தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அமைப்பான உலக தமிழ்ச் சங்கம், 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சங்கமானது, உலகில் பல நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிப் பரப்பும் மேலான தமிழ்ப்பணியை செய்து வருகிறது.
கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம்
அவ்வகையில், தொடர்ச்சியான தமிழ்சார் செயல்பாடுகள் மற்றும் கொரிய சட்டதிட்டப்படியான சங்க பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்ததன்பேரில் (உலக தமிழ்ச் சங்கம் மதுரை - 2018 - 110 விதியின் கீழ்) மதுரை உலக தமிழ்ச் சங்கம் கொரிய தமிழ்ச்சங்கத்தை உறுப்பினராக இணைத்து உறுப்பினர் எண் (UTS /WD 012) வழங்கியுள்ளது என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறியத்தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறது கொரிய தமிழ்ச்சங்கம். மேலும், கொரிய தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் மதுரையில் 2020-இல் நடைபெறும் உலகத்தமிழ் அமைப்புகள் மாநாட்டில் கலந்துகொள்ள உலக தமிழ்ச் சங்கத்தால் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொரிய தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் பேராசிரியர் செ. ஆரோக்யராஜ்
அங்கீகரிப்பட்ட பன்னாட்டு அறிவியலாளரும் கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான முனைவர் சு. இராமசுந்தரம் அவர்களும் இணைச்செயலாளர் பேராசிரியர் செ. ஆரோக்யராஜ் அவர்களும் இந்த வரலாற்று சிறப்புமிக்க இணைப்பிற்கான செயல்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.
இதுகாறும் தமிழ்சார் செயல்பாடுகளை அங்கீகரித்து மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தோடு இணைத்த தமிழ்நாடு அரசிற்கும் மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குனர் அவர்களுக்கும் கொரிய தமிழ்ச்சங்கம் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.