்டினியும் அரிசி தட்டுபாடும் பரவலாக இருந்த சமயம், “ரூபாய்க்கு மூன்று படி அரிசி, மூன்று படியையும் படிப்படியாக போடுவோம்” என்ற கோஷம் முக்கியம். அப்புறம் சிகரம் வைத்தது போல் எம்.ஜி,ஆர் குண்டடிபட்டு கழுத்து வரை கட்டு போட்டிருந்த புகைப்படத்தை வைத்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம். ஆக, சந்தர்ப்பவாத கூட்டணி, அரிசி தட்டுபாடு, எம்.ஜி.ஆர் இவையெல்லாம் சேர்ந்து தான் சூறாவளி வெற்றியை அளித்தது.
திமுக ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி போலல்லாது, ஒரு மறுதலுக்கு இந்த ஆசிரியர் ஜஸ்டிஸ் கட்சியையும் சுட்டுகிறார், சாமாணியர்களின் ஆட்சி என்று கட்டமைக்கப்படுகிறது. காமராஜரும், கக்கனும் என்ன மிராசுதாரர்களா? மிராசுதாரர்களாக இருப்பவர்களெல்லாம் அயோக்கியர்களா? தஞ்சை பகுதியில் வாண்டையார் குடும்பம் நடத்தியக் கல்லூரியின் பயனை பல்லாயிர கணக்கானோர் பெற்றிருக்கின்றனர். பரிசுத்த நாடார் பல ஏக்கர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி கட்ட தானமாக கொடுத்தார். மேலும் 1967-இல் ஆட்சி அமைத்த போது அண்ணாவும், கலைஞரும், நெடுஞ்செழியனும் என்ன வறுமையிலா வாடினார்கள்? இப்போது திமுகவினர் மார்தட்டிக் கொள்கிறார்களே கலைஞர் சினிமா மூலம் செல்வந்தர் என்று அது உண்மை தானே?
வலிமையான மைய அரசு வெறுமனே பிரிவினைவாதத்துக்கு எதிரானது மட்டுமன்று பிராந்திய அரசின் அமைப்புகள் சாதியத்துக்கு உட்பட்டதாக இருப்பதால் மைய அரசுக்கு கூடுதல் அதிகாரம் குவிக்கப்பட்டதில் அம்பேத்கரின் பங்கும் உண்டு. இதனை முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் உருவாக்கத்தில் காணலாம். எதற்கெடுத்தாலும் கூட்டாட்சி என்பவர்கள் 2006-11 மைனாரிட்டி ஆட்சி அமைத்த போது கூட கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கவில்லை. கேட்டால் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பார்கள்.
1967-இல் ஜெயித்ததும் பெரியாரிடம் ஆசி வாங்கினார் அண்ணாதுரை என்பவர்கள் மறப்பது எந்தளவு பெரியாரிடமிருந்து ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற அண்ணா விலகினார் என்பதை. “பார்ப்பனர்களை வெறுக்கவில்லை, பார்ப்பணீயத்தை வெறுக்கிறோம்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், தேங்காயையும் உடைக்க மாட்டேன்”, “உலகப் பெரியார் காந்தி” (இது புத்தக தலைப்பு), “ஆகஸ்டு 15 கறுப்பு நாள் அல்ல” பாரதியை பாராட்டி கட்டுரை எழுதியதும் கூட நடந்தது.….இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக பெரியாரின் எந்த கொள்கையும் வெகுஜன அரசியலுக்கு ஒத்தே வராதென்று கை கழுவினார் அண்ணாதுரை. 1967 தேர்தலின் ஆகப் பெரிய முரண் அண்ணா ராஜாஜியோடு கைக் கோர்த்தார், காங்கிரசோடு பெரியார் கைக் கோர்த்தார்.
திமுக வரலாற்றில் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் என்பது அவரை மு.க கட்சியை விட்டு விலக்கிய ஐந்தே ஆண்டுகளில் முதல்வரானதில் இருந்து புரியும். திமுக ஆட்சிக்கு வர கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆனது, அதிமுக ஆட்சிக்கு வர 5 ஆண்டுகள் தாம். மேலும் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த அடுத்த 11 வருடம் திமுக தொடர் தோல்வியை சந்தித்தது, அதிமுக பிளவுபட்ட போது ஆட்சியை பிடித்த திமுக 1991-இல் ஆட்சியை இழந்து பின் வந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவிடம் பெரும் தோல்வி கண்டது. திமுக தலைவரே சொற்ப வாக்குகளில் ஜெயித்தார். அதிமுகவிடம் பெரும்பாலான தேர்தல்களில் திமுக தோற்றது. தமிழகத்தின் நல்லாட்சி பற்றி திராவிட மாடல் என்போர் பேச விரும்பாத உண்மை அதன் பெரும்பகுதி கிரெடிட் அதிமுகவுக்கும் அடித்தளமிட்ட காலனி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கும் தான். 2021 NITI ஆயோக் புள்ளி விபரம் 2011-21 காலத்தில் தமிழகம் நிறைய அலகுகளில் வெகுவாக முன்னேறியதை பதிவு செய்தது, அதிமுக ஆட்சி. அது ஆட்சி என்றே சொல்ல முடியாது. தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிகார வர்க்கத்தின் பங்கு பேசப்படாதது.
தமிழகத்தின் பெரும் வளர்ச்சிக்கு இருவரை சுட்ட முடியும். ஒருவர் காமராஜர் இன்னொருவர் எம்.ஜி.ஆர். இருவரும் பள்ளிக் கல்விக்கு செய்த பணி அரும்பணி. இருவர் ஆட்சியில் தான் சத்துணவு திட்டம் அமலானது (வரலாற்று ரீதியாக பார்த்தால் சிறிய அளவில் எம்.சி.ராஜாவின் யோசனையில் முன்பு நீதிக் கட்சி செய்தது). எம்.ஜி,ஆர் தான் இட ஒதுக்கீட்டை 68% ஆக்கினார். அதோடு மட்டுமல்ல, தனியார் கல்லூரி ஆரம்பிக்க அனுமதியளித்து அதில் 50% சீட்டுகள் அரசுக்கு என்று எடுத்துக் கொண்டதோடல்லாமல் அந்த 50% சீட்டுகளிலும் 68% இட ஒதுக்கீடு பொருந்தும் என்று சட்டம் வகுத்து பல லட்சம் பொறியாளர்கள் உருவாக வழி செய்தார்.
1991-இல் திமுக ஆட்சி இழந்ததுக்கு பன்னீர்செல்வம் திமுக வி.பி.சிங் ஆட்சி அமல் செய்த மண்டல் பரிந்துரைக்கு துணை போனதே காரணம் என்கிறார். இது அப்பட்டமான ஜோக். தமிழகத்தில் மட்டும் தான் மண்டலுக்கு எதிராக சிறு முனுமுனுப்புக் கூட எழவில்லை. தமிழகத்தின் இட ஒதுக்கீடு 50%த்தை தாண்டி 69% என்பதை சட்டத்தின் மூலம் பாதுகாத்தவர் ஜெயலலிதா ஜெயராம், வீரமணி அதற்காகவே அவரை “சமூக நீதி காத்த வீராங்கனை” என்றார். 1991-இல் திமுக ஆட்சி இழந்ததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா கொடுத்த அழுத்தம். உண்மையிலேயே அப்போது சந்திரசேகர் அரசு தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் பற்றிய உளவுத் துறை அறிக்கை பார்த்து அச்சப்பட்டது. பத்மநாபா கொலை அதிகார வட்டங்களை அச்சமுற செய்தது. இதை எல்லாம் மறந்ததோடு கற்பனைக் காரணம் கண்டுபிடிக்கிறார் பன்னீர்செல்வம். இதுவரை திமுகவினரே சொல்லாத காரணம் அது. 1976-இல் எமெர்ஜென்ஸியை திமுக எதிர்த்தது அதன் வரலாற்றில் ஒரு நல்தருணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
அண்ணாதுரை திராவிட நாடு கோரிக்கையை 1963-இல் காங்கிரஸ் பிரிவினைவாதத்துக்கு எதிராக கொண்டு வந்த சட்ட திருத்தத்தை முன்னிட்டு கைவிட்டார். அந்த சட்ட திருத்தத்துக்கு திமுகவும் முக்கியக் காரணம் என்று அபிநவ் சந்திரசூட்டின் “Republic of Rhetoric” சொல்கிறது. ஆயினும் திராவிட நாடு கோரிக்கையை கைவிட அண்ணா சாமர்த்தியமாக அந்த சட்ட திருத்த எதிர்ப்பை பயன்படுத்தினார் என்பதே உண்மை. அந்த சட்ட திருத்தத்துக்கு முன்பாகவே திராவிட நாடு சாத்தியமே இல்லை என்ற விவாதத்தின் விளைவாகவே ஈ.வெ.கி.சம்பத் திமுகவை விட்டு வெளியேறினார். திராவிட நாடு சாத்தியமில்லை என்று தெரிந்தே அது உணர்வு பூர்வமான கிளர்ச்சியைத் தரும் கோஷம் என்பதால் தொடர்ந்து முன் வைத்ததாக அண்ணாவே சொன்னதும் உண்டு. ஆக, பன்னீர்செல்வன் சொல்வது போல் ஏதோ சட்ட திருத்தம் மட்டுமே காரணமன்று.
அண்ணாதுரையின் அரசியல் இன்னும் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பேன். அண்ணாவின் அகால மரணம் திமுக வரலாற்றை மடை மாற்றியது. 1977-க்குப் பின் திமுகவின் கொள்கை பேச்செல்லாம் ஒழிந்து “மலையாளத்தான்”, குடும்ப அரசியல், சாதி அரசியல் என்று திசை மாறியது. இன்று திமுக, அதிமுக இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக நினைத்துக் கொள்வோர் பாசாங்குகாரர்கள்.
குறிப்பு:பன்னீர்செல்வனின் கட்டுரையின் சுட்டி முதல் கமெண்டில்.
Previous Post Next Post

نموذج الاتصال